முதுமையில் புதுமை தேடும் பயணம்

‘ஏக்ட் 3’ புகழ் ஆர். சந்திரன் இடம்பெறும் நாடகம்

முதுமையில் புதுமை தேடும் பயணம்

2 mins read
a3659b38-093e-4c8b-8852-c0cf1ab4e59c
‘ஏக்ட் 3’ (Act 3) புகழ் உள்ளூர் மூத்த மேடை நாடக நடிகர் ஆர். சந்திரன், ‘செல்வா’ கதாபாத்திரத்தை ஏற்கிறார்.  - படம்: டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் 

தனிமனித வாழ்க்கைப் பயணத்தையும் அனுபவ அறிவையும் பற்றிய இரண்டாம் முனையம் எனப் பொருள்படும் ‘டெர்மினல் டூ’ கலை நிகழ்ச்சியை ‘டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ கலை அமைப்பு, வழங்கவுள்ளது.

இந்தியப் பாரம்பரிய இசை, நடனங்களை தற்கால நாடகக் கலையுடன் இணைத்து இப்படைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் வந்திறங்கும், புறப்படும், காத்திருக்கும் அனைத்துலக விமான நிலையத்தை, மனித வாழ்க்கைப் பயணத்திற்கு உவமையாக இந்நிகழ்ச்சி சித்திரிக்கிறது.

விமான நிலையத்தில் நீண்ட காலம் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து, தம் வாழ்நாளின் முக்கியத் திருப்புமுனையை எதிர்நோக்கியிருக்கும் ‘செல்வா’ என்ற கதாபாத்திரத்தைச் சுற்றி இந்த நாடகம் நகர்கிறது.

‘ஏக்ட் 3’ (Act 3) புகழ் உள்ளூர் மூத்த மேடை நாடக நடிகர் ஆர். சந்திரன், ‘செல்வா’ கதாபாத்திரத்தை ஏற்கிறார்.

மாறுபட்ட அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கும் இந்தப் படைப்பு, பலதரப்பட்டவரையும் சென்றுசேரும் என்று நடிகர் சந்திரன் நம்புகிறார்.

“பழகிப்போன அன்றாட நடைமுறைகள் ஒருநாள் இல்லாமல் போகும்போது, அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்தக் கேள்வி குறித்துச் சிந்திக்கவும், வாழ்க்கையின் இந்த முக்கியமான கட்டத்திற்கு நம்மை எவ்வாறு சிறப்பாகத் தயார்படுத்திக் கொள்ளலாம் என்பதை ஆராயவும் இந்தப் படைப்பு தூண்டுகிறது,” என்று அவர் கூறினார்.

முதுமை என்பது தேய்மானம் இல்லை. மாறாக, அது புதிய தேடல்களுக்கான தொடக்கம் என்பதை இக்கதைக்களம் விவரிக்கிறது.

மேடை நாடகம், நேரடி இசை, நடனம் ஆகியவற்றின் கலவையாக அமையவுள்ள இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தானி, கர்நாடக இசை ஆகியவற்றுடன் சமகால உலக இசை கலந்து இடம்பெறும்.

அத்துடன் பரதநாட்டியம், ஒடிசி ஆகிய நடன அசைவுகளுடன் தற்காலக் கலை வடிவங்களும் இணைந்து வழங்கப்படவுள்ளன.

‘கலைக்காக, கலை’ (Art, Just for the Love of It) என்ற தங்களின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளதாக அரங்கின் கலை இயக்குநரும் இசையமைப்பாளருமான லலித் குமார் கூறினார்.

இந்த நிகழ்ச்சியுடன் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்காக ‘பர்ப்பஸ் இன் மோஷன்’ (Purpose in Motion) என்ற மூன்று நாள் சமூக ஈடுபாட்டுத் திட்டத்தையும் ‘டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ ஏற்பாடு செய்துள்ளது.

நாடகம், கலை, கலந்துரையாடல்கள் மூலம் முதியவர்கள் தங்களின் வாழ்க்கைப் பயணத்தையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள இத்திட்டம் வழிவகுக்கிறது.

‘டெர்மினல் டூ’ நிகழ்ச்சி, வரும் சனிக்கிழமை (ஜூலை 11) மாலை 6.30 மணி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) பிற்பகல் 2 மணி, மாலை 6.30 மணி ஆகிய நேரங்களில் ‘சோட்டா’ கலைப்பள்ளியில் ஸ்டூடியோ தியேட்டரில் நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு உறுதிசெய்யப்பட்ட கட்டணம் எதுவும் இல்லை என்றாலும், கலைஞர்களை ஊக்குவிக்க விரும்பும் நல்லுள்ளங்களின் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் https://bit.ly/TerminalTwo என்ற இணையப் பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்