தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆதரவாளர்களுக்கு லி‌‌‌ஷாவின் சிறப்பு விருந்து

2 mins read
7cd2a435-ce09-4ec5-9416-49a61354c507
அறுசுவை விருந்துடன் கலைநிகழ்ச்சியைக் கண்டுகளித்த சிறப்பு அழைப்பாளர்கள். - படம்: லி‌‌‌ஷா

தனது கலா­சா­ரம், பண்­பாடு சார்ந்த நட­வ­டிக்­கை­கள், நிகழ்ச்சி­கள், முயற்சிகள் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்க, விமரிசையான இரவு விருந்து நிகழ்ச்சிக்கு லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஏற்பாடு செய்திருந்தது.

தீபாவளி ஒளியூட்டு, பொங்கல் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களிலிருந்து ஏறத்தாழ 420 பேர் பங்கேற்ற இந்த இரவு விருந்து, மரினா பேயில் உள்ள பார்க் ராயல் கலெக்‌ஷன்ஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நடைபெற்றது.

உள்ளூர், இந்திய, மலேசியக் கலைஞர்களின் இசை, நடனம் உள்ளிட்ட அங்கங்களுடன் களைகட்டிய இந்நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கலாசாரத்தையும் வணிக நலனையும் சமநிலையில் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பை ஏற்று அதனை லிஷா செவ்வனே செய்து வருவதாகப் பாராட்டினார் அமைச்சர்.

இளையர்களின் புதிய முயற்சிகளையும் மூத்தோரின் அனுபவங்களையும் இணைத்து வளமான கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் முயற்சியிலும் லிஷா சிறப்பாகச் செயலாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நீண்டகால ஆதரவாளர்கள் மேடையேற்றப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கான அதிர்ஷ்டக் குலுக்கு மூலம் திறன்பேசி, மடிக்கணினி, பற்றுச்சீட்டுகள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.

பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜாவுடன் (வலமிருந்து 3வது) லி‌‌‌ஷா அமைப்பினர்.
பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜாவுடன் (வலமிருந்து 3வது) லி‌‌‌ஷா அமைப்பினர். - படம்: லி‌‌‌ஷா

“லிட்டில் இந்தியாவைச் சேர்ந்த பல நிறுவனங்களும் தொடர்ந்து நிதி உள்ளிட்ட பல வகைகளில் லிஷாவுக்கு ஆதரவளித்து வருகின்றன. அவர்களுக்கு நன்றி செலுத்தும் விருந்து இது.

“முஸ்தஃபா சென்டர், அருண் குழுமம், பிக் ஃபூட் லாஜிஸ்டிக்ஸ், கேஷுரினா கறி உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதில் பங்கேற்றன,” என்றார் லிஷா தலைவர் ரகுநாத் சிவா.

“லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் தொடர்ந்து அயராது உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு கொண்டாட்டமாகவும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி மகிழவும் இந்த விருந்து நல்வாய்ப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி,” என்றார் லிஷா துணைத் தலைவரும் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான பிரகாஷ்.

இந்தியாவின் பிரபல நிறுவனமான ‘டிஏசி டெவெலப்பர்ஸ்’ சிங்கப்பூரில் தனது விற்பனை நிலையத்தைத் தொடங்கியுள்ளதுடன் முதன்முறையாக லிஷாவுடன் ஆதரவாளராகவும் இணைந்துள்ளது.

“சிங்கப்பூரில் தமிழ்க் கலாசாரத்தைப் போற்றும் மக்களைப் பார்க்க வியப்பாக உள்ளது. அதற்குப் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி,” என்றார் அந்நிறுவனத்தின் தலைவர் சதிஷ் குமார்.

2000ல் தொடங்கப்பட்ட லி‌‌‌ஷா, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நன்றி தெரிவிக்கும் இவ்விருந்தை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்