இந்திய மரபுடைமை நிலையத்தின் காட்சிக்கூடங்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளன.
தனது 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையிலும் அதன் நிரந்தரக் காட்சிக்கூடங்களின் புதுப்பித்தல் பணிகளுக்கு நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
இவற்றை செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்.
கடந்த 2015ல் திறக்கப்பட்ட நிலையத்தின் நிரந்தர காட்சிக்கூடங்களில் உள்ள கலைப்பொருள்கள் முதன்முறையாக பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதுப்பித்தல் திட்டத்தில் 60 புதிய கலைப்பொருள்கள் இரு கட்டங்களாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மார்ச் மாதத்தில் 30 கலைப்பொருள்களும், செப்டம்பரில் எஞ்சியுள்ள 30 பொருள்களும் காட்சிக்கு வைக்கப்படும்.
“தேசிய தொகுப்பில் உள்ள பல்வேறு கலைப்பொருள்களைக் காட்சிக்கு வைத்துள்ளோம். இவற்றில் சில அரிய பொருள்கள் பொதுமக்கள் பார்வைக்கு முதன்முறையாக வைக்கப்பட்டுள்ளன,” என்றார் இந்திய மரபுடைமை நிலையத்தின் துணைக்காப்பாளர் பா. லிவிண்யா.
இந்திய மரபுடைமை நிலையத்தின் ஐந்து நிரந்தரக் காட்சியகங்களின் கருப்பொருள்களுடன் ஒத்துப்போகும் பொருள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். காலனித்துவ ஆட்சிக்கு முந்தைய வர்த்தகம் முதல் சுதந்திரத்துக்குப்பின் தேசத்தின் வளர்ச்சி வரையிலான வரலாற்றை இவை எடுத்துரைக்கின்றன.
முதல் கட்டத்தில், தொடக்கக்கால கடல் வணிகம், பண்பாட்டுப் பரிமாற்றங்கள், சிங்கப்பூரின் இந்திய, தெற்காசிய சமூகங்களின் தனித்துவமான பாரம்பரியம் முதலியவற்றை எடுத்துக்காட்டும் துணிகள், அணிகலன்கள், சடங்கு பொருள்கள் முதலியவை இம்மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
நிலையத்தில் இடம்பெறும் முக்கிய கலைப்பொருள்களில், 1800களில் மசூலிப்பட்டினத்தில் உருவாக்கப்பட்ட சுவரில் தொங்கும் அரிய கலம்காரி துணி (Masulipatnam Kalamkari Hanging) ஒன்றாகும். அதில் இயற்கைச் சாயங்களைக் கொண்டு கையால் வரையப்பட்ட வெவ்வேறு வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.
“இந்தத் துணி, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவரும் சிறப்பான கைத்தொழிலையும் பண்பாட்டுப் பரிமாற்றங்களையும் வெளிப்படுத்துகிறது,” என்று லிவிண்யா கூறினார்.
அதில் காணப்படும் தங்க அலங்காரங்களுடன் கூடிய தாமரைப்பூ வடிவங்கள், உலகெங்கும் வாழும் இந்தியர்களால் மதிக்கப்படும் மரபை எடுத்துக்காட்டுகின்றன.
இந்தப் புதுப்பிப்பின் இன்னொரு சிறப்பு அம்சமாக, தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட 30 நவராத்திரி களிமண் கொலு பொம்மைகள் படிகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
“பொம்மைகளின் கண்கவர் நிறங்களும் செம்மையாக அடுக்கப்பட்ட விதமும் பார்வையாளர்களை, குறிப்பாக இளம் வருகையாளர்களைக் கவரும் என்று நம்புகிறோம்,” என்றார் லிவிண்யா.
செப்டம்பர் மாதத்தில் இத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் இடம்பெறவுள்ளது. அதில் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு, முன்னோடி இந்தியச் சமூகம் ஆற்றிய பங்கு, இரண்டாம் உலகப்போரின்போது இந்தியர்களின் அனுபவங்கள், இந்திய மரபுடைமை நிலையத்தின் பாரம்பரிய கட்டடக்கலை முதலியவை ஆராயப்படும்.
தேசிய தொகுப்பிலிருந்து எடுத்துவரப்பட்டிருக்கும் கலைப்பொருள்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்படுமுன் பாதுகாவலர்களால் நுண்ணாய்வு மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என தேசிய மரபுடைமை வாரியத்தின் சேகரிப்புகள், கண்காட்சிகள் மேலாளர் தான்யா சிங் கூறினார்.
கலைப்பொருள்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சரிபார்ப்பது, தேவையான மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது, சீர்கெடாமல் தடுக்க கட்டுப்படுத்தப்பட்ட வெளிச்சம், ஈரப்பத நிலைமைகளில் அவற்றைப் பொருத்துவது முதலிய பணிகளும் மேற்கொள்ளப்படும்.
“எடுத்துக்காட்டாக, இரண்டு மீட்டர் நீளமான கலம்காரி துணிக்காகத் தனிப்பட்ட அக்ரிலிக் ஆதரவுத் தூண்கள் (custom acrylic mounts) வடிவமைக்கப்பட்டன.
இடப்பற்றாக்குறையைச் சமாளிக்க, கொலு பொம்மைகளுக்கான மூன்று மீட்டர் உயரமான மேடை வடிவமைப்பு, சீரமைக்கக்கூடிய அடுக்குகளுடனும் மிதமான வெளிச்சத்துடனும் அமைக்கப்பட்டன,” என்றார் தான்யா.
கலைப்பொருள்களைப் பாதுகாப்பான முறையில் காட்சிப்படுத்துவது மட்டுமன்றி பார்வையாளர்களின் அனுபவத்தையும் அதனோடு சமநிலைப்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சொன்னார்.
பள்ளி மாணவர்கள் முதல் பண்பாட்டு ஆர்வலர்கள் வரை பல்வேறு தரப்பினரையும் ஈர்க்கும் நோக்கத்துடன் புதிய மின்னிலக்க உள்ளடக்கங்களும் இருவழித்தொடர்பு அங்கங்களும் புதுப்பிக்கப்பட்ட நிலையத்தில் இடம்பெறுகின்றன.
“புதிய கலைப்பொருள்களை அறிமுகப்படுத்துவதன்மூலம், சிங்கப்பூரின் பன்முக அடையாளத்துக்கு முக்கியப் பங்காற்றும் இந்திய மரபுடன் பார்வையாளர்கள் மேலும் ஆழமாக தொடர்புகொள்வார்கள் என்று நம்புகிறோம். மேலும், அவர்களது சொந்த குடும்ப, பண்பாட்டு மரபுகளை ஆராயவும் அவர்களுக்கு ஓர் உந்துதலை அளிக்கும் என்று நம்புகிறோம்,” என்று லிவிண்யா கூறினார்.
புதுப்பிக்கப்பட்ட இந்திய மரபுடைமை நிலையத்தின் காட்சிக்கூடங்கள் நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். நுழைவுக் கட்டணம் உண்டு.
மேல் விவரங்களுக்கு www.indianheritage.gov.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.