காப்பி பானத்துடன் கலந்த ‘காபி’ ராகம்

ரசிகர்களை அருகிலிருந்து மகிழ்வித்த செவ்விசைக் கலைஞர்கள்

காப்பி பானத்துடன் கலந்த ‘காபி’ ராகம்

படம்:  ‘த சம் தத்துவம்’

11 Nov 2026 - 6:00 am

3 mins read

நறுமணமிக்க காப்பியை விஞ்சிய இன்பந்தரும் தரமிகு கர்நாடக இசை நிகழ்ச்சியை இதமான, இயல்பான கஃபே சூழலில் இளையர்கள் சிலர் படைத்துக் காட்டியுள்ளனர்.

உள்ளூர் இசை நிறுவனமான ‘த சம் தத்துவம்’ (The Sum Tattvam) ஏற்பாடு செய்த ‘கச்சேரி இன் எ ‘கஃபே’ (Kutcheri in a Kafé), காப்பி அருந்திக்கொண்டே செவ்விசையைச் சுவைக்கும் வாய்ப்பினை வழங்கியது.

த ஆர்ட்ஸ் ஹவுஸ், விக்டோரியா தியேட்டர் ஆகியவற்றுக்கு அருகிலுள்ள ‘பிரிகோலேஜ்’ (Bricolage) கஃபேயில் அக்டோபர் 25ஆம் தேதி இந்த இசை நிகழ்ச்சி இருமுறை மேடையேறியது. 

எளிமையும் வளமையும் தனித்துவமாக இணைந்த இடம், இவர்கள் படைத்த நிகழ்ச்சிக்குச் சாலப் பொருத்தமாயிருந்தது. தாங்கள் கையாண்ட கர்நாடக இசைப் படைப்பின் கடுமையை இந்தக் கலைஞர்கள் குறைக்கவில்லை.

 ‘பிரிகோலேஜ்’ (Bricolage) கஃபேயில்  இசைக்கச்சேரி.
 ‘பிரிகோலேஜ்’ (Bricolage) கஃபேயில் இசைக்கச்சேரி. - படம்:  ‘த சம் தத்துவம்’

மிருதங்கக் கலைஞர் சாய் அகிலேஷ்வர், பாடகர் சாய் விக்னேஷ்வர், வயலின் கலைஞர் ஸ்ரீரஞ்சனி முத்து சுப்பிரமணியன், ‘டபுள் பேஸ்’ கலைஞர் டாக்டர் டோனி மகாரோமே எனப் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்று பார்வையாளர்களுக்கு மிக அருகிலேயே கச்சேரி நிகழ்த்தினர்.

பழங்கால இந்திய மன்னர் சுவாதித் திருநாள் இயற்றிய ‘சுமனசாயக’ என்ற வர்ணம், காபி ராகத்தில் அமைந்திருந்ததால் சூழலுக்குப் பொருந்தும் வகையில் முதல் பாடலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அடுத்து, ஆரபி ராகத்தில் சுவாதித் திருநாள் இயற்றிய ‘ஸ்ரீ ராமநவிபோ’, குமுதக்ரியா ராகத்தில் முத்துஸ்வாமி தீக்‌ஷிதரின் ‘அர்த்தநாரீஸ்வரம்’ ஆகியவையும் இடம்பெற்றன.

மிருதங்கக் கலைஞர் சாய் அகிலே‌ஷ்வர், நெறியாளராகவும் செயல்பட்டார். சாதாரண ரசிகர்களுக்குப் புரியும்படியாக விளக்கங்களை அளித்ததுடன் இசை நிகழ்ச்சியின் பல்வேறு அங்கங்களை அவர் விளக்கினார்.  

கஃபே சூழலில் பார்வையாளர் காதுகளில் பாய்ந்த கர்நாடக இசைச் சுவை.
கஃபே சூழலில் பார்வையாளர் காதுகளில் பாய்ந்த கர்நாடக இசைச் சுவை. - படம்:  ‘த சம் தத்துவம்’

கரஹரப்ரியா ராகத்தில் தியாகராஜரால் புனையப்பட்ட ‘பக்கல நிலபடி’, சிறப்பாக, உணர்வுபூர்வமாகப் பாடப்பட்டது. மிருதங்க இசை மட்டும் ஒலிக்கும் அங்கமான தனி ஆவர்த்தனமும் தமிழ்த் தில்லானாவும் பார்வையாளர்களை மகிழ்வித்ததை அவர்களது தலை அசைவுகளும் கைகளின் தாளமும் எடுத்துரைத்தது.

கர்நாடக இசை ரசிகரான 66 வயது ருக்மிணி சதீஷ், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தனது வழக்கமான நடைமுறையிலிருந்து ஒரு மாறுதலாக அமைந்தது என்றும், இந்தப் புதிய வடிவத்தை மிகவும் ரசித்ததாகவும் குறிப்பிட்டார்.

புதுவித அனுபவம்

பார்வையாளர்களில்  ஒருவரான 28 வயதுப் பள்ளி ஆசிரியரும் இசை அமைப்பாளருமான பவித்ரன் கனகரத்தினம், இந்த இசை முயற்சியைப் பாராட்டினார்.

கர்நாடக இசையை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் கலைஞர்கள், தங்களது  நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறினார்.

“பாரம்பரியமான, மிகுந்த கட்டுக்கோப்பான சூழல் இல்லாமல், அனைவரும் நிதானமாக, பானங்களை அருந்தியபடியே இசையை ரசிக்கும் இந்த நெருக்கமான சூழல் வரவேற்கத்தக்கது,” என்றும் அவர் கூறினார்.

பார்வையாளர்களில் மற்றொருவரான சந்தைப்படுத்தல் உதவி மேலாளரான தக்‌ஷா மோகன், 29, தான் மேற்கத்திய நாட்டுப்புற இசைப் பின்னணியிலிருந்து வந்ததால் இது தனக்குப் புத்துணர்வு தந்த, புதுமையான அனுபவமாக இருந்தது என்றார்.

சிங்கப்பூரில் பலவிதமான இசை நிகழ்ச்சிகளை வழங்க வாய்ப்பு கிடைத்தாலும், ஒரு கஃபேயில் கர்நாடக இசையை வழங்குவது தனக்கு இதுவே முதல் முறை என்று நிகழ்ச்சியில் பாடிய சாய் விக்னோ‌ஷ்வர் குறிப்பிட்டார்.

“பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டு,  இசை நுட்பங்களை மிகுதியாகச் சேர்க்காமல் அவர்களை ஈடுபடுத்த நாங்கள் முயன்றோம். அவ்வகையில் கர்நாடக இசை எப்போதுமே மாற்றங்களுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளக்கூடியது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்