தமிழர் திருநாளுக்கு ஒளிவீசும் லிட்டில் இந்தியா

2 mins read
44a8ea86-94d2-49ea-8f48-3b50b466fb5b
சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ஒளியூட்டை துவக்கினார். மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை, துணையமைச்சரும் மேயருமான தினேஷ் வாசு தாஸ், துணையமைச்சர் ஆல்வின் டான், மேயர் டென்னிஸ் புவா ஆகியோரும் விழாவுக்குச் சிறப்புச் சேர்த்தனர். - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 4

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் தொடக்கமாக லிட்டில் இந்தியா வீதிகள் சனிக்கிழமை (ஜனவரி 10) வண்ண விளக்குகளால் மிளிர்ந்தன.

கிளைவ் ஸ்திரீட்டில் ஆடல், பாடல், பறை, உறுமி மேளம் போன்ற பாரம்பரிய இசை சிறப்பு அங்கங்களுடன் பொங்கல் ஒளியூட்டு விழா களைகட்டியது.

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஏற்பாடு செய்திருந்த பொங்கல் ஒளியூட்டு விழாவைக் காண பல்லின மக்கள் திரண்டனர்.

வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) ‘பொலி’ திறந்தவெளியில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் வந்தடைந்த கால்நடைகளையும் கண்டு களித்தனர்.

விழாவில் சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ஒளியூட்டை துவக்கினார்.

அவருடன் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், சட்ட மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான், மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலே விழாவுக்கு வருகையளித்தார்.

வெற்றிகரமான அறுவடைக்கு இயற்கை, சூரியன், மனித, கால்நடைகளின் உழைப்பு போன்ற காரணிகளையும் சுட்டிக்காட்டிய திரு ஓங், அதனைச் சமூகத்துக்கும் ஒப்பிட்டுப் பேசினார்.

“நாம் ஒன்றிணைந்து கடினமாக உழைக்கும்போது ​​நாம் நம்மைப் பயனுள்ளதாக்கிக் கொள்கிறோம். இதன் விளைவு, ஒரு வெற்றிகரமான அறுவடை,” என்றார்.

தேக்கா பிளேசிலிருந்து ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு அப்பால் வரை நீடிக்கும் ஒளியூட்டு கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டதாக அளவிடப்படுகிறது.

பொங்கல், லிஷா அமைப்பின் முதன்மை கொண்டாட்டங்கள் என்று நிகழ்ச்சியின் தலைமை ஏற்பாட்டாளர் கார்த்திகேயன் வெங்கடேசன் கூறினார்.

“சிங்கப்பூரில் இப்போது ஒரு மையக் கொண்டாட்டமாக அமைந்துள்ள பொங்கல் பண்டிகை, இந்தியச் சமூகத்தை மட்டுமல்ல, பல்லின, சமயத்தைச் சேர்ந்தவர்களையும் ஒன்றிணைக்கிறது,” என்றார்.

பொங்கல் பண்டிகை ஆண்டின் தொடக்கத்தில் பிறக்கிறதால் அது ஒரு நல்ல தொடக்கம் என்று உணர்வதாக தெரிவித்தார் உஷாராணி, 56.

“குறிப்பாக, பொங்கல் நன்னாள் அன்று பூஜை செய்து குடும்பத்துடன் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்றும் பகிர்ந்தார்.

சிங்கப்பூரில் ஆறு ஆண்டுகள் கட்டுமானத் துறையில் பணிபுரியும் தர்மர் ராமசாமி, 33, முதன்முறையாக ஒளியூட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் பொங்கலுக்கு இதுபோன்ற வீதி விளக்குகள் அவ்வளவாக காண முடியாது. அதனால் இங்கு அதை காண்பது ஒரு புதுவித அனுபவம்,” என்றார்.

மண்வாசம் வீசும் கொண்டாட்டங்கள், மாடுகள், மக்கள், மனநிறைவு என எதற்கும் குறையின்றி வீட்டில் இருப்பது போன்ற உணர்வு இவ்வாண்டு பொங்கல் கொண்டாட்டங்கள் அவருக்கு அளித்துள்ளதாக் தெரிவித்தார் திரு தர்மர்.

பிப்ரவரி 8ஆம் தேதி வரை பொதுமக்கள் பொங்கல் ஒளியூட்டைக் கண்டு ரசிக்கலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைப் பற்றிய மேல்விவரங்களுக்கு https://pongal.sg/ இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்