இந்தியாவின் தொன்மையான மொழிகளுக்கு உயிரூட்டிய கொலு

இந்தியாவின் தொன்மையான மொழிகளுக்கு உயிரூட்டிய கொலு

படம்: சுஜாதா கிரு‌ஷ்ணன்

04 Nov 2026 - 7:00 am

2 mins read

ஜாலான் புத்ரி ஜூலா ஜூலியில் இருக்கும் மூன்று தள வீட்டின் ஒரு தளம் முழுவதிலும் அமைக்கப்பட்ட நவராத்திரி கொலு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய மரபுடைமையைப் போற்றும் வகையில் திருவாட்டி சுஜாதா கிருஷ்ணன் அக்கொலுவை வடிவமைத்திருந்தார்.

அதில், நூற்றுக்கணக்கான கைவினைப் பொம்மைகள் கதை சொல்லும் பாணியில் அடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாண்டின் கருப்பொருள், ‘சுருதி முதல் சத்தம்வரை’. முனிவர்கள் கேட்ட ஒலியிலிருந்து அதிகாரபூர்வமான பேச்சு, எழுத்துவரை என்பது இதன் பொருள்.

இந்திய மொழிகளின் தோற்றம், வளர்ச்சி, முக்கியத்துவத்தை இது விவரிக்கிறது.

14 உடுக்கை ஒலிகளுடன் கூடிய நடராஜர், அகத்தியர், முதற்சங்கம், பதினெட்டுச் சித்தர்கள், ஆழ்வார்கள் ஆகியவை கொலுவில் இடம்பெற்ற குறிப்பிட்ட சில பொம்மைகள்.

ஓலைச்சுவடிகளில் எழுத்துகள் செதுக்கப்பட்ட வரலாறும் அதில் அழகாகக் காட்டப்பட்டது.

பெரும்பாலான பொம்மைகளைத் திருவாட்டி சுஜாதாவே சொந்தமாக வடிவமைத்திருந்தார்.

களிமண்ணையும் மறுபயனீட்டுப் பொருள்களையும் கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட புதிய பொம்மைகளை அவர் உருவாக்கியிருந்தார்.

ஆறு மாதகாலம் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டதாகவும் அதனை அமைக்க ஆறு முதல் எட்டு வாரங்கள் தேவைப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 பார்வையாளர்கள் திருவாட்டி சுஜாதாவின் கலைப்படைப்பைக் கண்டுகளித்தனர்.

அதில், இடம்பெற்றிருந்த சிறு கிராமத்துச் சந்தை, புடவைக் கடைகள், பாட்டி பொங்கலும் வடையும் தரும் காட்சி முதலியவை அவர்களைக் கவர்ந்தன.

2008ஆம் ஆண்டில் மூன்று படிகளுடன் தொடங்கிய இவரின் கொலு, இப்போது இளைய தலைமுறைக்கான அறிவுக்கூடமாக மாறியுள்ளது.

இதனை ஒரு பக்தியாகவும் தவமாகவும் கருதுவதாக மவுன்ட்பேட்டன் சமூக மன்றத் தொண்டூழியரான திருவாட்டி சுஜாதா கூறினார். இந்திய மரபுக் கதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பதே தமது நோக்கம் என்றும் அவர் சொன்னார்.

எஃப்1, பாரிஸ் நகரக் கருப்பொருள்களில் மிளிர்ந்த கொலு

2015ஆம் ஆண்டிலிருந்து மாறுபட்ட கருப்பொருளில் ஆனந்த் குடும்பத்தினர் கொலுவை அமைத்து வருகின்றனர்.
2015ஆம் ஆண்டிலிருந்து மாறுபட்ட கருப்பொருளில் ஆனந்த் குடும்பத்தினர் கொலுவை அமைத்து வருகின்றனர். - படம்: சுதா சதீ‌ஷ்

செங்காங் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம், ஃபார்முலா ஒன் கார் பந்தயம், உலகக் கிண்ணக் காற்பந்து, பிந்தான் உல்லாச விடுதி, பாரிஸ் நகரம், ஹாரி பாட்டர் நாவல் போன்ற புதுமையான கருப்பொருள்களில் நவராத்திரி கொலுவை அமைத்திருந்தது.

துபாயில் உள்ள லெகோலேண்டிற்குச் சென்றபோது, தங்கள் மகன் சேகரித்த லெகோ பொருள்களைக் கொண்டு அத்தகைய கொலுவை அமைக்கும் எண்ணம் தோன்றியதாக முன்னாள் மென்பொருள் பொறியாளரான திருவாட்டி பானுமதி சீதாராமன் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டில் சிறிய அளவில் தொடங்கிய இந்த முயற்சி, 2018ஆம் ஆண்டு ஓர் அழகிய காட்சிக்கூட அமைப்பாக உருவெடுத்தது.

லெகோ பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கொலு.
லெகோ பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கொலு. - படம்: ஆனந்த் வி சி

கடந்த காலங்களில் சுவிட்சர்லாந்து, யுனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்ற இடங்களும் கொலுவில் இடம்பெற்றன. 12 வயது மகன் இஷான் ஆனந்த் தமது விளையாட்டுப் பொருள்களைக் கொடுத்துக் கொலு அமைக்க உதவினார்.

திருவாட்டி பானுமதியின் தாயார் கோயம்புத்தூரிலிருந்து அனுப்பிய பாரம்பரிய மண் பொம்மைகளும் அதில் வைக்கப்பட்டன.

பல்லினச் சமூகம் ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூரில் இந்தியரல்லாத பிற சமூகத்தினரும் தங்கள் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களைக் கொலுவிற்கு அழைப்பதாக அவரின் கணவரும் விநியோகத் தொடர் மேலாளருமான திரு ஆனந்த் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

செய்தி: வி.கே.சந்தோஷ்குமார், சக்தி சிங்காரவேலு தமிழாக்கம்: கி. விஜயலட்சுமி

குறிப்புச் சொற்கள்