ஏப்ரல் மாதம் என்றாலே தமிழர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது சித்திரைப் புத்தாண்டு என்று கூறினால் அது மிகையாகாது.
இந்நிலையில், சித்திரைப் புத்தாண்டிற்கு முதல் நாளான திங்கட்கிழமையன்றே (ஏப்ரல் 13) பண்டிகைக்கால உணர்வில் லிட்டில் இந்தியா திளைத்தது.
மழை வரப்போகிறது என்பதைக் குறிக்கும் வண்ணம் வானில் கருமேகங்கள் சூழத்தொடங்கியபோதும், மக்கள் பொருள்களை வாங்கத் திரண்டனர்.
மல்லிகைப் பூக்களின் மணம் கேம்பல் லேனை நிறைத்திருந்தது. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப சேவை வழங்கினர் கடைக்காரர்கள்.
பள்ளி முடிந்த கையோடு பள்ளிப்பையைச் சுமந்துகொண்டு வந்த மாணவர்கள், வேலை முடிந்து அரக்கப்பரக்க வந்தோர் எனச் சிறுவர் முதல் பெரியோர்வரை பலரும் லிட்டில் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்பொழுது, இம்முறை சித்திரைப் புத்தாண்டின் தொடக்கம் வாரநாளில் அமைந்திருப்பதால், கூட்டம் சற்றுக் குறைவாக இருந்ததாகக் கடைக்காரர்கள் சுட்டினர்.
வழக்கமாக வாங்கும் பூ, பழங்கள், மளிகைப் பொருள்களுக்கு அப்பாற்பட்டு கண்ணாடிகளையும் சாமிப் படங்களையும் வாங்கும் போக்கு மக்களிடையே அதிகரித்திருப்பதாகக் கேம்பல் லேனில் அமைந்திருக்கும் ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடையின் உரிமையாளர் ராஜகுமார் சந்திரா கூறினார்.
“இவ்வாண்டு அதிகமானோர் வாழையிலை வாங்கவில்லை. ஈரான் போரால் விலையை உயர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால், மக்கள் குறைவாக வருகின்றனர் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் சாமி வாழையிலைக் கடையின் உரிமையாளர் பன்னீர் செல்வம், 64.
பொருள்களின் விலைகள் உயர்ந்தபோதும், பெரும்பாலான மக்கள் தொடர்ந்து பொருள்களை வாங்கினர்.
“கடைகளில் விலையை உயர்த்தியிருப்பதாக உணர்கிறேன். இருப்பினும், விலைவாசி ஏற்றம் தவிர்க்கமுடியாதது,” என்றார் 39 வயது டயனா தேவி.
தமது குடியிருப்புப் பேட்டையிலேயே வழக்கமாகப் பொருள்களை வாங்கும் அவர், தீவு முழுவதும் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அலைமோதும் மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க, பொருள்களை வாங்க முன்கூட்டியே வந்தார் 60 வயது ஷீலா தேவி.
தமது குடியிருப்பு வட்டாரத்தில் தமிழ்க் கடைகள் குறைவாக இருப்பதால், லிட்டில் இந்தியாவிற்கு ஒவ்வோர் ஆண்டும் வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“விலைகள் ஓரிரு வெள்ளி உயர்ந்திருக்கின்றன. ஆனால், பெரிய விலை உயர்வு என்று கூறமாட்டேன்,” என்று அவர் சொன்னார்.
வழிபாட்டிற்காகப் பொருள்களை வாங்கத் தமது தந்தையுடன் வந்திருந்தார் செயின்ட் மார்கரெட்ஸ் தொடக்கப்பள்ளி மாணவியான 12 வயது கேய்ஷா பிரேம்.
வாழையிலை, மாவிலைத் தோரணம், பூ, பழம் எனப் பல பொருள்களை வாங்கிய அவர், புத்தாண்டு குறித்த அவரது ஆர்வத்தைத் தெரிவித்தார்.
காலை வீட்டில் பூஜை செய்தபின், மாலையில் குடும்பத்தோடு கோயிலுக்குச் செல்லவிருப்பதாகக் கூறினார் அவர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தமது குடும்பத்துடன் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடும் 19 வயது ஜூலியன் கையிஷா முதல்முறையாகச் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடவிருக்கிறார்.
தமது நண்பரின் குடும்பத்தோடு கொண்டாடுவதால் வழிபாட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்க நண்பருடன் அவர் வந்திருந்தார்.
பலதுறைத் மொழிற்கல்லூரியில் முதல் ஆண்டு பயிலும் அவர், “சிங்கப்பூர் ஒரு பல்லினச் சமுதாயம் என்பதால் இதுபோன்ற புதுமையான அனுபவங்களை என்னால் பெறமுடிகிறது. நான் சீனப் புத்தாண்டையும், பெருநாளையும் கொண்டாடியிருக்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

