தன் சொந்த சவால்களையும் தாண்டி, சமூகத்தைப் பற்றியும் சிந்திக்கிறார் சிண்டா தொண்டூழியர் சித்தாரா அனில், 21.
சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் (Real-time Interactive Simulation) பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் சித்தாரா பல்கலைக்கழகப் படிப்புடன் பகுதிநேர வேலைகளையும் செய்கிறார்.
அப்படியிருந்தும், கிடைக்கும் நேரங்களில் சிண்டா மூலம், முதியோரின் இல்லங்களைச் சுத்தப்படுத்தி, சாயம் பூசிப் புதுப்பொலிவூட்ட உதவுகிறார். பண்டிகைக் காலங்களில் அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தித் தாமும் மனநிறைவடைகிறார்.
அவரது அயராத உழைப்புக்கு அங்கீகாரமாக, சனிக்கிழமை (நவம்பர் 1) சிராங்கூன் கார்டன்ஸ் கன்ட்ரி கிளப்பில் நடந்த 12வது சிண்டா இளையர் விருது விழாவில் அவருக்கு ‘அர்ப்பணிப்பு’ விருது கிடைத்தது.
சித்தாரா உட்பட, சிண்டா திட்டங்கள்மூலம் சிறந்த சுய வளர்ச்சி அடைந்தவர்களும் சமூகத்துக்குப் பங்காற்றியவர்களும் மொத்தம் 160 பேர் அவ்விருதுகளைப் பெற்றனர்.
“தன் குடும்பத்தின் நிதிச் சவால்களைக் காட்டிலும் சித்தாரா தம் இலக்குகளைக் கைவிடவில்லை,” எனப் பாராட்டினார் சிண்டாவின் தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன்.
“சிண்டா-சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக் கல்வி உதவித்தொகைமூலம் (bursary) அவர் பயனடைந்துள்ளார். சிண்டா-இந்தியர் வர்த்தக வட்டமேசை நிறுவன வழிகாட்டித் திட்டத்திலும் பங்கேற்று, கணினி அறிவியல் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் தன்னம்பிக்கையையும் பெற்றார். ஒரு நாள், மனநலச் சவால்களைச் சந்திக்கும் இளையர்களுக்கு உதவ விரும்புகிறார் சித்தாரா,” எனப் பாராட்டினார் திரு அன்பரசு.
பீட்டி உயர்நிலைப் பள்ளி மாணவர் பூவராகவனையும் தன் உரையில் பாராட்டினார் சிண்டாவின் தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன். “பூவராகவனின் பயணம் சிண்டாவின் ‘கேம்’ எனும் வழிகாட்டுதல் திட்டம்மூலம் தொடங்கியது. புகைப்படம் எடுத்தல் போன்ற திறன்களையும் அதன்மூலம் அவர் வளர்த்துள்ளார்,” என்றார் திரு அன்பரசு.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு, சிண்டா இளையர் விருதுகளின் கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தலைமைத்துவம், அர்ப்பணிப்பு, நண்பர் அங்கீகாரம், சேவை ஆகிய புதிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
சிண்டா, தேசிய அளவில் பல அமைப்புகளுடனும் வலுவான பங்காளித்துவங்களை ஏற்படுத்திவருவதாகவும் கூறினார் திரு அன்பரசு. “தேசிய இளையர் மன்றம், தொழில்நுட்பக் கல்விக்கழகம் போன்றவை இளையருக்காகப் பல நல்ல திட்டங்கள் வைத்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, நம் இளையர்கள் தம் தலைமைத்துவத்தையும் சமூக சேவை மனப்பான்மையையும் காண்பிக்கக் கூடுதல் தளங்களை ஏற்படுத்த விரும்புகிறோம்,” என்றார் அவர்.
சிண்டா - தேசிய இளையர் சாதனை விருது புதிய பங்காளித்துவம்
“நம் இந்திய இளையர்களின் சேவை இந்தியச் சமூகத்துடன் நின்றுவிடக்கூடாது; சிங்கப்பூரர் எனும் நம் தேசிய அடையாளத்துக்குப் பங்காற்றும் இளம் தலைவர்களாக அவர்கள் திகழ வேண்டும்,” என்றார் திரு அன்பரசு.
அதனால் சிண்டா, தேசிய இளையர் சாதனை விருதுத் திட்டத்துடன் புதிய பங்காளித்துவத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.
“தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் பங்கேற்று தம் சேவையையும் திறன்களையும் வளர்க்க அவர்களுக்கு இது வாய்ப்பாக அமையும்,” என்றார் திரு அன்பரசு.
1992ல் தொடங்கப்பட்ட தேசிய இளையர் சாதனை விருதுத் திட்டம், மூன்று நிலைகளில் விருதுகள் வழங்குகிறது - தங்கம், வெள்ளி, வெண்கலம். தங்க விருதுக்கு, சேவைமூலம் கற்றல், வெளிப்புறத்தைப் பாராட்டுதல், ஆரோக்கிய வாழ்வு, சமூகத் தலைமைத்துவம் ஆகியவைத் தொடர்பான நடவடிக்கைகளில் 18 மாதங்களில் குறைந்தது 144 மணி நேரம் ஈடுபடவேண்டும்.
கடந்த ஒரு மாதமாக 30 சிண்டா இளையர்கள் இத்திட்டத்தில், தங்க விருது நிலையில் இணைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர்தான் சென்ற ஆண்டு சிண்டா இளையர் விருது விழாவில் தலைசிறந்தவராகத் தேர்வான ரக்ஷனா பாண்டியன், 20.
2018ல் சிண்டா ‘ஸ்டெப்’ துணைப்பாட வகுப்பில் சேர்ந்து, சிண்டாவின் ‘கேம்’ வழிகாட்டித் திட்டத்தில் பங்கேற்று, பின்பு நட்புத் தலைவராகவும் (Peer Leader) தன் சக இளையர்களுக்கு உதவுகிறார் ரக்ஷனா.
தேசிய இளையர் சாதனை விருதுத் திட்டத்தின்கீழ், தீபாவளிக்காக சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’வழி உதவி தேவைப்படுவோருக்கு அன்பளிப்புகள், பற்றுச்சீட்டுகள் விநியோகித்ததோடு சாவடிகள், நிகழ்ச்சிகள் நடத்தி மக்களை மகிழ்வித்தார் ரக்ஷனா. “நாம் அவர்களுக்காக ஒன்றைச் செய்யும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்; அப்போது நமக்கும் கூடுதலாகச் செய்யத் தோன்றும்,” என்றார் ரக்ஷனா.
சிண்டாவின் ‘கதவுத் தட்டும்’ பயிற்சியிலும் அவர் பங்கேற்று குடியிருப்பாளர்களின் குறைகள், தேவைகளை அறிந்துகொள்கிறார். “நான் இப்பயணம் மூலம் நிறைய கற்றுக்கொள்வேன். நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொன்றுக்கும் நாம் நன்றியுணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் உணர்கிறேன். இதை ஒரு வாழ்க்கைமுறையாக மாற்ற விரும்புகிறேன்,” என்றார் ரக்ஷனா, 20.
“நான் இந்த விருதுக்காக மட்டும் இதைச் செய்யவில்லை. நம்மால் இயன்றதை செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே செய்கிறேன்,” என்றார் ரக்ஷனா.
“வெவ்வேறு இனத்தவர், வெவ்வேறு பின்னணிகளைச் சார்ந்தவர்கள், வெவ்வேறு திறன் படைத்தவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் அவ்வளவு வேறுபட்டவர்கள் அல்லர் என்பதை அறிவீர்கள். ஓர் ஓரத்தில் ஒளியாதீர்கள்; வழிகாட்டிகளைத் தேடுங்கள்,” என்றார் சிறப்பு விருந்தினரான தேசிய இளையர் மன்றத் தலைமை நிர்வாகி டேவிட் சுவா.
பொதுவாக மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரர்கள் நிச்சயமற்ற தன்மையைக் கண்டு அதிகம் கவலைப்படுவதாகக் கூறும் ஆய்வுகளையும் அவர் சுட்டினார்.
“எந்த அளவு வகுப்பறைக் கற்றலும் வாழ்வின் சவால்களுக்கு உங்களைத் தயார்படுத்தாது. ஆனால் நீங்கள் நடவடிக்கைகளில், தேசிய அளவிலான திட்டங்களில் பங்குபெறும்போது வெவ்வேறு சூழல்களைச் சமாளிக்கக் கற்றுக்கொள்வீர்கள்,” என்றார் திரு சுவா.
பெற்றோரைத் தம் பிள்ளைகளின் சாதனைகளைப் பாராட்டவும் ஊக்கப்படுத்தினார் திரு அன்பரசு. “நீ நன்றாகச் செய்துள்ளாய், இனியும் நன்றாகச் செய்வாய்” எனும் மந்திரச் சொல்லைச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார் அவர்.

