‘டம்பெல்ஸ்’ எடையைப் பயன்படுத்தி, ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ எனப்படும் பயிற்சியை அதிகமானோர் செய்து சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் முயற்சி நீ சூன் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) இடம்பெற்றது.
தரையிலிருந்து எடையைத் தோள்பட்டை வரை தூக்கி, பின்னர் அதைத் தலைக்குமேல் தூக்குவதே ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ அசைவாகும்.
தங்களின் உடலுறுதிக்கேற்ப வெவ்வேறு எடைகளைத் தூக்கும் முயற்சியில் கிட்டத்தட்ட 495 பங்கேற்பாளர்கள் ஈடுபட்டனர்.
காத்திப் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பன்னோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற இந்தச் சாதனை முயற்சியில் உள்துறை, தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா.சண்முகம், பங்கேற்பாளர்களுடன் இணைந்து முயற்சியைத் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் சண்முகத்துடன் இதர நீ சூன் குழுத்தொகுதி அடித்தள அமைப்பு ஆலோசகர்களான கோ ஹன்யான், சையது ஹருன் அல்ஹப்ஷி, ஜாக்சன் லாம், லீ ஹுவேய் யிங் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வெள்ளை நிற டி-சட்டையும் அரைக்கால்சட்டையும் அணிந்திருந்த அமைச்சர் சண்முகம், முயற்சி தொடங்குவதற்கு முன்னர் எடையைத் தூக்கி ஆயத்தமானார்.
பங்கேற்பாளர்களை ஊக்குவித்த அவர், அனைத்து வயதினரும் இந்த முயற்சியில் கலந்துகொண்டதற்காகப் பாராட்டினார்.
முதலில் 12.5 கிலோ எடையைத் தூக்கிய அமைச்சர் சண்முகம், பின்னர் 15 கிலோவுக்கு எடையை அதிகரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதர அடித்தள அமைப்பு ஆலோசகர்களும் ஒன்றிணைந்து பங்கேற்பாளர்களுக்கு ஊக்கமளித்து ஆரவாரத்துடன் எடை தூக்கினர்.
அரை மணி நேரத்துக்குமேல் நடைபெற்ற இந்த முயற்சியில் அனைவரும் தோளோடு தோள் நின்று ஒருவருக்கொருவர் ஆதரவளித்து இறுதியில் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றனர்.
வாரயிறுதி நாளில் காலை வேளையாக இருந்தபோதும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக நீ சூனில் ஏராளமானோர் ஒன்றுகூடினர்.
நீ சூன் குழுத்தொகுதி அடித்தள அமைப்பு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘நீ சூன் ஃபிட்னஸ் ஃபியஸ்டா’ உடற்பயிற்சி நிகழ்ச்சியில் இந்தச் சாதனை முயற்சி முக்கிய அங்கம் வகித்தது.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையையும் சமூகத் தொடர்பை வலுப்படுத்துவதையும் ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி, ஆரோக்கிய நடவடிக்கைகள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
பங்கேற்பாளர்களில் மூன்று தோழிகளான பிரிசில்லா குமாரி, 64, சுஹாசினி ரேச்சல், 42, ராஜி ராஜேஸ்வரி, 61, ஆகியோரும் அடங்குவர்.
உடலைச் சீராக வைத்திருப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இந்த மூவரும் எடை தூக்கி இன்பமடைந்ததோடு அமைச்சர் சண்முகம் எடை தூக்குவதை நேரில் கண்ட தருணத்தை மறக்கமுடியாத ஒன்று என்றனர்.
முதல்முறையாக எடை தூக்கிய பிரிசில்லா குமாரி, இதர பங்கேற்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டதால் தன்னால் மூன்று கிலோகிராமிலிருந்து நான்கு கிலோகிராமிற்கு எடையை அதிகரிக்க முடிந்ததாகச் சொன்னார்.
இந்தியர்கள் பலர் இத்தகைய சமூக முயற்சிகளில் ஈடுபட முன்வர வேண்டுமென்று கூறிய அவர், அப்போதுதான் சமூகத் தொடர்பு அதிகரிக்கும் என்றார்.
உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரான ராஜி ராஜேஸ்வரி முன்பு ஒப்பிடுகையில், இத்தகைய உடற்பயிற்சி நிகழ்ச்சியில் இந்தியர்களின் பங்கேற்பு சற்று அதிகரித்திருந்தாலும் அது இன்னும் மேம்பட வேண்டுமென்றார்.
பல்கலைக்கழகம் மூலம் நிகழ்ச்சியைப் பற்றித் தெரிந்துகொண்ட யாமினி கார்ல் மார்க்ஸ், 19, தனிஷ்கா, 20, காலை 8 மணிக்கே பொங்கோலிலிருந்து நீ சூனுக்கு வந்துவிட்டனர்.
சாதனை முயற்சியில் பங்கேற்ற அவர்களுக்கு இதன் பிறகு உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று வெவ்வேறு பயிற்சிகளில் ஈடுபட ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

