தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் ரயில் வடிவமைப்பு

2 mins read
c43ca0db-543c-493d-886c-c1ef0c86bb1f
துப்புரவு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வரும் முகம்மது ஆஷிக் ஹொசைன், 27, வேலை முடிந்து சிறுவர்களுடன் காற்பந்து விளையாடுகிறார். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

ஏழு ஆண்டுகளுக்குமுன் பங்ளாதேஷிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார் முகம்மது ஆஷிக் ஹொசைன், 27

காற்பந்துப் பிரியரான அவர், தாம் வேலை செய்யும் செம்பவாங் வட்டாரத்தில் அடிக்கடி சிறுவர்கள் காற்பந்து விளையாடுவதை கண்டுகளித்தார். சில வாரங்களுக்குப் பின்னர், தங்களுடன் காற்பந்து விளையாட அச்சிறுவர்கள் திரு ஆஷிக்கை அழைத்தனர். 

“வாரத்திற்கு மூன்று முறையாவது வேலை முடிந்தவுடன் சிறுவர்களுடன் காற்பந்து விளையாடி மகிழ்வேன்,” என்கிறார் அவர். 

துப்புரவு மேற்பார்வையாளராகப் பணியாற்றும் அவர், வேலை முடிந்து சிறுவர்களுடன் காற்பந்து விளையாடுகிறார். 

“சிறுவர்கள் என்னிடம் எப்போதும் மிக அன்பாகப் பழகுவார்கள். வயது வித்தியாசம் பாராமல் அவர்களை என் சகோதரர்களைப்போல கருதுகிறேன்,” என்று புன்னகையுடன் கூறினார் திரு ஆஷிக்.

திரு ஆஷிக் போல சிங்கப்பூரில் பணிபுரியும் பல வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப்பெண்களும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு. அவர்களை மையமாகக் கொண்டு, வரும் டிசம்பர் 18ஆம் தேதி அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினம் கொண்டாடப்படவுள்ளது. 

அதனை முன்னிட்டு திரு ஆஷிக் உள்ளிட்ட நான்கு வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் பற்றிய புகைப்படங்கள், கதைகளைக் காட்சிப்படுத்தும் எஸ்எம்ஆர்டி ரயில் ஒன்று அங் மோ கியோ ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 9) அறிமுகம் கண்டது. 

இந்த நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக வருகையளித்த மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், வெளிநாட்டு ஊழியர்களும் பணிப்பெண்களும் சமூகத்திற்கு முக்கியப் பங்காற்றுவதாகக் கூறினார். 

“வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் பணிகளில் மட்டுமின்றி, பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டுவதை இப்புதிய ரயில் வடிவமைப்பு காட்டுகிறது. அவ்வகையில், அவர்கள் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கை என்றும் மறக்கக்கூடாது,” என்றார் டாக்டர் கோ. 

மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழு, ஹோல்டிங் ஹேண்ட்ஸ் ஸ்டூடியோ, எஸ்எம்ஆர்டி ரயில்கள் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில், கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு பாதைகளில் டிசம்பர் 9 முதல் 22 வரை வலம் வரும். அந்த ரயிலில் கிட்டத்தட்ட 200,000 பேர் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்புச் சொற்கள்