ஆசிய பசிபிக் வட்டாரத்திலேயே சிங்கப்பூர் ஊழியர்கள்தான் மற்ற நாடுகளைவிட அதிக நாள்கள் விடுப்பு எடுக்கின்றனர் என்றும் தங்களுக்குக் கிடைக்கும் ஆண்டு விடுமுறையை ஒருநாள்கூட வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் ‘டீல்’ நிறுவனத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
2025ஆம் ஆண்டில் விடுப்பு கோரிய ஆசிய பசிபிக் வட்டாரத்தின் 4,500க்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்களின் தரவுகளை ஆய்வு செய்து, இவ்வாண்டு ஜூன் மாதம் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆண்டு விடுமுறையைப் பயன்படுத்துவதில் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் சிங்கப்பூர் ஊழியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். பல்வேறு நாடுகளில் ஊழியர்கள் எடுத்துக்கொண்ட சராசரி விடுப்பு நாள்களின் பட்டியல்:
சிங்கப்பூர்: 19 நாள்கள்
ஹாங்காங்: 16.5 நாள்கள்
ஆஸ்திரேலியா: 16 நாள்கள்
இந்தோனீசியா & மலேசியா: 15.5 நாள்கள்
தென்கொரியா: 15 நாள்கள்
சிங்கப்பூர் ஊழியர்களுக்கு அதிகாரபூர்வமாக சராசரியாக 18 நாள்கள்தான் விடுப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், முந்தைய ஆண்டுகளில் எஞ்சிய விடுப்பு நாள்களை வீணாக்காமல், அதையும் சேர்த்துப் பயன்படுத்தி பலர் 19 நாள்கள் வரை விடுமுறை எடுத்துள்ளனர்.
ஒருநாளைக்கூட வீணாக்குவதில்லை
சிங்கப்பூர் ஊழியர்கள் அதிக விடுப்பு எடுப்பது மட்டுமின்றி, தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறையை முழுமையாகவும் பயன்படுத்துகிறார்கள் என்பது தரவுகள்மூலம் தெரியவந்துள்ளது.
2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் 57 விழுக்காட்டு ஊழியர்கள் தங்களின் முழு ஆண்டு விடுமுறையையும் பயன்படுத்தியுள்ளனர்.
77 விழுக்காட்டு ஊழியர்கள் தங்களுக்குரிய விடுப்பில் குறைந்தபட்சம் 80 விழுக்காட்டைப் பயன்படுத்தியுள்ளனர்.
மாறாக, ஹாங்காங்கில் 43 விழுக்காட்டு ஊழியர்கள் மட்டுமே முழு விடுமுறையையும் எடுத்துள்ளனர்; மலேசியாவில் இவ்விகிதம் 51 விழுக்காடாக உள்ளது.
விடுப்பு எடுப்பதில் நிறுவனங்களின் கொள்கைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிங்கப்பூரில் ‘நீக்குப்போக்கான விடுப்புக் கொள்கை’ உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சராசரியாக 20.75 நாள்கள் விடுப்பு எடுத்துள்ளனர்.
ஆனால், ‘குறிப்பிட்ட விடுப்பு நாள்கள்’ மட்டுமே கொண்ட ஊழியர்கள் 19 நாள்கள்தான் விடுப்பு எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. விதிவிலக்காக, இந்தோனீசியாவில் மட்டும் குறிப்பிட்ட விடுப்பு நாள்கள் கொண்ட ஊழியர்கள், நீக்குப்போக்குத்தன்மை கொண்ட ஊழியர்களைவிட அதிக விடுமுறை எடுத்துள்ளனர்.
விடுமுறை எடுப்பதில் வெவ்வேறு பாணி
ஆசிய வட்டாரத்தில் மக்கள் விடுமுறை எடுக்கும் பாணியில் சில சுவாரசியமான வேறுபாடுகள் உள்ளன.
பொதுவாக அனைத்து நாடுகளிலும், மனநலத்திற்காகவோ அல்லது வெள்ளிக்கிழமையுடன் வார இறுதியை இணைக்கவோ எடுக்கப்படும் ‘ஒருநாள் விடுப்பு’தான் அதிகமாக உள்ளது.
ஹாங்காங் ஊழியர்கள் பெரும்பாலும் வார இறுதியுடன் இணைத்து ‘2 நாள்கள்’ குறுகிய விடுமுறை எடுக்க விரும்புகிறார்கள்.
ஆனால், சிங்கப்பூர் ஊழியர்கள் ஹாங்காங் ஊழியர்களைவிட, திட்டமிட்டு ‘4 நாள்கள் அல்லது அதற்கு மேற்பட்ட’ நீண்ட தொடர் விடுமுறைகளை எடுக்கவே அதிகம் விரும்புகின்றனர்.
தொடர்ச்சியான நீண்ட விடுமுறைகள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் மனநலத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே, சிங்கப்பூர் ஊழியர்களின் இந்த நீண்ட விடுப்பு எடுக்கும் பழக்கம் அவர்களை வேலைப் பளுவிலிருந்து காக்கும் ஒரு சிறந்த கேடயமாக அமைகிறது என்றும் அறியப்படுகிறது.
நிறுவனங்களுக்கான பாடம்
டீல் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டாரப் பொது மேலாளர் மார்க் சாம்லால், “சிங்கப்பூரில் உள்ள ஊழியர்கள் தங்களின் விடுப்புகளைப் பயன்படுத்துவதில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதை எங்களது தரவுகள் காட்டுகின்றன,’’ என்றார்.
விடுப்புகளைச் சேமித்து வைக்கும் விருப்பம், பணிச்சுமை சார்ந்த அழுத்தங்கள், அர்த்தமுள்ள இடைவெளிகளுக்காக முற்றிலும் பணியிலிருந்து விலகி இருக்க வேண்டியதன் தேவை ஆகியவற்றை விடுப்பு நாள் தொடர்பில் நிலவும் இந்த அணுகுமுறை எடுத்துக்காட்டலாம் எனவும் திரு மார்க் கூறினார்.
பாதிக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் தங்களுக்குரிய அனைத்து விடுப்புகளையும் பயன்படுத்துவதைச் சுட்டிய அவர், ‘‘சம்பளத்துடனான விடுப்பு என்பது இனி ஒரு சலுகை மட்டுமன்று. முதலாளிகள் ஊழியர்களைத் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தவும், நீண்ட காலம் தக்கவைக்கவும் உதவும் ஒரு வழியாகும்,” என்றும் சொன்னார்.
இதுகுறித்து கருத்துரைத்த பொருளியல் வல்லுநர் லேரன் தாமஸ், “சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு விடுப்பு எடுப்பதற்கான வாய்ப்பும், நிர்வாகத்தின் அனுமதியும் கிடைக்கும்போது, அவர்கள் தங்களை வேலைச் சூழலிலிருந்து முழுமையாக விடுவித்துக்கொள்ள விடுமுறையைப் பயன்படுத்துகின்றனர்.
“நிறுவனங்கள் விடுப்புக் கொள்கைகளை வெறும் கையேட்டோடு நிறுத்தாமல், ஊழியர்களின் நல்வாழ்வையும் நிறுவனத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்திருக்க உதவும் ஓர் உத்திசார்ந்த திறவுகோலாகக் கருத வேண்டும்,” என்று தெரிவித்தார்.

