சிங்கப்பூரில் தொடர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருபவரும் சமூக ஆர்வலரும் பன்மொழி வித்தகருமான முத்தழகு மெய்யப்பனுக்கு இவ்வாண்டு கணையாழி விருதளித்துச் சிறப்பிக்கப்பட்டது.
தமிழ் இல்லாத இடத்தில் தமிழை இடம்பெறச் செய்தல், தமிழ்ப்பிழை அகற்றுதல், சரியான மொழிபெயர்ப்புகளைப் பரிந்துரைத்தல் என மொழிக்கும் அறப்பணிகள் மூலம் சமூகத்துக்கும் தொடர்ந்து பணியாற்றிவரும் இவருக்கு, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) கவிமாலை அமைப்பின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.
தமிழ்மொழி விழா 2026ன் ஓர் அங்கமாக, கவிமாலை அமைப்பின், ‘தொல் சங்கநாதம்’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர் ராதிகா தினேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
விருதுபெற்ற திரு முத்தழகு மெய்யப்பன் ஏற்புரையில், தமது உற்ற நண்பர் மறைந்த புதுமைத்தேனீ மா அன்பழகன் தமக்கு அளித்த வாய்ப்புகளையும் ஆதரவையும் விளக்கியதுடன் அவரது மறைவு சொல்லொணாத் துயர் அளிப்பதாகக் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், இளங்கவிஞருக்கான தங்க முத்திரை விருது, சிறந்த கவிதை நூலுக்கான தங்கப் பதக்க விருதுகள் உள்ளிட்டவற்றுடன் மாணவர்கள், பொதுமக்களுக்கான கவிதைப் போட்டிகளில் வென்றோர்க்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.
தமிழ் ஆர்வலரும் கவிமாலை அமைப்பின் காப்பாளருமான புதுமைத்தேனீ மா அன்பழகனின் மறைவுக்கு நிகழ்ச்சியில் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இந்தியாவிலிருந்து வந்த ‘உருபாணர்’ குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சங்ககால இசைக் கருவிகளை மீட்டுருவாக்கம் செய்து அவற்றை இசைக் குழுவினர் வாசித்தது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
ஐந்திணைகள், நிமித்தங்கள், பொழுதுகளை விவரித்துப் பாடிய பாடல்களும் பாரியின் வாழ்த்துப் பாடலும் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கியது.
தொடர்புடைய செய்திகள்
“தமிழ்மொழி விழாவில் ஆகப் புதுமையான நிகழ்ச்சியாகவும் சிறப்பாகவும் அது அமைந்ததாக அனைவரும் பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி,” என்று தெரிவித்தார் கவிமாலை அமைப்பின் தலைவர் இன்பா.

