இளையர்களுக்குத் தேவைப்படும் வாழ்க்கைத்தொழில் வழிகாட்டித் திட்டத்தை ஒரு செயலி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது ‘இம்ப்ரோஃப்’ (IMPROF) எனப்படும் இந்திய முஸ்லிம் நிபுணர்கள் சங்கம்.
படிப்பு முடித்து வாழ்க்கைத்தொழிலைத் தேர்ந்தெடுக்க சிரமங்களை எதிர்நோக்கும் இளையர்களுக்கும் அவர்களுக்கு எது சரியான பாதை என்று தெளிவாக இட்டுச் செல்வதற்கும் கைகொடுக்கும் விதமாக இந்தச் செயலி இருக்கும்.
‘எம்360’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலியில் வழிகாட்டி ஒருவருக்கு உதவலாம், அல்லது இதர வழிகாட்டியிடமிருந்து உதவியையும் பெற்றுக்கொள்ளலாம்.
இம்ப்ரோஃப் சங்கத்தின் 10வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) ஆர்ச்சர்ட்டில் அமைந்துள்ள தர்புஷ் உணவகத்தில் செயலி அறிமுகம் கண்டதோடு, கொண்டாட்ட விழாவும் இடம்பெற்றது.
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக இம்ப்ரோஃப் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஹமீது ரசாக்குக்கு வாழ்த்து உபசரிப்பும் நடந்தது.
இதர நாடாளுமன்ற உறுப்பினர்களான திருவாட்டி ஹஸ்லினா அப்துல் ஹலிமும் டாக்டர் சையது ஹருன் அல்ஹப்ஷியும் இணைந்திருந்தனர்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரனும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சமூகத்தினருக்கு அப்பாற்பட்டு எந்தவொரு பின்னணியிலிருந்தும் வரும் இளையருக்கும் இந்த உதவி செயலி கைகொடுக்கும்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் இளையர், வெளிநாட்டில் இருக்கும் ஒரு வழிகாட்டி மூலமும் கூட உதவி பெற்றுக்கொள்ளலாம்.
“வெறும் 10 பேருடன் இந்தச் சங்கம் தொடங்கியது. அப்போது இளையர்களுக்கு வழிகாட்டி திட்டம் தேவைப்படுவதை அறிந்தோம். இளையர்களுக்குத் தேவைப்பட்ட உதவிக்கு முடிந்தளவில் 100 விழுக்காடு உதவி வழங்க முனைந்தோம். இளையர்கள் படிக்கும் துறைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு வழிகாட்டி துணைபுரிவர்.
“இம்ப்ரோஃப் ஒருவகை நம்பிக்கையுடன் தொடங்கப்பட்டது. இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கும் இது தொடர வேண்டும். முடிந்தளவில் நான் எனது ஆதரவை வழங்குவேன்,” என்று டாக்டர் ஹமீது ரசாக் தெரிவித்தார்.
இம்ப்ரோஃப் சங்கத்தைத் தொடங்குவதற்கான முதன்மையான நோக்கம், இந்திய முஸ்லிம் சமுதாயத்தினரின் சமுதாய முன்னேற்றத்தை அதிகரிக்கவே என்று சொன்னார் சங்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான ராஜ் முகம்மது.
“10 ஆண்டுகளில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். இந்திய முஸ்லிம்கள் யார் என்று கேட்டால் அதற்கு ஒரு திட்டவட்டமான பதில் இல்லை. சமுதாயத்தில் உள்ளவர்களையும் சமுதாயம் கண்டுள்ள முன்னேற்றத்தையம் எடுத்துக்காட்டாக சொல்லலாம்,” என்றார் திரு ராஜ் முகம்மது.
“வங்கியியல் துறையில் சேர விரும்பும் எந்த இளையரும் வழிகாட்டலுக்கு என்னை அணுகலாம். நான் பட்டம்பெற்ற காலத்தில் என்னைத் தூக்கிவிட வழிகாட்டி என்று யாரும் இருந்ததில்லை. இந்தியச் சமுதாயத்திற்கு உதவ அவர்கள் முன்வர பெரிதும் விரும்புகிறேன்,” என்று நிதித் துறையில் நிபுணராகப் பணியாற்றும் உமா முத்தையன் கூறினார்.