தேசிய விளையாட்டரங்கிற்குள் தேசிய தின அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் காலாங் வட்டாரமே நாட்டின் பிறந்தநாளைக் கொண்டாடக் களைகட்டியது.
அணிவகுப்பிற்குச் செல்லும் பார்வையாளர்கள், விளையாட்டரங்கிற்கு வெளியே வாணவேடிக்கைகளைக் காண ஒன்று திரண்ட மக்கள் என அனைவர்க்கும் ஏற்ற வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
‘தொடுவானம் நோக்கி, முன்னேறட்டும் சிங்கப்பூர்!’ என்ற இவ்வாண்டின் தேசிய தினக் கருப்பொருளுக்கு ஏற்றவாறு நாட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தம் சாவடி ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருந்தது.
‘டிஃபென்ஸ் கலெக்ட்டிவ் சிங்கப்பூர்’ அமைப்பின் ஏற்பாட்டில் நீர் விளையாட்டு நிலையத்திற்கு வெளியே அந்தச் சாவடி இருந்தது.
தேசியக் கொடியோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
சாவடியைத் தவிர்த்து, காலாங் கடைத்தொகுதியைச் சுற்றியும் புகைப்படம் எடுக்கும் இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அலங்காரப் பொம்மைகளும் இடத்தைச் சுற்றி வந்தன.
நாட்டின் 61 ஆண்டு வரலாற்றை எடுத்துரைக்கும் வண்ணம் விளையாட்டரங்கிற்கு வெளியே நிறுவப்பட்டிருந்த தகவல் பலகையும் மக்களைப் பெரிதும் ஈர்த்தது.
‘உறுதிமொழி 60’ என்ற அங்கத்தில் வருகையாளர்கள் நாட்டிற்கு அவர்களின் பங்கை எவ்வகையில் ஆற்றுவர் என்று உறுதிமொழி எடுத்தனர்.
பற்றுறுதி எடுப்பது எப்படி என்ற விளக்கம் ஒலிபெருக்கிவழி சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் வழங்கப்பட்டது. மக்கள் அவற்றை நேரடியாகக் கேட்டுக் கற்றுக்கொள்ள முடிந்தது.
பாதுகாப்பை உறுதிசெய்ய காலாங் வேவ் கடைத்தொகுதிக்கு வெளியே இயந்திர நாய்க்கள் சுற்றி வந்தன. கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த அந்த இயந்திரக் கருவிகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன.


