போக்குவரத்து அமைச்சரும், நிதி இரண்டாம் அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் மெண்டாக்கியின் புதிய வழிகாட்டுதல் திட்டமான ‘மெக்கார் பெலியா’ (Mekar Belia) திட்டத்தை அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற மெண்டாக்கி விருது விழாவில் அறிவித்தார்.
இளையர்கள் தங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்தி, புதிய சாத்தியக்கூறுகளை ஆராயத் தயாராக இருக்கும் நிலையில், மேலும் சிலருக்குத் தங்களின் தடைகளை முறியடித்து அடித்தளத்தை வலுப்படுத்திக் கொள்ள ஆதரவு தேவைப்படுகிறது.
மெண்டாக்கியின் அர்ப்பணிப்பு இந்த இரு தரப்பினருக்கும் உரியதாகும். பொருளியல் சூழல் காரணமாக எந்தவோர் இளையரும் தங்களின் கல்வியையோ குறிக்கோள்களையோ என்றும் கைவிடக் கூடாது என்று விழாவில் பேசியபோது அமைச்சர் கூறினார்.
1982ஆம் ஆண்டு முதல், மெண்டாக்கியின் வருடாந்தர விருதளிப்பு விழா, தேசியத் தேர்வுகளில் சிறந்து விளங்கிய, பல்வேறு கல்வி நிலைகளில் தலைசிறந்த கல்விச் சாதனைகளைப் புரிந்த மாணவர்களை அங்கீகரித்து வருகிறது.
தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) முதல் உயர்கல்வி நிறுவனங்கள் வரை பயிலும் திறமையான இளையர்களின் கடின உழைப்பு, மீள்திறன், ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
சென்ற ஆண்டு மொத்தம் 529 விருதுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டு மெண்டாக்கி விருது விழாவில் 683 மாணவர்கள் விருதுகளைப் பெற்றனர்.
பல்கலைக்கழகங்களில் முதல் வகுப்புச் சிறப்பு நிலை அல்லது அதற்கு நிகரான தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைச் சிறப்பிக்கும் உயரிய ‘அனுகுரா செமர்லாங் மெண்டாக்கி’ விருதினை 107 பேர் பெற்றனர்.
கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் அர்ப்பணிப்பு
இந்த ஆண்டு அனுகுரா செமர்லாங் மெண்டாக்கி விருதினைப் பெற்றுக்கொண்டவர்களில் 24 வயதான இந்தியர், தஹ்மினா சுல்தானுல் ஆரிஃப்பும் ஒருவர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் (SMU) கணக்கியல் இளநிலைப் பட்டமும், மின்னிலக்க வர்த்தகத்தில் இரண்டாவது சிறப்புப் பட்டமும் பெற்ற இவர், கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.
“மெண்டாக்கி, மலாய் மாணவர்களை மட்டுமல்லாமல், இந்திய முஸ்லிம் மாணவர்களையும் அங்கீகரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் சிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் சமூகத்தின் எண்ணிக்கை மிகவும் சிறியது. ஓர் இந்திய முஸ்லிமாக எனது சமூகத்தைப் பிரதிநிதிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது போன்ற அங்கீகாரங்கள் மாணவர்களை மேலும் கடினமாக உழைக்கத் தூண்டும் என்று நம்புகிறேன்,” என்றார் தஹ்மினா.
மருத்துவ உயிரியல் தொழில்நுட்பத் துறையில் ஆர்வம்
இவ்வாண்டு அனுகுரா மெண்டாக்கி விருதைப் பெற்றுக்கொண்ட மற்றோர் இந்திய மாணவர் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மருத்துவ உயிரியல் தொழில்நுட்பத் துறையில் சிறப்புத் தகுதியுடன் பட்டயப்படிப்பை நிறைவுசெய்த ஷம்சுபஹுருதீன்.
“மருத்துவ உயிரியல் தொழில்நுட்பத் துறையை நான் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம், அறிவியலின்மீது எனக்கு இருக்கும் ஆர்வம். இந்த விருது, சமூகத்திற்கும் என் சொந்த முன்னேற்றத்திற்கும் மேலும் பல நல்ல காரியங்களைச் செய்யவும், தொடர்ந்து அர்ப்பணிப்போடு செயல்படவும் ஊக்கப்படுத்துகிறது,” என்றார் 21வயதான ஷம்சுபஹுருதீன்.
