சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள்தொகை ரத்த தானத்தைப் பாதிக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
சிங்கப்பூரில் ரத்த தானம் செய்பவர்கள் இந்தியாவிற்குச் சென்று வந்தால் 4 மாதங்களும், ஐரோப்பாவிற்குச் சென்று வந்தால் 4 வாரங்களும் ரத்த தானம் வழங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளன.
முன்னர், ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் ரத்தம் கொடுக்க முடியாது என்ற சட்டம் இருந்தது. ஆனால், இப்போது அச்சட்டம் மாற்றப்பட்டதை அடுத்து, உட்கொள்ளும் மருந்துக்கு மருத்துவர் ஒப்புதல் அளித்தால் ரத்த தானம் கொடுக்கலாம்.
ரத்த தானம் வழங்குவதற்குமுன், ஒரு சிறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ரத்தத்தில் ‘ஹீமோகுளோபின்’ அளவு துல்லியமாகச் சரிபார்க்கப்படுகிறது. உடலில் போதிய அளவு இரும்புச்சத்து இருப்பதை உறுதிசெய்ய இந்தப் பரிசோதனை அவசியம்.
ரத்தம் சேகரிக்கப்பட்ட பிறகு, நான்கு சோதனைக் குழாய்களில், ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுப் பல்வேறு விரிவான ஆய்வகப் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பாதுகாப்பான ரத்தம் நோயாளிகளுக்குச் சென்றடைவது முழுமையாக உறுதிசெய்யப்படுகிறது.
“ரத்த தானம் 10 நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் ‘அபெரெசிஸ்’ என்பது ‘டயாலிசிஸ்’ இயந்திரம் போன்றது. அது உடலிலிருந்து ரத்தத்தை எடுத்து, 'பிளேட்லெட்ஸ்’, ‘பிளாஸ்மா’ ஆகியவற்றைப் பிரித்து எடுத்துக்கொண்ட பின்னர், மீதி ரத்தத்தை மீண்டும் உடலுக்குள் செலுத்திவிடும். இதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும்,” என்றார் கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து ரத்தம், 'பிளேட்லெட்ஸ்’, ‘பிளாஸ்மா’ ஆகியவற்றை நன்கொடை செய்து சேவை விருதுகள் வென்ற திரு தண்ணீர்மலை லக்ஷ்மணன், 51.
ரத்த தானத்தின்போது ஒருவரிடமிருந்து 450 மில்லி லிட்டர் ரத்தம் எடுக்கப்படுகிறது. உடல்நலத்துடன் இருக்கும் ஒருவர் 12 வாரங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். ‘அபெரெசிஸ்’ முறையில் 300 மில்லி லிட்டர் 'பிளேட்லெட்ஸ்’, 300 மில்லி லிட்டர் ‘பிளாஸ்மா’ எடுக்கப்படுகிறது. இந்த முறையில் 4 வாரங்களுக்கு ஒருமுறை இவற்றை தானம் செய்யலாம்.
ரத்த தானத்திற்குச் செல்லுமுன், இரவு நன்றாக உறங்கி, உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்த தானத்திற்குப் பிறகு உடனே கடுமையான உடற்பயிற்சி செய்வதையோ எடைகளைத் தூக்குவதையோ தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார் திரு தண்ணீர்மலை.
ரத்த தானம் செய்ய இளையர்கள் தனியாக வர விரும்புவதில்லை, அவர்கள் குழுவாகச் செயல்பட விரும்புகிறார்கள். எனவே, ரத்த தானம் செய்யும் சமூக ஊடகப் பிரபலங்கள் மூலம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார் திரு தண்ணீர்மலை.
“இளையர்கள் அனைவரும் முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள். ரத்த தானம் செய்வதால் உடல் பலவீனமடையும் அல்லது இரும்புச் சத்து குறைந்துவிடும் என்று சமூகத்தில் பரவலான எண்ணம் உள்ளது; ஆனால் அது உண்மையன்று,” என்றார் 44 ஆண்டுகளாக ரத்தம், ‘பிளேட்லெட்ஸ்’ , ‘பிளாஸ்மா’ ஆகியவற்றை தானம் செய்து சேவை விருதுகள் வென்ற முனைவர் நாராயணஸ்வாமி வெங்கட்ராமன், 65.
உடம்பில் பச்சை குத்துவது ரத்தத் தகுதியைப் பாதிக்கும். ஏனெனில், பச்சை குத்தும்போது பயன்படுத்தப்படும் ‘மை’ தோலின் ஆழமான பகுதிவரை செல்வதால், ரசாயனக் கலப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பெரிய அளவிலான தோல் அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டோர், உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டோர் போன்றோர்க்குத் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் அத்தகையோர் சிறிதுகாலம் ரத்தம் நன்கொடையாகக் கொடுக்கக் கூடாது.
சுகாதார அறிவியல் ஆணையம் ரத்த தானத்திக்கு விதித்துள்ள வயது வரம்பு 70. எனவே, இன்னும் சில ஆண்டுகள், தம்மால் முடிந்தவரை ரத்த தானம் அளிக்க உறுதியாக உள்ளார் முனைவர் நாராயணஸ்வாமி வெங்கட்ராமன்.

