ஒவ்வோர் ஆண்டும் தமிழாசிரியர் கலைவாணி இளங்கோ தனது பிறந்தநாளையொட்டி தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ளவர்களுக்கு எழுதுபொருள்கள், உடைகள் அல்லது உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவ்வாண்டு சிங்கப்பூரில் உள்ளவர்களுடன் தனது பிறந்தநாள் மகிழ்ச்சியையும் தீபாவளி உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், சிங்கப்பூரின் கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க எண்ணினார்.
அரவணைக்கும் சமூகம்
சிங்கப்பூரின் பல பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக பிரியாணி சமைத்து வழங்கும் ‘பிரியாணி பாய்’ முயற்சி பற்றித் தெரியவந்ததும், அதன் மூலம் உதவிக் கரம் நீட்டக் களமிறங்கினார் திருவாட்டி கலைவாணி இளங்கோ.
“நவம்பர் 3ஆம் தேதி, தோ பாயோ லோரோங் 4ல் உள்ள புளோக் 82Aக்குச் சென்று அங்கு வெளிநாட்டு ஊழியர்கள் 15 பேரை நேரில் சந்தித்து, ஒவ்வொருவருக்கும் கோழி பிரியாணிப் பொட்டலம் ஒன்றை வழங்கினேன்.
“பிறந்தநாளையும் தீபாவளியையும் ஒரே நேரத்தில் கொண்டாடும் வகையில் அந்தச் சந்திப்பு எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. பண்டிகையைக் கொண்டாடுவதன் பொருள் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்வதில்தான் இருக்கிறது.
“நம் நாட்டைக் கட்டியெழுப்பும் இந்த வெளிநாட்டுச் சகோதரர்களுக்கும் நம் கொண்டாட்டங்களில் இடமிருக்க வேண்டும். இத்தகைய சிறிய செயல்கள் மூலம் அனைவரையும் அரவணைக்கும் சமூகம் உருவாகிறது என்று நம்புகிறேன்,” என்றார் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரித் தமிழாசிரியர் கலைவாணி, 40.
இரட்டிப்புக் கொண்டாட்டம்
புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தின் புளோக் 506ல் வசிக்கும் ஆர்த்தி அழகப்பனுக்கு மற்ற ஆண்டுகளைவிட இவ்வாண்டுத் தீபாவளி சிறப்பாக அமைந்துள்ளது. காரணம் அவர் தனது இரண்டாம் ஆண்டுத் திருமண நாளைத் தீபாவளி நாளன்று கொண்டாடுகிறார்.
4 அறை வீட்டில் கணவர் கதிருடன் வசிக்கும் ஆர்த்தியின் நாத்தனார் அவரது அண்டை வீட்டுக்காரர்.
“எங்கள் இரு வீட்டு வாசலும் அருகருகே இருப்பதால், தீபாவளி நாளன்று காலையில் ஒன்றாகக் கோலம் போடுதல், அலங்காரம் செய்தல் எனக் கோலாகலமாக இருக்கும். நாத்தனார் வீட்டில் காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, புளோக் 509ல் வசிக்கும் மாமியார் வீட்டுக்கு அனைவரும் மதிய உணவுக்குச் செல்வோம்.
“இந்த ஆண்டுத் தீபாவளியுடன் எங்களுக்குத் திருமண நாளும் என்பதால், குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடவும் திட்டமுள்ளது,” என்றார் ஆர்த்தி அழகப்பன்.
இரட்டிப்புக் கொண்டாட்டமாக அமைந்த இந்தத் தீபாவளி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நினைவில் நிற்கும் நாள் என்றார் ஆர்த்தி.
