பாரம்பரியத் தொழில்களைப் பாதுகாக்க தீர்வு நாடும் லிஷாவின் புதிய நிர்வாகக் குழு

பாரம்பரியத் தொழில்களைப் பாதுகாக்க தீர்வு நாடும் லிஷாவின் புதிய நிர்வாகக் குழு

2 mins read
d62f5e68-3961-4c77-8816-85ab3493902e
சிங்கப்பூர் இளையர்களை மீண்டும் லிட்டில் இந்தியாவுக்கு ஈர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளதாக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) புதிய நிர்வாகக் குழு தெரிவித்தது. - படம்: லிஷா

மரபுடைமை வர்த்தகர்கள், குறிப்பாகப் பாரம்பரியத் தொழில்கள் எதிர்கொள்ளும் சவால்களின் தொடர்பில் கொள்கை ரீதியான தீர்வுகளைக் காணும் நோக்கில் செயல்படவுள்ளதாக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) புதிய நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூர் வர்த்தகர்களையும் ஒன்றிணைக்கும் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்தவும் லிஷா திட்டமிட்டுள்ளது.

பூத்தொடுத்தல், பாரம்பரியத் தங்க நகைத் தயாரிப்பு போன்ற பாரம்பரியத் தொழில்களைப் பாதுகாப்பதும், ஆள்பற்றாக்குறை சார்ந்த சவால்களுக்குத் தீர்வு காண்பதும் லிஷாவின் நோக்கமாகும். ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற லிஷாவின் பொதுக்கூட்டத்தில் புதிய குழுவினர் பொறுப்பேற்றபோது இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

தற்போதைய தலைவர் ரெகுநாத் சிவா, மீண்டும் அதே பொறுப்பில் தலைவராகத் தொடர்கிறார். அத்துடன், முதல் துணைத் தலைவராகக் காயத்ரி ஜி சர்மா, 40, இரண்டாம் துணைத் தலைவராகக் கீர்த்தி ராஜேந்திரன், 40, ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

காயத்ரி ஜி சர்மா, 2023 முதல் லிஷாவின் இளையர் பிரிவுத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

“ஆள்பற்றாக்குறை, அதிக வாடகை, வாடிக்கையாளர்கள் வருகை போன்ற சவால்களை எதிர்கொண்டு, உள்ளூர் மக்களின் ஆதரவுடன் லிட்டில் இந்தியாவை மேலும் மேம்படுத்துவதில் எங்கள் குழு உறுதியாக உள்ளது,” என்றார் கீர்த்தி. 

உதவிப் பொதுச் செயலாளராக அபிராமி பாப்புலர் ஜுவல்லர்ஸ் உரிமையாளரான 49 வயது பழனியப்பன் ராமநாதன் பொறுப்பேற்றுள்ளார். ஸ்ரீ முருகன் டிரேடிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான 26 வயது மகிஷா ராமலிங்கம் உள்ளிட்ட இளம் வர்த்தகர்களும் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சிங்கப்பூர் இளையர்களை மீண்டும் லிட்டில் இந்தியாவுக்கு ஈர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளதாக லிஷாவின் புதிய நிர்வாகக் குழு தெரிவித்தது.

“வணிகம் முதல் உள்கட்டமைப்புவரை லிட்டில் இந்தியாவின் அனைத்துச் செயல்பாடுகளிலும் நாங்கள் கவனம் செலுத்தவுள்ளோம். வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவக் காத்திருக்கிறது லிஷா. தொலைபேசியில் அழைத்தால் போதும் உதவி கிடைக்கும்,” என்றார் திரு சிவா.

குறிப்புச் சொற்கள்