சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் நா.ஆண்டியப்பன் எழுதிய ‘வாமனத் தீவு’ நூல் அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அந்த நூல் ஆழமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
காரைக்குடியில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அடிகளார், ‘வாமனத் தீவு’ நூல் மூலம் சிங்கப்பூரின் நேர்மை, உழைப்பு, தன்னம்பிக்கை போன்றவை வெளிப்படுவதாகக் கூறினார்.
சிங்கப்பூர்த் தமிழர்கள் பற்றியும் அவர்கள் எவ்வாறு தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாக்கின்றனர் என்பது பற்றியும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞருமான திரு இரா.தினகரன், ‘வாமனத் தீவு’ எனும் தலைப்பு பற்றிக் கருத்துரைத்தார்.
குள்ள உருவத்தில் சென்று மகாபலி என்ற மன்னரிடம் மூன்றடி நிலம் கேட்ட வாமனன், பின்னர் எப்படி விசுவரூபம் எடுத்து மிகப்பெரிய உருவத்தைக் காட்டியத் திருமாலைப்போல மாறினாரோ, அதேபோல மிகச் சிறிய நாடான சிங்கப்பூர் இன்று பொருளியலில் விசுவரூபம் எடுத்து மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றார் திரு தினகரன்.
தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் க.ரவி, சிங்கப்பூரின் கல்வித்தரம் மிக உயர்ந்தது என்று பாராட்டினார்.
கவிஞர் அரு.நாகப்பன் நூலை அறிமுகம் செய்தார். சிங்கப்பூரைப் பற்றி இப்படி ஒரு நூலைத் தாம் இதுவரை வாசித்ததில்லை என்றார் அவர்.
ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் நா.ஆண்டியப்பன், அடிகளார் குறிப்பிட்டதுபோல் உழைப்பால் உயர்ந்த நாடு சிங்கப்பூர் என்றும் துணை வேந்தர் கூறியதுபோல் கல்வியில் சிறந்த நாடு சிங்கப்பூர் என்றும் சொல்லி, அதற்குச் சான்றாக உலகின் தரம்வாய்ந்த 10 பல்கலைக்கழகங்களில் இரண்டு சிங்கப்பூரைச் சேர்ந்தவை என்பதைச் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்குத் தமிழர்கள் தொடக்கத்தில் ஆற்றிய பங்கிற்காகவே 75 விழுக்காட்டுச் சீனர்களின் மொழியும் 5 விழுக்காட்டுத் தமிழர்களின் மொழியும் அதிகாரத்துவ மொழிகளாக உள்ளதையும் அவர் சுட்டினார்.
திறனுக்கு முதலிடம், சலுகை காட்டாமை, ஊழலின்மை, சமத்துவம் ஆகிய நான்கு முக்கியக் கொள்கைகளைச் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ பின்பற்றியதால்தான் நாடு முன்னேற முடிந்தது என்று திரு ஆண்டியப்பன் கூறினார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூலை வெளியிட, பேராசிரியர் ரவி முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். ஏறக்குறைய 100 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

