மெண்டாக்கியின் புதிய திட்டங்கள்வழி இந்திய முஸ்லிம் சமூகத்தினர் பயன்பெறலாம்

3 mins read
ea1edf28-24f9-49e5-b710-3636973681be
ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்ற ‘மெண்டாக்கி 2030’ செயல்திட்ட ஊடக மாநாட்டில் (இடமிருந்து) மெண்டாக்கி தலைமை நிர்வாக அதிகாரி ஃபெரோஸ் அக்பர், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் இணைப் பேராசிரியர் டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், மெண்டாக்கி தலைவரும் மூத்த துணையமைச்சருமான ஸாக்கி முகம்மது. - படம்: பெரித்தா ஹரியான்

மெண்டாக்கி வெளியிட்டுள்ள 2030ஆம் ஆண்டுக்கான ஐந்தாண்டுச் செயல்திட்டத்தின்கீழ், சிங்கப்பூரில் வாழும் இந்திய முஸ்லிம் சமூகத்தினர் கல்வி, குடும்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஆதரவு திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தச் செயல்திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக கல்வி உதவித்தொகைகளும் நிதியுதவிகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், மெண்டாக்கி வழங்கும் உதவித்தொகைகள், நிதியுதவி ஆண்டுதோறும் 25 விழுக்காடு அளவில் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு ஏறத்தாழ 30 கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

“தரமான உயர்கல்வியும் எதிர்காலத் திறன்களும் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதன் பயன் இந்திய முஸ்லிம் மாணவர்கள் உட்பட அனைத்து முஸ்லிம் மாணவர்களையும் சென்றடையும்,” என்று மெண்டாக்கி தலைமை நிர்வாக அதிகாரி ஃபெரோஸ் அக்பர் தெரிவித்தார்.

பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கு கடல்சார், பொறியியல் துறைகளில் ஆதரவளிக்க, ஜனவரி மாதம் ‘குளோபல் ரேடியன்ஸ் குரூப்’ கடல் போக்குவரத்து நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதில் அடங்கும்.

செயற்கை நுண்ணறிவு, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) துறைகளில் புலமைப்பரிசில்கள், நிதியுதவிகளை விரிவுபடுத்த கல்வியாளரும் தொழில்நுட்பத் தொழில்முனைவோருமான ஜுசர் மோத்திவாலாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமும் இடம்பெறுகிறது.

புதிய செயல்திட்டத்தின்கீழ், முன்பு ‘மெண்டாக்கி துணைப்பாடத் திட்டம்’ என அழைக்கப்பட்ட ‘மெண்டாக்கி சாதனைத் திட்டத்தில்’ (MAP) இந்திய முஸ்லிம் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இருப்பினும், ‘ரெடி செட் லேர்ன்’ (ReadySetLearn) திட்டத்தின் ‘மொழி ஆய்வாளர்’ (Language Explorer) பகுதி இதில் சேர்க்கப்படவில்லை.

ஆங்கிலத்தில் நடத்தப்படும் ‘ரெடி செட் லேர்ன்’ பெற்றோர் திட்டம், வேலைவாய்ப்பு துறைக்கான ‘ரெடி அட் வொர்க்’ திட்டம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘விமன் அட் வொர்க்’ திட்டம் ஆகியவற்றிலும் இந்திய முஸ்லிம் சமூகத்தினர் பங்கேற்கலாம்.

ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்ற செயல்திட்ட ஊடக மாநாட்டில் உரையாற்றிய மெண்டாக்கி தலைவரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது, கல்வி மெண்டாக்கியின் பணிகளின் மையமாகக் கல்வி தொடர்ந்து திகழும் எனக் குறிப்பிட்டார்.

‘மெண்டாக்கி 2030’ செயல்திட்டம் தன்னம்பிக்கை கொண்ட மலாய்/முஸ்லிம் மாணவர்கள், வலுவான குடும்பங்கள், எதிர்காலத்திற்குத் தயாராகும் பணியாளர்கள், செழிப்பான சமூகம் என்ற நான்கு முக்கிய இலக்குகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரான இணைப் பேராசிரியர் டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், அரசுத் துறைகள், சமூக அமைப்புகள், பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதன்மூலம் சமூக முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்று கூறினார்.

தற்போது ஏறக்குறைய 35,000 மாணவர்களுக்கு ஆதரவு வழங்கி வரும் மெண்டாக்கி சாதனைத் திட்டம், செறிவூட்டல், தொழில் வழிகாட்டல் அம்சங்களுடன் மேம்படுத்தப்படுகிறது. பள்ளி விடுமுறைக் காலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எந்திரனியல் (Robotics), தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயல்பாடுகள், கல்வி, தொழில் பாதை அறிமுகங்கள் இடம்பெறும்.

‘ரெடி அட் வொர்க்’ திட்டத்தின்கீழ் திறன் மேம்பாடு, மின்னிலக்க அறிவுப் பயிற்சி, தொழில் வழிகாட்டல் சேவைகள் வழங்கப்பட்டு, வேலைச் சந்தையின் மாற்றங்களை எதிர்கொள்ள சமூகத்தினர் தயார்ப்படுத்தப்படுவர்.

‘மெண்டாக்கி 2030: ஒவ்வோர் அடியிலும் உங்களுடன்’ என்ற முழக்கத்துடன், மலாய்–முஸ்லிம் சமூகத்தையும் அதனுள் உள்ள இந்திய முஸ்லிம் பிரிவையும் கல்வி, குடும்ப வளர்ச்சி, வேலைவாய்ப்புத் திறன், சமூகப் பிணைப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து ஆதரிக்க மெண்டாக்கி முனைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்