சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினரிடையே அதிகரித்துவரும் இதய நோய்

சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினரிடையே அதிகரித்துவரும் இதய நோய்

2 mins read
d752ce27-c109-4fce-b50c-c04f3530347d
‘டிரைடென்ட் ஹார்ட் சென்டர்’ நிறுவனரும் மருத்துவ ஆலோசகருமான பினாகின் விஜய்குமார் பரேக். - படம்: திரு பினாகின் விஜய்குமார் பரேக்

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய சமூகத்தினரிடம் இதய நோய்களின் தாக்கம் அண்மைக் காலமாக அதிகரித்துவருவது கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

மற்ற இனத்தவர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களிடையே பொதுவாகக் காணப்படும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை இதய நோய் ஏற்படுவதற்கான சாத்தியத்தைப் பன்மடங்கு அதிகரிக்கின்றன.

“உடல் தோற்றத்தை வைத்து ஒருவருக்கு இதய நோய் வராது என்று தீர்மானிக்க முடியாது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி அல்லாத வாழ்க்கை முறை, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாதவிடாய் நிற்றல், மரபணு ரீதியான காரணம் ஆகியவையால் பல வகை இதய நோய்கள் இந்தியர்களைப் பாதிக்கின்றன,” என்று எச்சரித்தார் இருபது ஆண்டுகால அனுபவம் கொண்ட இதய சிகிச்சை நிபுணரும் ‘டிரைடென்ட் ஹார்ட் சென்டர்’ நிறுவனருமான மருத்துவ ஆலோசகர் பினாகின் விஜய்குமார் பரேக்.

இதய ஆரோக்கியத்தைப் பேண, 40 வயதில் முதன்முறையாக இதயப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது அவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார். இந்திய சமூகத்தினரிடையே மிகவும் பொதுவாகக் காணப்படுவது ‘காரனரி ஆர்ட்டரி டிசிஸ்’ (Coronary Artery Disease) எனும் இதய நோயாகும். இது இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது.

மற்றொன்று, அரித்மியா (Arrhythmia). அதில் இதயம் மிக வேகமாக அல்லது மிக மெதுவாகத் துடிக்கக்கூடும். மேலும், இதயத் தசைகள் பலவீனமடைந்து ரத்தத்தைச் சரியாக இறைக்க முடியாமல் போகும். இதயச் செயலிழப்பு அல்லது பிறப்பில் ஏற்படும் இதய வால்வுக் கோளாறுகள் போன்றவையும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

‘டிரைடென்ட் ஹார்ட் சென்டர்’ நிறுவனரும் மருத்துவ ஆலோசகருமான பினாகின் விஜய்குமார் பரேக்.
‘டிரைடென்ட் ஹார்ட் சென்டர்’ நிறுவனரும் மருத்துவ ஆலோசகருமான பினாகின் விஜய்குமார் பரேக். - படம்: திரு பினாகின் விஜய்குமார் பரேக்

ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவும் அதிகரிக்கும்போது, அந்தப் பாதிப்புகள் தீவிரமடைந்து மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை உருவாக்குகின்றன.

எனவே, இதய நோய்க் குறித்துப் போதிய விழிப்புணர்வை வளர்த்துக்கொண்டு, நம் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டியது கட்டாயம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்