இந்தியப் பெண்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், ‘மகளிர் தகவல், விழிப்புணர்வுத் தொடர்’ (Women’s Knowledge and Awareness Series) எனும் புதிய திட்டத்தை இந்தியத் தூதரகம் தொடங்கியுள்ளது.
அன்றாடச் சவால்களைச் சமாளிப்பதற்கும் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் வளர்த்துக்கொள்வதற்கும் தேவையான நடைமுறைத் திறன்களையும் தகவல்களையும் பெண்களுக்கு வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியத் தூதரகத்தின் ஒன் ஸ்டாப் நிலையம் ஆதரவில் கடந்த ஜூலை 31ஆம் தேதி நடைபெற்ற இத்தொடரின் தொடக்க நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 120 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நிதி நிர்வகிக்கும் முறைகள், சட்ட விழிப்புணர்வு, மனநல ஆரோக்கியம், நல்வாழ்வு முறைகள் ஆகியவை குறித்து அந்தந்தத் துறைசார்ந்த வல்லுநர்கள் சிறப்புரையாற்றினர்.
சிங்கப்பூரில் சவால்களை எதிர்நோக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண்களுக்கு உரிய நேரத்தில் உதவியை வழங்குவதற்காக 2025 டிசம்பரில் இந்தியத் தூதரகத்தால் அந்த ஒன் ஸ்டாப் நிலையம் தொடங்கப்பட்டது.
கடந்த ஏழு மாதங்களில், குடும்ப அல்லது திருமண ரீதியான சவால்கள், மன உளைச்சல், சட்டம் சார்ந்த கேள்விகள், நிதிப் பற்றாக்குறை உள்ளடங்கிய பல்வேறு விவகாரங்களைக் கையாண்டு, தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ்அப் விசாரணைகள், நேரடி ஆலோசனைகள், தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றின் வழியாக ஏறக்குறைய 60 பெண்களுக்கு அந்நிலையம் ஆதரவளித்துள்ளது.
“சிங்கப்பூரில் உள்ள இந்தியக் குடிமக்களின் நலனை உறுதிசெய்வதில் இந்தியத் தூதரகம் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. சவால்களை எதிர்நோக்கும் இந்தியப் பெண்களுக்கு ஓர் ஆதரவுத் தளத்தை வழங்க ஒன் ஸ்டாப் நிலையத்தைத் தொடங்கினோம். தற்போது, இந்தத் தகவல் தொடர் மூலம் நிதி, மனநலம், நல்வாழ்வு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கிறோம்,” என்று இந்தியத் தூதர் ஷில்பாக் அம்பூலே கூறினார்.
சமூக அமைப்புகள் பங்குதாரர்களுடன் இணைந்து இதுபோன்ற விழிப்புணர்வுத் திட்டங்களை இந்திய வெளிநாட்டு ஊழியர்களுக்காகவும் அமைத்துவருவதாக இந்தியத் தூதர் குறிப்பிட்டார்.
“மகளிர் தகவல், விழிப்புணர்வுத் தொடர், உதவி தேவைப்படும் இந்தியப் பெண்களுக்கு ஒரே கூரையின்கீழ் பல்வேறு அத்தியாவசியச் சேவைகளையும் வழிகாட்டலையும் வழங்குகிறது. இந்தச் செயல்முறை தடையற்றதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் அமைகிறது,” என்று ஊடகத் திட்டத் துறையில் பணிபுரியும் திருமதி முக்தா கோட்போலே பகிர்ந்துகொண்டார்.
மற்ற அவசரகாலத் தலையீட்டுச் சேவைகளைப் போலன்றி, ஒன் ஸ்டாப் நிலையம் நீண்டகால, முழு ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சம்பவமும் தனித்தனியாகப் பரிசீலிக்கப்பட்டு, உடனடி உதவி வழங்கப்படுகிறது. இந்தக் குழுவிலுள்ள வழக்கறிஞர்கள் மூலம், சட்ட வழிகாட்டல், ஆலோசனைப் பரிந்துரைகள், சிங்கப்பூர் அரசாங்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு, மருத்துவப் பராமரிப்பு போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.
பெண்கள் விரிவான, நேரத்திற்கு ஏற்ற உதவியைப் பெறுவதை உறுதிசெய்வதற்காக, சமூக சேவை நிறுவனங்கள், சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்கள், ஆலோசகர்கள், சட்ட வல்லுநர்கள், காப்பகங்கள், தொண்டூழியர்கள் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
உரிய நேரத் தலையீடு, பரிவுமிக்க வழிகாட்டுதல், ஒருங்கிணைந்த ஆதரவு ஆகியவை, பெண்கள் தங்களின் வாழ்க்கையைக் கண்ணியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்தது.
‘மகளிர் தகவல், விழிப்புணர்வுத் தொடர்’ என்பது இந்தியத் தூதரகத்தின் விரிவான உத்தியின் ஒரு பகுதியாகும். எதிர்காலத்தில் பெண்களின் பாதுகாப்பு, நலன் போன்ற பல்வேறு தலைப்புகள் இந்தத் தொடரில் இடம்பெறும்.


