காலங்காலமாய் பேணப்பட்டு வரும் பாரம்பரிய தொழில்களையும் வர்த்தகங்களையும் கலாசாரத்தையும் பறைசாற்றும் வகையில் ‘லிட்டில் இந்தியா சாலை விழா’ மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்திய மரபுடைமை நிலையமும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கமும் (லிஷா) ஒன்றிணைந்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) கேம்பல் லேனில் இந்த ஒருநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
“பலர் பொருள்களை வாங்க லிட்டில் இந்தியாவிற்கு அடிக்கடி வருவர். ஆனால், இங்குள்ள கடைகளின் வரலாற்றைப் பற்றியோ இந்த வட்டாரத்தைச் செதுக்கியவர்களைப் பற்றியோ பலரும் அறிந்திருப்பதில்லை.
“அதை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சாலை விழாவிற்கு முதன்முறையாக ஏற்பாடு செய்தோம்,” என்றார் இந்திய மரபுடைமை நிலையத்தின் பொது மேலாளர் கிருத்திகா மகேந்திரன்.
இந்திய பாரம்பரியக் கொண்டாட்டங்கள் நெருங்கும் காலத்தில், லிட்டில் இந்தியா களைகட்டுவதைக் காணலாம். மற்ற மாதங்களிலும் லிட்டில் இந்தியாவைத் துடிப்புடன் வைத்திருக்கவும் இந்தியச் சமூகத்தினரை ஒன்றிணைக்கவும் இந்தியர் மரபைப் பறைசாற்றவும் சாலை விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்தகால நினைவுகள்
லிட்டில் இந்தியாவின் மரபையும் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு பெரிய கலைப் படைப்பு ஒன்று தற்காலிகமாக கேம்பல் லேனில் இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது.
அந்தக் காலத்தில் கேம்பல் லேனில் அமைந்திருந்த ‘பி.கோவிந்தசாமி பிள்ளை அண்ட் கோ’, ‘தண்டபாணி கம்பெனி’, ‘ஹனிபா’ போன்ற வணிகங்களின் முகப்பை வண்ண நிறங்களில் அந்தக் கலைப் படைப்புச் சித்திரிக்கிறது.
ஐம்புலன்களையும் பயன்படுத்தி, லிட்டில் இந்தியாவின் வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பையும் பல இலவச நடவடிக்கைகள் வழங்கின.
மயில், அன்னம் போன்ற இந்தியக் கலாசாரத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வடிவங்களில் அமைக்கப்பட்ட அச்சுக்கட்டுகள் மூலம் பைகளை அலங்கரித்தல், பூ கட்டுதல், கைவினைப் பொருள்களைச் செய்தல், கடைவீடு வடிவில் இருக்கும் கலைப் படைப்புகளை அலங்கரித்தல் போன்ற நடவடிக்கைகள் மக்களை ஈர்த்தன.
தம்முடைய அக்காவுடன் வந்திருந்த சிவனேஷ் லிங்கம், 15, லிட்டில் இந்தியாவைப் பற்றி இதற்கு முன்பு அறியாத பல தகவல்களைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
“ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை போன்ற கடைகள் பல்லாண்டுகாலமாக பூ தொடுக்கும் கலையைச் செய்து வருவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை எப்படி செய்வது, என்ன வகையான பூக்களைப் பயன்படுத்தலாம் என்பதையும் நான் இன்று கற்றுக்கொண்டேன்,” என்றார் உயர்நிலை 3 மாணவரான சிவனேஷ்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, மேடை நிகழ்ச்சிகளுக்கும் கலைப் படைப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கேம்பல் லேனில் இந்தியப் பாரம்பரிய நடனங்கள் மேடையேற்றப்பட்டதைக் கண்டவுடன், அவற்றைப் பார்க்க ஆவலுடன் வந்திருந்தார் இல்லப் பணிப்பெண்ணான ஶ்ரீதேவி, 51.
“குச்சிப்புடி, ஒயிலாட்டம், கர்பா போன்ற பாரம்பரிய நடனப் படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அத்துடன், அந்தக் காலத்துக் சிற்றுண்டிக் கடைகளையும் ‘கச்சாங் புத்தே’ கடைகளையும் பொம்மை வீடுகள்போல சிறிய அளவிலான மாதிரி வடிவங்களில் காட்சிக்கு வைத்திருந்தது அருமை.
“வருங்காலத் தலைமுறையினருக்கு அன்றைய லிட்டில் இந்தியாவை இது கண்முன் கொண்டு வருகிறது,” என்று கூறிய ஸ்ரீதேவி, இவ்விழா மலரும் நினைவலைகளைத் தூண்டியதாகப் பகிர்ந்தார்.
விழாவின் மற்றோர் அங்கமாக, இந்திய மரபுடைமை நிலையத்தின் பங்காளியான நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து, லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் டௌண்டவுன் பாதையிலிருந்து வடகிழக்கு பாதைக்குச் செல்வோருக்குப் பூமாலைகள் வழங்கப்பட்டன.
“பூமாலை வழங்குவதால், பயணிகள் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சற்று விடுபட்டு சாலை விழாவில் கலந்துகொண்டு கொண்டாட்ட உணர்வில் திளைப்பர் எனும் ஆசையுடன் நாங்கள் இதற்கு ஏற்பாடு செய்தோம்,” என்றார் திருமதி கிருத்திகா.
பாரம்பரியமும் நவீனமும் கைகோப்பு
லிட்டில் இந்தியா வர்த்தகத்தைப் பிரதிபலிக்கும் நிறுவனங்களும் இந்தியக் கலாசாரத்தை முதன்மையாகக் கொண்டு இயங்கும் வணிகங்கள் மரபுடைமைச் சந்தையில் இடம்பெற்றன.
அங்கு இடம்பெற்றிருந்த குறிப்பிட்ட வணிகங்களைத் தேர்ந்தெடுக்க ‘தேக்காடாட்எஸ்ஜி’ இணையத்தளம் உதவியது.
“அந்தக் காலத்தில், பல வணிகங்கள் லிட்டில் இந்தியாவில் செயல்பட்டன. அவற்றைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பது எங்கள் இலக்குகளில் ஒன்றாகும். அதே நேரம், அதே துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தற்போதைய சிங்கப்பூரர்களின் வணிகங்கள் எவ்வாறு பரிணமித்துள்ளன என்பதையும் வெளிகாட்ட வேண்டும்,” என்று ‘தேக்காடாட்எஸ்ஜி’ நிறுவனர் குமரவேலு பழனிவேலு, 44, கூறினார்.
இந்தியர்களின் சருமத்திற்கேற்ற முக ஒப்பனைப் பொருள்களை வடிவமைக்கும் ‘கலித்தியா’ (Calithea) அந்த வணிகங்களில் ஒன்று.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு ‘கலித்தியாவை’ தொடங்கியதாகச் சொன்ன சத்தியா பிரியா, 33, இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒரு தொழில்முனைவராகத் தம்மைப் பெரிதும் ஊக்குவிப்பதாகக் கூறினார். பல வாடிக்கையாளர்களோடு பேசுவதற்கான வாய்ப்பு தமக்குக் கிட்டியதையும் அவர் சுட்டினார்.
“அன்றைய லிட்டில் இந்தியாவையும் இன்றைய லிட்டில் இந்தியாவையும் ஒப்பிட முடிந்தது. பின்னோக்கிப் பார்ப்பதையும் தாண்டி, முன்னோக்கிப் பார்க்கும்போது, இளம் சிங்கப்பூரர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சிந்திக்கவும் இந்த விழா தூண்டியது,” என்றார் குமாரி பிரியா.
அதுமட்டுமன்றி, சிங்கப்பூரின் தொடக்கக் காலத்திலிருந்து நிலைத்து வரும் பன்முகக் கலாசாரத்தை இச்சந்தைப் பறைசாற்றியது.
எடுத்துக்காட்டாக, இந்திய, மலாய், பிராணக்கான் சமையல் முறைகள் சங்கமிக்கும் இனிப்புப் பலகாரங்களான ‘புலுட் இந்தி’ (Pulut Inti), ‘புலுட் இதாம்’ (Pulut Hitam) போன்றவற்றை சந்தையில் இருந்த ஒரு கடை விற்பனை செய்தது.
“மரபு என்பது பழங்காலத்தோடு நின்றுவிடாது என்பதை மக்களிடம் உணர்த்துவதே எங்கள் நோக்கம். காலத்திற்கேற்ப அது மாறிக்கொண்டே இருக்கும்; சிங்கப்பூர் அடையாளத்தில் என்றென்றும் பங்கு வகிக்கும்,” எனும் கருத்தைப் பதிவுசெய்தார் லிஷா தலைவர் ரெகுநாத் சிவா.


