வகுப்பறையில் அதிக கவனம் செலுத்த இயலாத மாணவர் ஒருவருக்கு கற்றலில் சிரமங்கள் இருப்பதைக் கண்டறிந்த ஆசிரியர் பிரகாஷ் திவாகரன், 36, அவருக்கு உதவ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
தொழில்நுட்பக் கல்விக் கழக கிழக்குக் கல்லூரியில் முழுநேர மின்னணுப் பொறியியல் (electronics engineering) ஆசிரியராகப் பணிபுரியும் பிரகாஷ், தமது வேலை நேரத்தையும் தாண்டி அந்த மாணவருக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுத்தார், பயிற்சி அளித்தார். அது மட்டுமின்றி, மாணவரின் தந்தையுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து, அவருடைய நலத்தில் அக்கறை காட்டினார்.
“செய்ய வேண்டிய பள்ளிப் பாடங்களை சிறுசிறு பிரிவுகளாக்கியதால், அவருக்குப் புரியும்படி பாடங்கள் அமைந்தன,” என்றார் பிரகாஷ்.
இப்படி, ஓர் ஆசிரியராக மட்டுமின்றி, மாணவர்கள் பலருக்கும் ஒரு நல்வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறார் திரு பிரகாஷ்.
இம்மாதம் 22ஆம் தேதி நடந்த வருடாந்தர தொழில்நுட்பக் கல்விக் கழக ஆசிரியர் விருது பெற்ற 22 ஆசிரியர்களில் திரு பிரகாஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கற்பிப்பதோடு நின்றுவிடாது, வாழ்க்கையிலும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழும் ஆசிரியர்களை இந்த விருது சிறப்பிக்கிறது.
12 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் திரு பிரகாஷ், தனித்துவமான முறையில், நடைமுறை வாழ்க்கைச் சூழல்களைப் பயன்படுத்தி, தம்முடைய மாணவர்களுக்குப் பொறியியல் பாடத்தைக் கற்றுத் தருகிறார்.
“பொதுவாக, பொறியியல் சார்ந்த பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு கடினமானதாக இருக்கும். ஒர் இயந்திரத்தின் கோட்பாட்டைக் கற்பிப்பதற்கு பதிலாக, நடைமுறை வாழ்க்கைச் சூழ்நிலைகளில் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காணொளிகள் மூலம் மாணவர்களுக்குக் காட்டுவேன்,” என்கிறார் அவர்
தொடர்புடைய செய்திகள்
பொறியியல் துறை தொடர்ந்து முன்னேறிவரும் சூழலில் அதற்கு ஈடுகொடுப்பது சவாலாக இருப்பினும், அது முடியாததன்று என்று தன் மாணவர்களுக்கு இவர் ஊக்கமூட்டி வருகிறார்.
மேலும், தற்போது பள்ளியில் மின்னணுவியல் இணைப்பாட நடவடிக்கைகள் பிரிவை வழிநடத்தி வரும் திரு பிரகாஷ், பள்ளிப் போட்டிகள், நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு தொழில்நுட்பக் கல்விக் கழக கிழக்குக் கல்லூரியைப் பிரதிநிதித்து, தன் மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, பங்கேற்க ஆதரவளிக்கிறார்.
மாறிவரும் உலகிற்கு ஏற்ப திரண்டு வரும் சவால்கள் பல. எந்த ஒரு சவாலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு, அதற்குத் தீர்வுகாண முயல வேண்டும் என்று இவர் வலியுறுத்தினார்.
“கற்றலில் தொடர்ந்து மாற்றங்கள் இருப்பினும், அது வாழ்நாளுக்கும் தொடரும் ஒரு முதலீடு. அது, மாணவர்களுக்கு மட்டுமல்லாது என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கும் பொருந்தும்,” என்கிறார் திரு பிரகாஷ்.

