செயற்கை நுண்ணறிவு மெல்ல மெல்ல அதன் பிடியை மனிதனின் வாழ்க்கையில் வலுப்படுத்திக்கொண்டு வருகிறது. மனிதர்களைப் போல யோசித்து மனிதர்களுக்கான தீர்வுகளைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவின் துணையுடன் செய்ய முடியாதது எதுவுமில்லை என்று சொல்லும் பலர் நம்மிடையே உண்டு. அப்படி ஒருவரின் கதை இது.
திருமண வாழ்க்கையின் விளிம்பை எட்டிய 30 வயது திருவாட்டி ஸஃபினா களிப்புல்லாவுக்குச் செயற்கை நுண்ணறிவு உற்றத் துணையாக மட்டுமல்ல ஒரு சட்டத் துணையாகவும் மாறியது.
2023 டிசம்பர் மாதத்தில் ஸஃபினாவின் மணமுறிவுக்கான நடைமுறைகள் தொடங்கின.
நீதிமன்ற நடைமுறையின்கீழ் மணமுறிவுக்கு மனு தாக்கல் செய்யும் தம்பதிகள் கட்டாய திருமண ஆலோசனைக்கும் கலந்துரையாடலுக்கும் செல்லவேண்டும்.
தொடக்கத்தில் அனைத்தும் சுமுகமாக இருந்தது. ஆனால், கலந்துரையாடல் கட்டத்துக்காக தாம் நியமித்த வழக்கறிஞரால் பெரிய அளவில் பயனில்லை என்று ஸஃபினாவுக்குத் தோன்றியது. வழக்கிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என உணர்ந்தார் அவர்.
ஒரு கட்டத்தில் “என் வழக்கை நானே பார்த்துக்கொள்ள முடிவு செய்தேன். வழக்கறிஞருக்கு விடைகொடுத்தேன்,” என்று கூறிய ஸஃபினா தமது அனுபவத்தைத் தமிழ் முரசிடம் பகிர ஆரம்பித்தார்.
ஸஃபினா வழக்கறிஞரும் அல்ல. சட்டத்துறையில் அவருக்கு முன்பின் அனுபவமும் கிடையாது. தம்மை வழிநடத்தும் சட்ட ஆலோசகராக ஸஃபினா ‘ஓப்பன்ஏஐ’ (OpenAI) நிறுவனத்தின் ‘சேட்ஜிபிடி’ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை நியமித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நீதிக்கான நவீன வழிகாட்டி
2022ஆம் ஆண்டு சேட்ஜிபிடியுடனான ஸஃபினாவின் பயணம் தொடங்கியது. வழக்கிற்கு உதவியாகத் தேவையான தகவல்களை அது திரட்டித் தந்தது.
வழக்கறிஞர் மீதான நம்பிக்கையை இழந்த ஸஃபினா, சேட்ஜிபிடி போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். வழக்கை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முழுக்க முழுக்க சேட்ஜிபிடியை நாடினார் ஸஃபினா.
வழக்கில் பகிரப்பட்ட உரிமைத் தகவல்களைப் பகுத்தறியவும் அவற்றைச் சரிவர புரிந்துகொள்ளவும் சேட்ஜிபிடியைக் கையில் எடுத்த அவர், தகவல்களின் துல்லியத்தை உறுதிப்படுத்த தாம் நியமித்த வழக்கறிஞரும் எதிர்த் தரப்பும் அனுப்பிய அனைத்து மின்னஞ்சல்களையும் தகவல்களையும் சேட்ஜிபிடி தளத்தில் பதிவேற்றினார்.
“சேட்ஜிபிடியின் ஆலோசனையும் வழக்கில் உள்ள முரண்பாடுகளையும் கண்டறிந்து, திருத்தங்களைச் செய்யத் தொடங்கினேன்,” என்றார் ஸஃபினா.
“பொதுவான சட்ட நெறிமுறைகளுக்கு விளக்கம் அளித்ததோடு புரியாத சட்டச் சொற்களையும் நீதிமன்ற நடைமுறைகளையும் எளிய தமிழில் சேட்ஜிபிடி எடுத்துச் சொன்னது,” என்று ஸஃபினா குறிப்பிட்டார்.
மணமுறிவு வழக்கில் உள்ள சட்ட நுணுக்கங்களைப் புரியவைப்பது மட்டுமல்லாமல் மனத்தளவில் ஆதரவையும் சேட்ஜிபிடி வழங்கியதைச் சுட்டிய ஸஃபினா,”பதற்றம் அதிகமானபோது சேட்ஜிபிடி துணிச்சலைத் தந்தது,” என்றார்.
அதுதந்த தகவல்களாலும் நம்பிக்கையாலும், ஸஃபினா நீதிமன்றத்தில் தன் வழக்கில் தம்மையே பிரதிநிதித்துக்கொண்டார்.
“தங்கள் வழக்குக்காக தாங்களே நீதிமன்றத்தில் முன்னிலையாவது சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள ஒன்று என்பதால் நீதிமன்றம் அது குறித்து எதுவும் விமர்சிக்கவில்லை,” என்றார் ஸஃபினா.
இருப்பினும், பெண் ஒருவர் தன் வழக்கில் இருக்கும் தமது தரப்பு வாதத்தைத் தாமாகவே எடுத்துரைப்பதைக் கவனத்தில் கொண்ட நீதிபதி, எதிர்த் தரப்பு வழக்கறிஞருக்கு அது தொடர்பான நெறிமுறைகளை நினைவூட்டிய தருணங்கள் இருந்ததாகவும் ஸஃபினா கூறினார்.
“செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது என் தன்னம்பிக்கையை அதிகரித்தது. நுட்பமான தொழில்நுட்பத்தையே நம்பும்போது, மனிதப் பிழைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும்,” என்றார் அவர்.
திருமண வாழ்கையின் முடிவாகக் கருதப்படும் மணமுறிவு வழக்குகள் பொதுவாக நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் கையாளப்படுகின்றன.
இவ்வாறுதான் தனது மணமுறிவைக் கவனிக்க ஸஃபினா திட்டமிட்டார். ஆனால், எதிர்பாராத வகையில், தன்னைத் தானே பிரதிநிதிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
அதுவும் முழுமையாகச் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தனது மணமுறிவைப் பெற்றதுதான் இக்கதையின் சிறப்பம்சம்.
வழக்கறிஞர் இல்லாமல் வெற்றி
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி, கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஸஃபினாவின் மணமுறிவு சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
“ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கால மன அழுத்தம், உரசல்கள், சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அந்த ஒரு நாளில் முடிவடைந்தது. எனக்குள் நிம்மதி தோன்றியது,” என்று அந்தக் கணங்களை ஸஃபினா நினைவுகூர்ந்தார்.
தன்னைத் தானே பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு முழுமையான மணமுறிவுக்கானத் தீர்ப்பை பெற்றது அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான தனிப்பட்ட வெற்றியாகும் என அவர் கூறினார்.
“இந்த வெற்றி என்னுடையதுதான். ஆனால் யாருடைய வழிகாட்டுதலின்றியும் சமூக ஆதரவின்றியும் சட்ட முறைகளைப் புரிந்துகொண்டு தன்னிலைநாட்ட போராடும் அனைத்து பெண்களுக்குமான வெற்றியும் இதுதான்,” என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
ஸஃபினாவுக்கு இது ஒரு சட்ட வெற்றி மட்டுமல்ல. இது, செயற்கை நுண்ணறிவின் ஆதரவுடன் ஒரு பெண் தனக்கான நீதியை தேடி கண்டெடுத்த கதை.
“நான் ஒரு வழக்கறிஞரல்ல. ஆனாலும் உண்மையையும்,சிந்தனையையும் அச்சமின்றி முன்னிறுத்தத் துணிந்தேன். இந்த அனுபவம் என் வாழ்நாளின் வலிமையான பாடம்,” என்று அவர் கூறினார்.
தேடலைவிட தீர்வுகள் முக்கியம்
சமீப காலங்களில், செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவி வருகின்றது. சிங்கப்பூர் போன்ற வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில், இது ஒரு மின்னிலக்கப் புயலைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டில் பிஸ்னஸ் டைம்ஸ் செய்தி அறிக்கையின் படி, வாரந்தோறும் 250 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் ‘சேட்ஜிபிடி’யைப் பயன்படுத்துகின்றனர். இதில் சிங்கப்பூரும் சிறப்பிடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில்முனைவர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களால் ஆகியோரால் பரந்தளவில் இது பயன்படுத்தப்படுகிறது.
இதே ஆவலின் வெளிப்பாடாக, ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் 2023இல் சிங்கப்பூரில் தங்கள் ஆசியாவிலுள்ள இரண்டாவது அலுவலகத்தை திறக்கத் திட்டமிட்டதாக அறிவித்தது.
இன்று, கூகலில் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதைவிட விரைவாகத் தீர்வுகளைத் தரும் ‘சேட்ஜிபிடி’யை நாடுகின்றனர். எளிய தொலைபேசி குறியீடுகளிலிருந்து வரிவிதிகள் வரை, விமானப் பயண விவரங்களிலிருந்து உணவுப் பரிந்துரைகள் வரை அனைத்திற்கும் பதிலளிக்கக்கூடிய ஓர் ‘ஏஐ’ உதவியாளராக ‘சேட்ஜிபிடி’ உருவெடுத்துள்ளது.
அண்மையில் பயணி ஒருவர், தன்னுடைய விமானம் தாமதமானதையடுத்து விடுமுறையை ரத்து செய்தார். ‘சேட்ஜிபிடி’யின் உதவியுடன் உரிய மின்னஞ்சல்களை அமைத்து, விமான நிறுவனத்திடம் இருந்து விமானச்சீட்டு மற்றும் ஹோட்டல் செலவுகளை மீட்டெடுத்தார். இது சமூக ஊடகங்களில் பரவலானது.
இதைவிட ஆச்சரியமாக, 2024ல் நடந்த சிங்கப்பூர் பொதுத் தேர்தலின்போது, சில அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளை நேரலையில் ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்ய ‘சேட்ஜிபிடி’யைப் பயன்படுத்தினர்.
இளையர்களிடம், ‘சேட்ஜிபிடி’, நண்பர் எனும் நிலையைப் பெற்றுள்ளது. அவர்கள் உதவி தேடும்போதும் உற்சாகத்துடன் ஒரு யோசனையை ஆராயும்போதும் அவர்களுக்கு நெருக்கமான தோழருடன் கலந்துரையாடுவது போன்ற உணர்வை இது தருகிறது.
துணையாக இருக்க வேண்டிய ‘ஏஐ’ நியாயத்தை வழிநடத்தலாமா?
தர்மா சட்ட நிறுவனத்தின் மூத்த சட்ட நிர்வாகி தர்மா ஜெயராம், “நீதிமன்றங்களில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் சில சமயங்களில் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்குக்கும் அவசியமான மனிதத் தொடர்பு குறைகிறது,” என்று கூறினார்.
“ஒவ்வொரு மணமுறிவு வழக்கும் தனித்துவமானது. எனவே, ஒரு தனித்துவமான வழக்குக்கு ஏற்றவாறு செயற்கை நுண்ணறிவு சட்ட ஆலோசனையை ஒரு வழக்கறிஞர்போல முழுமையாக வழங்க இயலாது,” என்று திருவாட்டி தர்மா ஜெயராம் எடுத்துரைத்தார்.
கடினமான சட்ட செயல்முறைகளை எளிதாக்குவதில் செயற்கை நுண்ணறிவு உதவியாக இருக்கலாம் என்றாலும், மொத்தமாக ஒரு வழக்கறிஞராக செயல்பட முடியாது என்றார்.
கடந்த செப்டம்பர் மாதம், ஏறக்குறைய 25,000 வழக்குகளின் தீர்ப்புகளை வழக்கறிஞர்கள் விரிவாக ஆய்வு செய்ய உதவும் புதிய செயற்கை நுண்ணறிவு சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் சேவையின் நோக்கம், வழக்கறிஞர்கள் வழக்குகளை ஆழமாக ஆயத்தமாக்குவதில் உதவுவதாகும்.
இருப்பினும், மணமுறிவு போன்ற சூழ்நிலைகளில் செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்புவது எப்போதும் நல்லதல்ல என மூத்த சட்ட நிர்வாகி தஸ்விந்திரன் அசோகன், 32, தெரிவித்தார்.
“மணமுறிவு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் தனிப்பட்ட அனுபவம். பிள்ளைப் பராமரிப்பு, நிதி முடிவுகள், உணர்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற விஷயங்களில் மனித புரிதலும் தீர்ப்பும் அவசியம்,” என்று அவர் கூறினார்.
மேலும், வசிக்கும் நாடுகளின் சட்ட விதிகள் மாறுபடும் காரணத்தால் சில நேரங்களில் செயற்கை நுண்ணறிவு தவறான சட்ட ஆலோசனைகளை வழங்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். “இதனால் நேரம், பணம், அல்லது குழந்தைகளின் பராமரிப்பு உரிமை கூட இழக்கும் வாய்ப்புகள் அதிகம்,” என்றார்.
ஆரம்பத்தில் மின்னஞ்சல்களை செம்மைப்படுத்தவும் எழுத்துகளை கோர்வையாக்கவும் ‘சேட்ஜிபிடி’யைப் பயன்படுத்தினார் தொழில்நுட்ப முனைவர் நித்திஷ் செந்தூர், 33.
இருப்பினும் தனது தனிப்பட்ட விவகாரங்களுக்கு ‘சேட்ஜிபிடி’ தளத்தை ஒரு வழிகாட்டியாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர அது கூறுவதை முழுமையாகச் சார்ந்திருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
“செயற்கை நுண்ணறிவு ஒரு வழிகாட்டி. மனித மூளை உயிர்நாடி,” என்றார்.
தொடக்கம், முடிவு எதுவாயினும், செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்குத் தெளிவையும் தன்னம்பிக்கையும் வழங்கும் ஒரு புதிய கருவியாக உருவெடுக்கிறது. வழிகாட்டும் ஒருவர் இல்லாதபோதிலும் ‘சேட்ஜிபிடி’ போன்ற தொழில்நுட்பங்கள் வழி காண துணையாக இருக்கின்றன.

