தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்புவழி அறிவு: தமிழ்ப்பள்ளியில் பயின்ற ஆசிரியரின் நினைவலைகள்

3 mins read
e8bf3d6e-f203-485f-b434-90f82baa4735
சிங்கப்பூரில் தமிழ்ப்பள்ளி மாணவியாக வளர்ந்த 65 வயது திருவாட்டி வசுந்தராதேவி வி ரெட்டி, பின்னர் தொடக்கப்பள்ளி துணை முதல்வராகத் திகழ்ந்தார். - படம்: பே. கார்த்திகேயன்

சிங்கப்பூரில் 1960களில் அரசாங்கம் தொடங்கிய இருமொழிக் கொள்கை, ஆங்கிலத்தை அன்றாடப் பயன்பாட்டுக்கான முதல் மொழியாகவும் தாய்மொழியை இரண்டாவது மொழியாகவும் உறுதி செய்தது.

எல்லா இனத்தவரையும் ஒருங்கிணைக்கும் பெருந்திட்டம் நடப்புக்கு வந்தபோது தாய்மொழிவழிப் பள்ளிகள் இந்நாட்டில் அருகிவர, சிங்கப்பூரின் தமிழ்ப்பள்ளிகள் 1980களின் இறுதிக்குள் மூடப்பட்டன. 

ஆங்கிலத்தில் கல்வி கற்பிக்கும் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்ட வசுந்தராதேவி வி ரெட்டி, சூழ்நிலை காரணமாகக் குடும்பத்தினருடன் இந்தியா செல்ல வேண்டி இருந்தது. சிங்கப்பூருக்கு மீண்டும் திரும்பியபோது தொடக்கநிலை நான்குக்கான வயதை எட்டிய திருவாட்டி வசுந்தரா, மீண்டும் ஆங்கிலப் பள்ளியில் சேர இயலவில்லை. 

எனவே, இயோ சூ காங் வட்டாரத்தில் அன்று செயல்பட்ட கலைமகள் தமிழ்ப்பள்ளியில் தொடக்கநிலை பயின்றார்.

“தமிழை முதல் மொழியாகப் பயின்ற நான், கணிதம், வரலாறு, நிலநூல், ஓவியம் உள்ளிட்ட பாடங்களையும் தமிழிலேயே பயின்றேன்,” என்று அவர் கூறினார். 

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட திருவாட்டி வசுந்தரா, தொடக்கநிலை ஒன்றில் இருந்தபோது அவருக்குத் தமிழும் ஆங்கிலமும் பேசத் தெரியாமல் தாயாரிடம் அழுது புலம்பியதை நினைவுகூர்ந்தார். இருந்தபோதும், துணிச்சலும் நம்பிக்கையும் நிறைந்த உள்ளத்துடன், பயிற்சி செய்து இரு மொழிகளிலுமே சரளமாகப் பேசினார்.

தொடக்கப்பள்ளிக்குப் பின் அன்றைய ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோருமே தமிழர்களாக இருந்த நிலையில் சிங்கப்பூரிலேயே தமிழகம் போன்ற சூழல் இருந்ததாகத் திருவாட்டி வசுந்தரா குறிப்பிட்டார். 

மாணவர் காவற்படையில் திருவாட்டி வசுந்தராதேவி.
மாணவர் காவற்படையில் திருவாட்டி வசுந்தராதேவி. - படம்: திருவாட்டி வசுந்தராதேவி.

“திருவாட்டி வசந்தா பார்க்கர், திரு மாரிமுத்து, திரு சிவக்கொழுந்து உள்ளிட்ட ஆசிரியர்கள் எங்களுக்குக் கற்பித்தனர். அப்போது நிலவிய பண்பாடு செழுமையாகவும் அரவணைப்பு மிகுந்ததாகவும் இருந்தது. பள்ளிப்படிப்பு மட்டுமன்றி மற்ற பல்வேறு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவும் எங்களை ஆசிரியர்கள் ஊக்குவித்தனர்,” என்று அவர் தெரிவித்தார்.

பேச்சுப்போட்டி, விவாதப்போட்டி, கலாசார நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு பேச்சாற்றலை மெருகேற்றிய திருவாட்டி வசுந்தரா, இந்த அனுபவத்தால் 1970களில் பழம்பெரும் வானொலி படைப்பாளர்கள் செ.ப. பன்னீர்செல்வம், பி. கிருஷ்ணன் போன்றோரது நிகழ்ச்சிகளில் நம்பிக்கையுடன் பங்குபெற்றதாகக் குறிப்பிட்டார்.

1973ல் உமறுப்புலவர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த திருவாட்டி வசுந்தரா, தொழிற்கல்வி, வீட்டுப்பணிகள் ஆகிய பாடங்களை ஆங்கிலம் வழியாக கான் எங் செங் உயர்நிலைப் பள்ளியில் படித்ததாகக் கூறினார்.

தமிழ்க்கல்விச் சூழலில் தமிழர் பண்பாட்டுக் கூறுகள் அனைத்து நடவடிக்கைகளிலும் இழையோடி வந்ததாகத் திருவாட்டி வசந்தரா எடுத்துரைத்தார்.

1950களிலும் 1960களிலும் பிறந்த மாணவர்களுக்குத் தமிழ்ப்பள்ளிச் சூழலில் பயின்றபோதும் இருமொழித் திறன் இல்லாவிட்டால் பின்தங்கிவிடக்கூடிய நிலை ஏற்படத் தொடங்கிவிட்டது. 

‘ஏ’ நிலைத் தேர்வுக்குப் பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த அவர் பின்பு உபகாரச் சம்பளம் பெற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தார். பிறகு அவர், என்டியுவின் தேசிய கல்வி நிலையத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பு பயின்றார்.

சிஹெச்ஐஜே அவர் லேடி குவீன் அஃப் பீஸ் தொடக்கப்பள்ளியில் துணை முதல்வர் பதவி வரை உயர்ந்தார். எங்கர் கிரீன் தொடக்கப்பள்ளியிலும் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திருவாட்டி வசுந்தரா, மீண்டும் அதே பள்ளியில் பணியில் அமர்த்தப்பட்டார்.

38 ஆண்டுகளாக நீடித்த அரும்பணிக்கு திருவாட்டி வசுந்தராவுக்கு நீண்டநாள் சேவை விருதும் தேசிய தினப் பாராட்டு விருதும் வழங்கப்பட்டது. நெருக்கடி இருந்தபோதும் தோல்விக்கு அஞ்சாமல் முயன்று பார்க்கும் துணிச்சல் தமது தலைமுறையினருக்குப் பொதுவாக இருந்ததை அவர் சுட்டினார். “தடுமாறத் தயங்காமல் கற்க முனைந்தோமானால் பெரும்பாலானவை நமது வசமாகும் என்பதை மாணவர்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்