லிட்டில் இந்தியா வட்டாரத்தின் வீராசாமி சாலையில் உள்ள கலாம் உணவகம் பிரியாணி சமைப்பதில் புதிய சாதனை படைத்துள்ளது.
நிகழ்ச்சியின் மணிமகுடமாக, சீரகச் சம்பா அரிசியில் தயாரிக்கப்பட்ட சிறப்பு ‘கலாம் பிரியாணி’ அறிமுகம் செய்யப்பட்டது.
1.9 மீட்டர் நீளமும் 0.45 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்ட தட்டில் படைக்கப்பட்ட அந்த இறைச்சி பிரியாணி, சிங்கப்பூரின் ஆகப் பெரிய ஆட்டிறைச்சி பிரியாணித் தட்டு என்ற பிரிவில் அதிகாரப்பூர்வமாகச் ‘சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில்’ இடம்பிடித்து புதிய சாதனை படைத்தது.
இந்தியாவின் 11வது அதிபராக இருந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், நல்லிணக்கத்திற்காகவும் முற்போக்குச் சிந்தனைக்காகவும் போற்றப்படுகிறார்.
அமரர் கலாமின் 95வது பிறந்தநாள் விழாவும் சிங்கப்பூர் சாதனைப் புத்தக நிகழ்வும் அக்டோபர் 10ஆம் தேதி வீராசாமி சாலையில் உள்ள கலாம் உணவகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, டாக்டர் கலாமின் உருவப்படத்திற்குத் தலைவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமரர் காலமின் 95வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவரது படத்திற்கு மலர்கள் தூவப்பட்டன.
டாக்டர் கலாமிற்கு மாணவர்கள்மீது இருந்த பேரன்பைப் போற்றும் வகையில், தேவையுள்ள மாணவர்களுக்கு $50 மதிப்புள்ள புத்தகப் பற்றுசீட்டுகளும் பரிசுப்பைகளும் வழங்கப்பட்டன.
அத்துடன், பிரியாணி சமைத்து சாதனை படைத்த சமையல் கலைஞர்களுக்கு மேடையில் சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கிப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய நற்பணிப் பேரவைத் தலைவர் ரவீந்திரன், அறிவியல் வல்லுநர் கலாமின் தொலைநோக்குப் பார்வையைப் பற்றியும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற சேவைகளைப் பற்றியும் உரையாற்றினார்.
லோரோங் லீமாவ் குடியிருப்பாளர் குழு நடத்திய ‘மிகப்பெரிய தேசியக் கொடி’ சாதனை நிகழ்வின்போது, டாக்டர் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு புதிய சாதனை நிகழ்வைச் செய்ய திரு ஜான் ராமமூர்த்தி விருப்பம் தெரிவித்ததாக ஒருங்கிணைப்பாளர் மில்லத் அகமது கூறினார்.
“நாங்கள் இருவரும் கலந்து பேசி, 40 நாள்களுக்குள் திட்டமிட்டு, இந்தச் சாதனை நிகழ்வைச் சாத்தியமாக்கினோம்,” என்றார் அவர்.
‘கலாம் உணவகம்’, ‘கலாம் மார்ட்’ ஆகிய நிறுவனங்களின் பின்னணியில் உள்ள தொழில்முனைவோரும், அப்துல் கலாம் விஷன் சொசைட்டியின் தீவிரச் சமூக ஆர்வலருமான திரு ஜான் ராமமூர்த்தி விழா நிறைவில் அமரர் கலாமின் வாழ்வியலை நினைவுறுத்தினார்.
“டாக்டர் கலாம் வாழ்ந்து காட்டிய உயரிய பண்புகளால் வழிகாட்டப்படும் நாம், மனிதகுலத்திற்குச் சேவை செய்வதிலும் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைப்பதிலுமே உண்மையான வெற்றியைக் காண முடியும்,” என்று அவர் சொன்னார்.
