தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்’ நூல் வெளியீடு; கனிமொழி உரையாற்றுகிறார்

3 mins read
7e4dcb8a-cd39-4bf8-bf49-91109494ddce
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். - படம்: இணையம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் முத்தமிழறிஞர் என்று போற்றப்படும் மறைந்த டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி ஒரே ஒருமுறை சிங்கப்பூருக்கு 1999ஆம் ஆண்டு வருகையளித்தார்.

அந்தப் பயணம் குறித்த தகவல்கள், செய்திக் குறிப்புகள், தலையங்கங்கள், புகைப்படங்கள், உரையாற்றிய பேச்சு, நடத்திய சந்திப்புகள் எனப் பல்வேறு தகவல்களை ஆவணப்படுத்தும் நூல் சிங்கப்பூரில் வெளியீடு காணவுள்ளது.

‘செம்மொழி’ காலாண்டு இலக்கிய இதழின் ஆசிரியரும் தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளருமான எம். இலியாஸ் எழுதித் தொகுத்துள்ள ‘சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்’ எனும் இந்த நூல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 1ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வெளியிடப்படுகிறது.

கலைஞரின் வருகையின்போது சிங்கப்பூரில் தமிழ் முரசு நாளிதழில் பணியாற்றிவந்த அவரது மகள் கனிமொழி கருணாநிதி இந்த விழாவில் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

தூத்துக்குடி தொகுதி இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி, தம் தந்தையின் வருகையின்போது கூடவே இருந்து பார்த்த அம்சங்கள் குறித்த பகிர்வை வழங்க இருக்கிறார்.

தொடர்பு, கலைகள் அமைச்சராகவும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சராகவும் அன்று பொறுப்புவகித்த பிரிகேடியர் ஜெனரல் ஜார்ஜ் இயோவின் அழைப்பை ஏற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்த திரு கருணாநிதி, அன்றைய பிரதமர் கோ சோக் டோங் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகளை இந்த மூன்று நாள் வருகையின்போது மேற்கொண்டார்.

சிங்கப்பூர் உள்ளரங்கில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்ட தமிழ் இலக்கிய நிகழ்ச்சியில் அவர் சொற்பொழிவாற்றினார்.

இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவரும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகருமான திரு ஆர். ராஜாராம் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைவர் கே. தனலெட்சுமி, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி இரா. அன்பரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

அந்தப் பயணத்தின்போது தமிழ் முரசு நாளிதழின் செய்தியாளராகப் பணியாற்றிய சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுக் கழகத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றும் மூத்த அடித்தள தலைவர் சித்திரா துரைசாமி அனுபவங்களைப் பகிர்வார்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக மாணவி ஆ. விஷ்ணுவர்தினி நூல் ஆய்வு வழங்குவார்.

தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் உலகத் தமிழாசிரியர் பேரவையின் தலைவருமான சி.சாமிக்கண்ணு, கவிமாலை காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

தமிழிசை ஆய்வாளர் நா.மம்மது, முன்னாள் தூதர் கேசவபாணி, தமிழறிஞர் சுப. திண்ணப்பன் உள்ளிட்ட பல சமூகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக நூல் விற்பனைத் தொகை சமூக, அறநிதிக்கு வழங்கப்படும் என்று நூலாசிரியர் இலியாஸ் தெரிவித்தார்.

செம்மொழியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு சிற்றுண்டியுடன் தொடங்கும். காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்