மாணவர்களின் ஆய்வுகளை அரங்கேற்றும் ‘ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்’ நிகழ்ச்சி

மாணவர்களின் ஆய்வுகளை அரங்கேற்றும் ‘ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்’ நிகழ்ச்சி

1 mins read
c77e6be9-3e99-4ab1-83df-05452adb247f
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறவிருக்கும் ‘ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்’ நிகழ்ச்சி. - படம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்

பல்வேறு தலைப்புகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், தாங்கள் தயாரித்த ஆய்வுகளை ஆர்வலர்கள் முன்னிலையில் படைக்கவுள்ளனர்.

சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கம், தமிழ் வளர்ச்சிக் குழு ஆகியவற்றின் ஆதரவில் 13வது ஆண்டாக அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் அதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்மொழி விழா 2026ன் ஓர் அங்கமாக, ‘ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்’ என்ற அந்த நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளர்களாக, முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனும் தமிழகத்தைச் சேர்ந்த பொதுநல ஆர்வலரும் வழக்கறிஞருமான திரு ஸ்டாலின் குணசேகரனும் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

முன்னதாக, உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள் ஆகியவற்றிலிருந்து கிட்டத்தட்ட 70 மாணவர்கள் ‘ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்’ என்ற தலைப்பில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளைக் கடந்த மார்ச் 29ஆம் தேதி படைத்திருந்தனர்.

அந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள், தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை மேடையில் படைக்கவுள்ளார்கள். வெற்றியாளர்களுக்கும் மேலும் சிலருக்கும் பரிசுகள் வழங்கப்படும். பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளன.

நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்களான திரு இரா. தினகரன், திரு முஹம்மது இர்ஷாத் இருவரும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள்.

சிங்கப்பூர்க் கட்டுமானத் துறை ஆணையர் தனபால் காளியண்ணனும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

மேல்விவரங்களுக்கு 9451 3686 என்ற எண்ணில் சரவணக்குமாரைத் தொடர்பு கொள்ளவும்.

குறிப்புச் சொற்கள்