லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) தன் ஆதரவாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருந்திற்கு ஜூலை 1ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.
கல்சா சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஆதரவாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், லிட்டில் இந்தியா வட்டார வணிகர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 100 பேராளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு ஆதரவாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
லிஷா ஆண்டுதோறும் நடத்திவரும் சித்திரைப் புத்தாண்டு, இந்தியப் புத்தாண்டு நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தியதில் முக்கியப் பங்காற்றியவர்களைச் சிறப்பிப்பதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்றார் ஏற்பாட்டுக் குழுத் தலைவி மஹிஷா ராமலிங்கம்
இந்த ஆண்டு 16 வெவ்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த 16 பேர் ஒன்றிணைந்து செயல்பட்டதைச் சிறப்பிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக லிஷாவின் கௌரவச் செயலாளர் பா. ருத்ராபதி குறிப்பிட்டார்.
“பண்டிகை கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதுடன், லிட்டில் இந்தியாவில் உள்ள வணிகர்களுக்கு உதவுவதே லிஷாவின் முக்கிய நோக்கம்,” என்று அவர் தெரிவித்தார்.
“பொதுமக்களுக்காக இதுபோன்ற பெரும் விழாக்களைப் படைக்கும்போது, அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்கான வாய்ப்பு உருவாகிறது,” என்றார் லிஷாவின் உதவி கௌரவச் செயலாளரும் ‘சென்னை டிரேடிங்’ உரிமையாளருமான திரு ராமமூர்த்தி.
லிஷாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பங்கேற்று மகிழ்வதாக ‘கேசுவரினா கறி’ உணவகத்தின் உரிமையாளர் இளங்கோ சுப்பிரமணியம் சொன்னார்.
அந்நிகழ்ச்சிகள் லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள பல கடைகளின் வணிகம் பெருகுவதற்கும் நல்லதொரு வாய்ப்பு அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
“லிட்டில் இந்தியா வட்டாரத்தை வழிநடத்துவதில் லிஷாவின் பங்கு அளப்பரியது. இவ்வட்டாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் எனச் சிந்திப்பதோடு, அதன் பாரம்பரியத்தையும் லிஷா பேணுகிறது. அனைவரும் ஒன்றுகூடிச் செயல்படும்போது இந்த வட்டாரமும் மேன்மேலும் சிறப்பெய்தும்,” என்று திரு விக்ரம் நாயர் குறிப்பிட்டார்.


