பக்தர்கள் சுமக்கும் ஒவ்வொரு காவடிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. தைப்பூசத்தை மெருகூட்டும் காவடிகளின் அழகும் மெய்சிலிர்க்க வைக்கும் பக்தியும் ஒரு புறம் இருக்க அவற்றைச் சுமந்து செல்லும் பக்தர்கள், அதன் வடிவமைப்புக்காகப் பல நாள்கள் உழைக்கின்றனர்.
பினாங்கின் பெருமைக்குரிய ஆட்டக் காவடிகள்
பால், பன்னீர், புஷ்பம், சர்ப்பம், மயில், அலகு என்று பல காவடிகள் மத்தியில் மலேசியாவின் பினாங்கு மாநிலம் ஆட்டக் காவடிகளுக்குப் பிரபலம்.
முழுக்க முழுக்க ‘பாலிஸ்டிரீன்’ (polystyrene) மூலப்பொருளில் உருவாக்கப்பட்ட ஆட்டக் காவடிகள் சுமார் ஏழு அடி உயரத்தை எட்டலாம் என்று ‘ஷரவண் கிரியேஷன்ஸ்’ காவடி உற்பத்தி நிறுவன உரிமையாளர் கதிரவன், 35 கூறினார்.
“இவ்வாறு தயாரிக்கப்படும் ஆட்டக் காவடிகள் மழையால் சேதமடையாது. ஆனால், இலகாக இருப்பதால் எளிதில் உடையக்கூடும்,” என்றார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ‘ஷரவண் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வரும் கதிரவன், தைப்பூச ஆட்டக் காவடிகளை வரைந்து, வடிவமைத்து தயார்படுத்த சுமார் ஒரு மாதம் வரை எடுக்கும் என்று தெரிவித்தார்.
“காவடியின் வடிவத்தை வரைந்து உறுதிசெய்ய இரண்டு வாரங்கள் எடுக்கும். அதை வெட்டி மூன்று நாள்களில் ஒருங்கிணைக்க முடியும்,” என்றார் அவர்.
தைப்பூசத்திற்கு மூன்று நாள்களுக்கு முன் காவடி உற்பத்திப் பணிகளைக் கதிரவன் நிறுத்திவிடுவது வழக்கம்.
“பினாங்கு மட்டுமன்றி ஜோகூர், கோலாலம்பூர் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களுக்குக் காவடி செய்து கொடுக்கிறேன். போக்குவரத்துக்குப் போதுமான அவகாசம் அல்லது கடைசி நேர மாற்றங்களுக்கு மூன்று நாள்கள் போதுமாவை,” என்றார்.
தைப்பூசத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே எல்லா காவடிகளும் வாடிக்கையாளர்களை அடைந்துவிடும்.
வைப்பதற்கு இடமில்லாததாலும் சில நேரங்களில் காவடிகள் உடைந்து திரும்புவதாலும் தாம் செய்யும் காவடிகளை வாடகைக்குக் கொடுப்பதில்லை என்று கூறினார் கதிரவன். அதனால் தைப்பூசம் முடிந்த பிறகு காவடிகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.
“காவடி என்பது பக்தியின் பெயரில் சுமக்கப்படும் ஒன்று. சில பக்தர்கள் அதைச் சரிவர புரிந்து கொள்ளாமல் பாத ஊர்வலத்தின்போது வேண்டுமென்றே மற்ற பக்தர்களுடன் மோதிக் காவடியைத் தவறாகக் கையாளுவதுண்டு,” என்று தெரிவித்தார்.
பல பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறக் காவடிக்கு வடிவமளிக்கும் கதிரவன், காவடி ஏந்தும் பக்தரும் ஆவார். கடந்த 15 ஆண்டுகளாக பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் அவருக்கு இவ்வாண்டின் தைப்பூசம் விசேஷமானது.
“என் மகன் இவ்வாண்டு முதல்முறையாக என்னுடன் ஆட்டக் காவடி சுமக்கிறார். அவருக்காகவே ஒரு சிறிய ஆட்டக் காவடியை நான் என் கைகளால் தயார் செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி,” என்று தெரிவித்தார்.
கோலாலம்பூரில் மனங்கவர் மயில் காவடிகள்
ஆண்டுதோறும் தைப்பூசத்துக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்களை கோலாலம்பூரின் பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் வரவேற்கிறது.
கொண்டாட்டங்களில் அதிகமாகக் கண்ணில் தென்படுவது, பக்தர்கள் சுமக்கும் மயில் காவடி.
இவ்வாறு ஆறு ஆண்டுகளாக கிள்ளானின் தாமான் செந்தோசாவில் பக்தர்களுக்காக காவடி செய்து வரும் 39 வயது கோபுலவானன், சுமார் மூன்று ஆண்டுகளாக காவடிகளை வாடகைக்கு விடும் வழக்கத்தையும் தொடங்கியுள்ளார். குறிப்பாக, மயில் காவடி சுமக்கும் வாடிக்கையாளர்கள் அவரை அதிகம் அணுகுவதாக அவர் தெரிவித்தார்.
“காவடிக்குத் தேவையான மயில் தோகைகள் நேரடியாக பத்துமலை ஆலயத்திலிருந்து வருகின்றன. ஒரு மயில் காவடியைத் தயாரிக்க சுமார் ஒரு வாரம் தேவைப்படுகிறது,” என்றார் கோபுலவானன்.
“ஆட்டக் காவடிகளையும் நான் தயாரிப்பதுண்டு. ஆனால், ஆட்டக் காவடிகளுக்கு வேலைப்பாடு சற்று அதிகம். மேலும், பத்துமலையில் காவடி சுமக்கும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மயில் காவடிகள் சுமப்பர். அதனால் அதற்கான தேவை அதிகமாக உள்ளது,” என்றார்.
தயாரிக்கப்பட்ட காவடிக்கு வாடகை 700 மலேசிய ரிங்கிட் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“முன்பு 500 ரிங்கிட் வாடகை மட்டும் வாங்கினேன். ஆனால், அதிகரித்துவரும் செலவுகளால் விலையை உயர்த்த வேண்டிய ஒரு கட்டாயம்,” என்று தெரிவித்தார் கோபுலவானன்.
தைப்பூசத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எல்லா காவடி தயாரிப்பு வேலைகளையும் கோபுலவானன் நிறுத்திவிடுவார். கடைசி நிமிட சரிசெய்தலுக்கு இந்த நேர அவகாசம் முக்கியம் என்று தெரிவித்தார்.
“ஓர் ஆண்டில் தைப்பூசத்துக்குச் சுமார் 10 மயில் காவடிகளைத் தயாரிப்பேன். இவ்வாண்டு ஐந்து மயில் காவடிகளைச் செய்திருக்கிறேன். அவற்றில் ஒன்று முதல்முறையாக ஜோகூர் பாரு வரை செல்கிறது,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் கோபுலவானன்.
இளம் வயதில் காவடி சுமந்து ஆடிய கோபுலவானன், தற்போது முழுக்க முழுக்க தமது நேரத்தையும் திறனையும் காவடி செய்து வாடகைக்குக் கொடுப்பதில் செலுத்துகிறார்.
“எதிர்காலத்தில் மீண்டும் நான் காவடி செலுத்துவதாக இருந்தால் அதற்கும் வடிவமைப்பை நான் ஏற்கெனவே யோசித்து வைத்துள்ளேன்,” என்று உற்சாகம் ததும்பக் கூறினார் கோபுலவானன்.
தாத்தாபோல் பேரன்
சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்துக்கு தனது தாத்தா 47 ஆண்டுகள் தொடர்ந்து சுமந்த காவடியை 2019 ஆண்டு முதல் முறையாக தன் சொந்த வேண்டுதலுக்காகச் சுமந்தார் தர்ஷன் சிவராஜ், 22. அப்போது அவருக்கு வயது 16 மட்டுமே.
“தாத்தாவின் பெரிய அலகுக் காவடியைச் சுமந்து நடந்தது ஒரு புதுவித அனுபவமாக அமைந்தது. அந்த வயதில் எனக்கு அதைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லை,” என்று தெரிவித்தார் தர்ஷன்.
கொவிட்-19 காரணமாக ஈராண்டுகள் சிங்கப்பூரில் காவடி ஊர்வலம் இல்லாத சூழல். தாத்தா அளித்த ஊக்கத்தில் மீண்டும் 2023ஆம் ஆண்டு தைப்பூச ஊர்வலத்தில் காவடியுடன் காலெடுத்து வைத்தார் தர்ஷன்.
“என் காவடியைத் தயார்செய்ய சுமார் ஒரு மாதம் ஆனது. வார இறுதி நாள்களில் தாத்தா உட்பட என் எல்லா குடும்ப உறுப்பினர்களும் ஒன்றிணைந்து எனக்கு உதவினார்கள்,” என்று நினைவுகூர்ந்தார் தர்ஷன்.
இருப்பினும், தாத்தாவின் காவடியில் சிறு மாற்றங்களை ஆண்டுதோறும் தனக்குப் பிடித்தமான வகையில் செய்து வந்தார் தர்ஷன். காவடியின் வடிவமைப்பு, அதில் இடம்பெறும் சிறு உலோக அலங்காரங்களைத் தமது விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைத்ததாக தெரிவித்தார் தர்ஷன்.
“என் காவடியின் உச்சத்தில் அமரும் முருகன் சிலை எனக்கு மிகவும் பிடித்தமான அங்கம். அந்தச் சிலை என் குடும்பத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. ஆண்டுதோறும் தைப்பூசத்துக்கு அந்தச் சிலையை ஏந்திச் செல்வது ஓர் உணர்வுபூர்வமான அனுபவம்,” என்றார்.
ஒரு காவடியின் மொத்த வடிவமைப்புக்கு எப்படி சிறு அச்சாணிப் பகுதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனவோ, காவடி ஏந்துபவருக்கு அவருடைய குடும்ப ஆதரவு மிக முக்கியம் என்று வலியுறுத்தினார் தர்ஷன்.
“தைப்பூச நாளன்று கொட்டும் கனத்த மழையிலும் என் குடும்பத்தினர் என்னுடன் நடந்து வந்ததுண்டு. என் வேண்டுதலை அவர்கள் இன்றி என்னால் ஒருபோதும் செலுத்த முடிந்திருக்காது,” என்று கூறினார் தர்ஷன்.
குறிப்பாக, இந்தக் காவடி பயணம் தம் தாத்தவுடனான உறவை வலுப்படுத்தியுள்ளது என்று கூறினார்.
“சிறு வயதில் என் தாத்தா காவடி சுமந்து செல்வதைப் பார்த்திருக்கும் நான், இப்போது அவருடைய காவடியைச் சுமந்து செல்வதும், அவர் அதைக் கண்ணாரக் காண்பதும் சொல்லமுடியா இன்பம்,” என்று உள்ளம் நெகிழத் தெரிவித்தார் தர்ஷன்.
இரவில் மிளிரும் வண்ணக் காவடிகள்
காவடிக்கு அழகூட்டும் அம்சங்கள் பல இருப்பினும் 31 வயது பார்த்திபன் கோபாலகிருஷ்ணனுக்கு தமது காவடியில் ‘எல்இடி’ மின்விளக்குகள் மிளிர்வது என்றால் கொள்ளைப் பிரியம்.
தமது முதல் சங்கிலிக் காவடியை பங்குனி உத்திர நாளன்று சிங்கப்பூரில் உள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் சுமந்து சென்றபோது பார்த்திபனுக்கு 21 வயது.
“நேர்த்திக்கடனை நிறைவேற்ற 12 மணி நேரத்துக்கு முன் என் காவடியில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் பழுதடைந்தன. என் குடும்பத்தினர், நண்பர்கள் எல்லாரும் முன்வந்து எனக்கு கைகொடுத்தார்கள்,” என்று புன்னகையுடன் நினைவுகூர்ந்தார் பார்த்திபன்.
தற்போது தமது காவடியில் இரண்டு வண்ணங்களில் மின்விளக்குகளைப் பொருத்தியுள்ளார் பார்த்திபன். அவை சரிபாதியாக உள்ளன என்றார் அவர்.
“ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து புறப்படும்போது என் காவடி பிரகாசமாக, வண்ணமயமாகக் காட்சியளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதே துடிப்புடன் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் என் வேண்டுதலை பூர்த்தி செய்வேன்,” என்று மனமகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமது சங்கிலிக் காவடியை ஒரு மாதத்துக்கு முன்பே தயார் செய்துவிடுவார் பார்த்திபன். சங்கிலிக் காவடிகள் பொதுவாக அவற்றை ஏந்தும் பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.
“என் காவடியின் ‘சங்கிலி’ பெரும்பாலும் மணிகள் கோக்கப்பட்ட ஒரு சங்கிலியாகும். அதனால், என் காவடியின் எடை சற்று அதிகமாக இருக்கும்,” என்று பகிர்ந்தார் பார்த்திபன்.
சுமார் ஐந்து ஆண்டுகள் சங்கிலிக் காவடியைச் சுமந்து சென்ற பார்த்திபன், 2024ஆம் ஆண்டில் அலகுக் காவடிக்கு மாறினார். குடும்பம், பணி, தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றைக் கையாள்வது சற்று சவாலாக இருந்தபோதிலும், ஆண்டுதோறும் காவடி சுமக்கும் அனுபவம் தித்திப்பான ஒன்று என்று சொன்னார் பார்த்திபன்.
“நான் சுமக்கும் காவடி என் தந்தை, அண்ணன் சுமந்தது. அதனால் இந்தப் பயணத்திற்கு தனிப்பட்ட ஒரு மதிப்பு உண்டு,” என்றார்.
அதுமட்டுமல்லாமல், குடும்பத்தினரின் உறுதுணை தமது காவடிப் பயணத்தில் வேரூன்றி நிற்கும் என்று திடமாகக் கூறினார் பார்த்திபன்.
“தைப்பூசக் காவடி என்பது வெறும் ஒரு பக்தரின் வேண்டுதல் அல்ல. இது முற்றிலும் ஒரு குடும்பத்தின் வழிபாடு,” என்று வலியுறுத்தினார் பார்த்திபன்.
ஒரு காவடியின் கைவண்ணம்
காவடிக்காக அலுமினிய அச்சு, அலகுகளைக் கூர்மையாக்குதல் போன்ற வேலைப்பாடுகளைக் கடந்த 12 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார் சி. விக்னேஷ், 32. கலைத் துறையில் பயின்ற விக்னேஷ், தம் நண்பர்களின் காவடிகளைக் கண்டு காவடி தயாரிப்பதன்பால் ஈர்க்கப்பட்டார்.
“ஆண்டுதோறும் தைப்பூசத்துக்குச் சுமார் 15 காவடிகளுக்கு இவ்வாறு தயாரிப்பு வேலையை மேற்கொள்வேன்,” என்று பகிர்ந்தார் விக்னேஷ்.
அதுமட்டுமல்லாமல் 2013ஆம் ஆண்டிலிருந்து விக்னேஷ் தாம் சுமக்கின்ற காவடியைச் சொந்தமாக வடிவமைத்துள்ளார்.
“கொவிட் காலம் வந்து சென்றதிலிருந்து நான் தற்போது காவடி சுமப்பதில்லை. மற்றவர்களுடைய காவடிகளுக்கு உதவி வருகிறேன்,” என்றார்.
முருகன், பிள்ளையார் போன்ற தெய்வ உருவங்கள், தாமரை மலர்கள், விக்டோரியன் சுருள் வடிவங்கள் போன்றவற்றை அச்சிட சிங்கப்பூரைச் சேர்ந்த பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்புவதாகத் தெரிவித்தார் விக்னேஷ்.
“ஒரு ஏ4 காகித அளவுக்கு வடிவங்களை அச்சிட சுமார் நான்கு மணி நேரம் ஆகும்,” என்றார்.
மாறாத பாரம்பரியமான காவடி வேண்டுதல்கள் ஒருபுறம் இருக்க, காவடி வடிவமைப்புகள் ஆண்டுதோறும் மாறிக்கொண்டு வருவதாகத் தெரிவித்தார் விக்னேஷ்.
“தற்போது காவடி வடிவமைப்பில் புத்தாக்கம் அதிகம் உள்ளது. மேலும், ஒரு காவடியை உருவாக்கி, சுமந்து செல்வதற்கு நிறைய பொறுமையும் அவசியம். இதனால், ஏற்படும் மனநிறைவுக்கு நிகரில்லை,” என்றார் விக்னேஷ்.
“இளையர்கள் பலர் காவடி சுமப்பதுடன் அதை உருவாக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒருவரிடமிருந்து இன்னொருவர் தொடர்ந்து கற்றுக்கொள்வதால் இந்த வழக்கத்தை இனிவரும் தலைமுறையினரும் பேணிக் காக்க இயலும்,” என்று விக்னேஷ் வலியுறுத்தினார்.