சிங்கப்பூரில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் காலத்துக்கு ஏற்ப எவ்வாறு மாறியுள்ளன என்பதை நினைவுகூர்வதுடன், தொன்றுதொட்டு வரும் மரபுகளின் சிறப்பை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்திய மரபுடைமை நிலையத்தின் தீபாவளிப் பொது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அக்டோபர் 17 முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் அந்நிகழ்ச்சியில், பழைய தீபாவளிக் கொண்டாட்டங்களை நினைவூட்டும் அலங்காரங்கள், புகைப்படங்கள், பாரம்பரிய ஆடைகள் போன்றவற்றைப் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.
“ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியைக் கொண்டாடுகிறோம். ஆனால், அந்தக் கொண்டாட்டம் ஆண்டுதோறும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கடந்த கால நினைவுகளையும் இன்றைய தீபாவளிக் கொண்டாட்டங்கள் எவ்வாறு மாறியுள்ளன என்பதையும் ஆராய விரும்பினோம். அதேவேளையில், பலரும் இந்திய மரபுடைமை நிலையத்துக்கு வருகை தர வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம்,” என்றார் இந்திய மரபுடைமை நிலையத்தின் பொது மேலாளர் கிருத்திகா மகேந்திரன்.
நிகழ்ச்சியில், சமூகத்தினரால் வழங்கப்பட்ட பாரம்பரியப் பட்டுச் சேலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தலைமுறை தலைமுறையாகக் குடும்பங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் அச்சேலைகள், அவற்றுடன் தொடர்புடைய தனிப்பட்ட நினைவுகளையும் குடும்பக் கதைகளையும் எடுத்துரைக்கின்றன.
சிங்கப்பூரில் ரெட் ரிவர் கிரியேஷன்ஸ் (Red River Creations) என்ற பெயரில் சேலை விற்பனைத் தொழில் நடத்திவரும் பிரியம் சஹாரியாவும் தமது சேலைகளில் சிலவற்றைக் காட்சிக்கு வைத்துள்ளார்.
“இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நெசவு மரபுகளைப் பிரதிபலிக்கும், எடை குறைந்த சேலைகளை அறிமுகப்படுத்தியுள்ளேன். இளம் தலைமுறையினர் சேலையை விரும்பி அணிவதுடன், அவற்றின் பாரம்பரியச் சிறப்பைப் புரிந்துகொண்டு, பெருமை கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்றார் அவர்.
முற்காலத் தீபாவளிச் சூழலை அனுபவிக்கும் வகையில், பழங்காலப் புகைப்படப் பின்னணியில் படம் எடுத்துக்கொள்ளவும் பாரம்பரிய உடைகளை அணிந்து பார்க்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறிய இனிப்புப் பெட்டிகளைத் தாங்களே அலங்கரித்தல், மயில் வடிவங்களைக் கொண்ட களிமண் அலங்காரப் பொத்தான்களுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற கைவினை நடவடிக்கைகளிலும் பார்வையாளர்கள் பங்கேற்கலாம்.
பொது வரவேற்பு நிகழ்ச்சிக் காலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்திய மரபுடைமை நிலையம் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். நிலையத்தின் வெளிப்புறப் பகுதியில் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இரண்டாவது தளத்தில் பாரம்பரிய அழகுச்சாதனப் பொருள்கள், கைவினைப் பொருள்கள், சேலைகள் ஆகியவற்றை வாங்குவதற்கான வசதியும் உள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய நுண்ணோவியக் கலையை அறிமுகப்படுத்தும் பயிலரங்குகளும் வட இந்திய, தென்னிந்திய பிரியாணி வகைகளைச் சமைக்கக் கற்றுத்தரும் சமையல் வகுப்புகளும் கட்டண அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
