தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூக முயற்சியாக உருவாகியுள்ள நூலகம்

2 mins read
eda05012-29f5-4197-9bcb-bb5a600c2eb9
சிங்கப்பூர் இலக்கியம், பட நூல்கள், ஆங்கில நாவல்கள், கவிதை நூல்கள், சிறுவர் கதை நூல்கள் என சுமார் 5000 புத்தகங்கள் ‘கேஷுவல் போயட் லைப்ரரி’ நூலகத்தில் இரவலுக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  - படம்: Casual Poet Library
multi-img1 of 2

ஜப்பானிய மீன்பிடி நகரமான யாயிசுவுக்கு ஒரு முறை சென்றபோது, அங்குள்ள மக்கள் சேர்ந்து உருவாக்கிய ஒரு நூலகத்தை நேரில் கண்டு வியந்தார் தனியார் புகைப்படக் கலைஞர் ரெபெக்கா டோ.

சிங்கப்பூர் புத்தகக் கடைகள், தனியார் நூலகங்களை ஆட்டிப்படைக்கும் அதிகளவு வாடகை விலைகளை நிர்வகிக்க இதுபோன்ற சமூக நூலகம் ஒரு சிறந்த யோசனையாக இருக்கும் என்றும் எண்ணினார். 

அவ்வாறு பிறந்ததுதான் ‘கேஷுவல் போயட் லைப்ரரி’ (Casual Poet Library).  

அமைதியான புக்கிட் மேரா குடியிருப்புப் பேட்டையில் அமைந்துள்ளது இந்த நூலகம்.

180 புத்தக அலமாரிகள் கொண்ட இந்த நூலகம், காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை ஒரு சமூக நூலகமாக இயங்குகிறது. ஒவ்வொரு புத்தக அலமாரியையும் நபர்கள் வாடகைக்கு எடுத்து அதில் அவர்களுக்குப் பிடித்தமான, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் நூல்களை நிரப்பலாம்.  

தற்போது, இந்தச் சமூக நூலகத்தில் இருக்கும் எல்லாப் புத்தக அலமாரிகளும் நூல் பிரியர்கள் பலரால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் இலக்கியம், பட நூல்கள், ஆங்கில நாவல்கள், கவிதை நூல்கள், சிறுவர் கதை நூல்கள் என சுமார் 5000 புத்தகங்கள் இரவலுக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

ஒருவர் ஆண்டுக்கு $25 கட்டணம் செலுத்தி ஐந்து புத்தகங்கள் வரை இரவல் வாங்கலாம். 

கூகுள் நிறுவனத்தில் ஓராண்டு காலம் தரவுப் பகுப்பாய்வாளராகப் பணிபுரிந்து தற்போது வேலையிலிருந்து தற்காலிகமாக ஓய்வுபெற்ற ஷ்ரேயா ஷர்மா, 33, இந்த நூலகத்தில் ஒரு அலமாரியை வாடகைக்குப் பெற்றுள்ளார்.

அவர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த நூலகத்தில் ஒரு நூலகராகத் தமது காலைப் பொழுதை அர்ப்பணித்தும் வருகிறார்.

கவிதை நூல்களை விரும்பி வாசிக்கும் ஷ்ரேயா, தமது அலமாரியில் பல கவிதைப் புத்தகங்களை மற்றவர்கள் இரவல் பெறுவதற்காக வைத்திருக்கிறார். 

“என் புத்தக அலமாரியில் இப்போது ஒருசில கவிதைப் புத்தகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

கடந்த மூன்று ஆண்டுகளில், ‘கினோகுனியா’ (Kinokuniya), ‘டைம்ஸ்’ (Times) போன்ற பெரிய புத்தகக் கடைகளும், ‘புக்ஸ் எக்சுவலி’ (Books Actually), ‘சீ பிரீஸ் புக்ஸ்’ (Sea Breeze Books) போன்ற தனியார் புத்தகக் கடைகளும் தங்கள் கதவுகளை மூடியுள்ளன.

மிரட்டல் விடுக்கும் வாடகைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு முயற்சிதான் ‘கேஷுவல் போயட் லைப்ரரி’ என்று உரிமையாளர் ரெபெக்கா தெரிவித்தார். 

ஈராண்டு குத்தகைக்கு மாதம் $43, குறைந்தது ஆறுமாத குத்தகைக்கு $49 எனப் புத்தக அலமாரிகளை ஒருவர் வாடகைக்குப் பெறலாம்.  

இதனால், ஒரு மாதத்துக்கான $5000 வாடகையை ரெபெக்கா சிரமமின்றி செலுத்த முடிகிறது. 

இந்த சமூக முயற்சியால் ஒரு புத்தகக் கடை உரிமையாளர் அல்லது நூலகராக ஒருவரால் ஆகிவிட முடிகிறது. இது ஒருவித பகிர்வுப் பொறுப்புணர்வைத் தூண்டுகிறது என்றார் ஷ்ரேயா. 

“இதுபோன்ற சமூக முயற்சிகளில் ஈடுபடுவதால் வாசிப்பு மற்றும் புத்தகங்களின் மீதான அன்பைப் பகிர்ந்துகொள்ளும் பலரையும் சந்திக்கலாம். சமூகத்துடன் இணைவதற்கு இது ஒரு சிறந்த வழியும் ஆகும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்