புத்தாண்டைப் புதிய திட்டங்களுடன் வரவேற்கும் இந்திய அமைப்புகள்

3 mins read
2e7fa9ea-f31d-42a9-91f0-73f92b84094a
இந்திய அமைப்புகள் புத்தாண்டை பல புதிய திட்டங்களுடன் வரவேற்கவுள்ளன. - படம்: தமிழ் முரசு

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள், புத்தாண்டை மாற்றத்திற்கான ஆண்டாகக் கருதுகின்றன. தமிழ்மொழி, கலை, கலாசாரத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதே 2026ஆம் ஆண்டில் அவர்களின் முதன்மை நோக்கமாக உள்ளது.

இளையர்களின் மொழி ஆற்றலை வளர்க்க

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், புதிய ஆண்டை வழக்கமான நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு புதுமையான பாணியில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, 18 வயதுக்குக்கீழ் உள்ள மாணவர்களின் பேச்சாற்றலை மெருகேற்ற புதிய மன்றம் ஒன்றை கழகம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் தமிழ் பேச்சாளர் மன்றங்களில் பங்கேற்கும் இளையர்களைத் தாண்டி வரும் தலைமுறையினரை ஊக்குவிக்க இந்தப் புதிய முயற்சி என்று கழகத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் முத்துசாமி, 77, தெரிவித்தார்.

திட்டங்களுக்கு வலுசேர்ப்பது

தற்போதுள்ள திட்டங்களை மேம்படுத்துவதோடு சமூகத்தை உயர்த்துவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் மாற்றங்களை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றை சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கம் (சிண்டா) 2026ல் நோக்கமாகக் கொண்டுள்ளதாக சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.

கல்விச் சிறப்பையும் தாண்டி மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துதல், முழுமையான ஆதரவின் மூலம் இளையர்களின் வெற்றியை ஊக்குவித்தல், குடும்பங்கள் செழிக்க ஆதரித்தல் ஆகியவை முக்கிய நோக்கங்களில் அடங்கும்.

தமிழ்மொழி விழாவின் ஆண்டுவிழா

இந்த ஆண்டு தமிழ்மொழி விழாவிற்கு 20வது ஆண்டுவிழா என்பதால் புத்தாண்டை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி, 67, கூறினார்.

புதிய நிகழ்ச்சிகள் தொடக்கம்

இந்த ஆண்டு தமிழர் பேரவைக்கு மிக முக்கியமான ஆண்டு எனக் குறிப்பிட்டார் தலைவர் வெ. பாண்டியன், 64.

2026ஆம் ஆண்டு தமிழர் பேரவைக்கு 75வது ஆண்டுவிழா என்பதால் செப்டம்பர் மாதத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதாகவும் திரு பாண்டியன் சொன்னார்.

மேலும், சிறப்பாகச் செய்யும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகாரச் சம்பள விருது ஈராண்டுகள் கழித்து மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதையடுத்து பிப்ரவரி மாதத்தில் தமிழ்மொழி புழக்கத்தை அதிகரிக்க ‘தாய்மொழி தினம்’ என்ற ஒரு நாளைக் கொண்டாடவுள்ளதாகவும் பகிர்ந்துகொண்ட திரு பாண்டியன், தமிழர் பேரவை சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்துடன் இணைந்து தமிழ்மொழி ஆர்வத்தை வளர்க்க ஒரு நாள் மாநாடு நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதோடு, தமிழர் பேரவை இந்த ஆண்டு முன்னோடியாக தொடங்கிய ‘மனித நூலகம்’ எனும் திட்டத்தை நிரந்தரமாக்கவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மேற்கல்வி பயிலும் மாணவர்கள் கலை, இசை, சமூக சேவை, அரசியல் போன்ற துறைகளில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம் என்றும் திரு பாண்டியன் சொன்னார்.

உடல் ஆரோக்கியம் மீது கவனம்

இந்தியச் சமூகத்தில் நீரிழிவும் இதயம் தொடர்பான நோய்களும் பரவலாக இருப்பதால் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த டான் டோக் செங் மருத்துவமனையுடன் இணைந்து ரத்தக் குழாய் ஆய்வை நற்பணிப் பேரவை நடத்தவுள்ளதாக அதன் தலைவர் ரவீந்திரன் கணேசன், 55, குறிப்பிட்டார்.

வழக்கமாக ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு மூன்று குழுத்தொகுதிகளுடன் இணைந்து தமிழ் எழுத்தாற்றலையும் தமிழ் இதழியல் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகளையும் நடத்த நற்பணிப் பேரவை திட்டமிட்டுள்ளது.

இளையர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்தியச் சமூகத்தில் இந்திய இளைய தலைவர்களை உருவாக்க திட்டங்கள் கொண்டுவர முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்த திரு ரவீந்திரன், நற்பணிப் பேரவை அதன் பேச்சாளர் மன்றம் மூலம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் பேச்சுத் தமிழை வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

நல்லிணக்கத்தின் மேல் நோக்கம்

‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பின் தலைவர் முஹம்மது இர்ஷாத், 36, புத்தாண்டில் இளையர்களை மையமாக வைத்து பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பகிர்ந்துகொண்டார்.

“எங்களது ‘ஹார்மோனி ஆஃப் சாம்பியன்ஸ்’ திட்டம் மீண்டும் மூன்றாவது முறையாகத் தொடரவுள்ளது. மேலும், நிறுவன அமைப்பில் சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்க இளையர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார் திரு இர்ஷாத்.

பண்பாடுகளுக்கு இடையிலான பரிமாற்றங்கள்

சிங்கப்பூர்த் தமிழ் பண்பாட்டு மையம் ‘ஒரு கலைஞரின் வாக்குமூலம்’ எனும் தலைப்பில் 10 மூத்த தமிழ் கலைஞர்களின் நேர்காணல்களை 10 பகுதிகள் கொண்ட காணொளித் தொடராக வெளியிடவிருக்கிறது.

மேலும், சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றிய முழுமையான வரலாற்றையும் விமர்சனத்தையும் ஒரு நூலாக வெளியிட மூன்றாண்டு கால திட்டத்தை முன்வைப்பது பற்றி மையம் ஆய்வு நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்