ஒரு கதை அல்லது கருத்தைச் சுருக்கி, சுவாரசியமான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் ‘ரீல்ஸ்’ என்ற குறுங்காணொளிகள் ‘இன்ஸ்டகிராம்’, ‘ஃபேஸ்புக்’ போன்ற சமூக ஊடகத் தளங்களில் அதிகம் வலம்வருகின்றன.
இளைய தலைமுறையிடையே வேறுபட்ட முறையில் மொழியார்வத்தைத் தூண்டவும் அவர்களுடையை மொழிவளத்தை மேம்படுத்தவும் குறுங்காணொளிகளை உருவாக்கும் போட்டி நடைபெற்றது. இதில், ஒன்பது உயர்நிலைப் பள்ளிகளின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
‘ஈடுபாடு’ என்ற இவ்வாண்டின் தமிழ்மொழி விழாக் கருப்பொருளை ஒட்டி ஏறத்தாழ 40 குறுங்காணொளிகள் சமர்ப்பிக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 25) உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்டனர்.
சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘டிஜிட்டல் மலரில் தமிழின் நறுமணம்’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக்.
அக்காலத்தில் தமிழ்மொழிக் கற்றல், புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள் வழி தொடர்ந்தது என்று நினைவுகூர்ந்தார் டாக்டர் ஹமீது.
“தமிழ்மொழிக் கற்றல் இக்காலத்தில் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இளையர்கள் சுவாரசியமான குறுங்காணொளிகளை உருவாக்குவதன்வழி தமிழ்ப் பற்றைத் தொடர்ந்து பேணுகிறார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்,” என்று தமிழ் முரசிடம் அவர் கூறினார்.
நாளைய தலைவர்களாக உருவெடுக்கும் இன்றைய மாணவர்கள் மின்னிலக்கம், சமூக ஊடகங்களில் அதிக அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ளனர் என்று குறிப்பிட்டார் சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தலைவர் ராஜா முகம்மது மைதீன்.
“அவர்கள் வழியிலேயே சென்று தமிழ்மொழி ஆர்வத்தைப் பயிரிடுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
‘டிஜிட்டல் மலரில் தமிழின் நறுமணம்’ நிகழ்ச்சியில் தனிப் பிரிவின்கீழ் இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்றார் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் உயர் தமிழ் பயிலும் ஸ்மிருதி, 14.
“நேரப் பற்றாக்குறை எனக்குச் சவாலாக இருந்தது. இருப்பினும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொழியாற்றலைப் பறைசாற்றுவது புதிய அனுபவமாக இருந்தது,” என்று அவர் சொன்னார்.
குழுப் பிரிவில் பிராட்ரிக் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வாகை சூடினர். தமிழ் இலக்கியக் கற்றல் சார்ந்த குறுங்காணொளி ஒன்றை அவர்கள் சமர்ப்பித்தனர்.
“இந்த வெற்றியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்றார் மாணவி மதனிக்கா, 15.
“கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் எங்கள் நோக்கம் ஒன்றுபட்டிருந்ததால் இந்த முயற்சியை மேற்கொள்ள முடிந்தது,” என்று மாணவி அனிகா, 15, குறிப்பிட்டார்.

