உடற்குறையுள்ளோரை வைத்து திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், அவர்கள் மட்டுமே நடித்திருக்கும் படங்களைப் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.
சிங்கப்பூரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ரீனா தீன், உடற்குறையுள்ளோர் மட்டும் நடித்துள்ள திகில் படம் ஒன்றை தனது சொந்த செலவில் இயக்கி, தயாரித்தும் உள்ளார்.
‘தி டேம்ண்ட் ஒன்ஸ்’ எனும் அந்த 75 நிமிடத் திரைப்படத்தில் செவித்திறன் குறைபாடு, பார்வையற்ற நடிகர்கள் தங்களின் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோர் மட்டும் நடித்திருக்கும் முதல் படம் என்ற பெருமை இத்திரைப்படத்திற்குச் சேரும்.
ஆசிரியரான ரீனா, 42, திரைப்படத் தயாரிப்புத் துறைக்கு எதேச்சையாக அறிமுகமானார்.
உடற்குறையுள்ள மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்த ரீனா, கொவிட்-19 பெருந்தொற்றின்போது தனது வருமானம் பாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். மேலும், மாணவர்களுக்கு இணையம் வழி பாடங்களைக் கற்பிப்பது கடினமாக இருந்ததால், அவர் வேறு வழியை தேடத் தொடங்கினார்.
அந்நேரத்தில் ‘எஸ்ஜி ஒற்றுமை’ திறன் திட்டம் மூலம் எழுத்துப் பயிற்சி மேற்கொள்ள விரும்பிய அவர், அதன் மூலம் பெரியவர்களுக்கு ஆங்கில மொழியைத் திறம்படக் கற்றுத்தர முதலில் திட்டமிட்டிருந்தார். அந்தப் பயிற்சி வகுப்பில் திரைக்கதை எழுதும் பாடத்திட்டம் இடம்பெற்றதால், ரீனாவுக்கு திரைப்படத் தயாரிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
இளம் வயதிலிருந்து சிக்கலான மன அழுத்தத்தால் (Complex post traumatic stress disorder) பாதிக்கப்பட்டுள்ள ரீனாவுக்கு உடற்குறை ஒன்றும் புதிதன்று.
“உடற்குறையுள்ளோர் மட்டும் நடிக்கும் ஒரு படத்தை நான் எடுக்க முடிவெடுத்தேன். அவர்களின் குறையைக் பார்க்காமல் அவர்களுடைய நடிப்புத் திறனில் கவனம் செலுத்த எண்ணினேன்,” என்றார் ரீனா.
‘கினோ ரெட் டோட்’ எனும் திரைப்படக் குழு ஒன்றின் மூலம் தனது திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளவர்களைத் தேடியதாக கூறிய ரீனா, திறமைசாலியாக இருந்தாலும் உடற்குறையால் ஒதுக்கப்பட்டவர்களைப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் ஆணித்தரமாக இருந்ததாக பகிர்ந்தார்.
புதிய இயக்குநர் என்பதால் எதிர்பார்த்த அளவில் தமக்கு மானியங்கள் கிடைக்கவில்லை என்று சொன்ன அவர், தனது சேமிப்பில் இருந்த கிட்டத்தட்ட $7,000ஐ படத் தயாரிப்பிற்குப் பயன்படுத்தினார்.
“யாராக இருந்தாலும், சொந்தப் பணத்தை வைத்து ஒரு படம் எடுக்க தயங்கவே செய்வார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை, உடற்குறையுள்ளோரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதை மட்டுமே எப்போதும் நினைத்தேன்,” என புன்முறுவலுடன் சொன்னார் ரீனா.
சிங்கப்பூர் ஊடகப் பயிற்சிக்கழகம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்த ரீனா, திரைப்படத் தயாரிப்பு மீதான தனது ஆர்வத்தை அக்கழகத்தின் துணைத் தலைவர் விதைத்ததாகச் சொன்னார்.
இத்திரைப்படம் இன்னும் பல சிகரங்களை எட்ட வேண்டும் என்ற வேட்கை கொண்டுள்ள ரீனா, சிங்கப்பூர் திரைப்பட விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இத்திரைப்படத்தைப் பரிந்துரைக்க விரும்புகிறார்.

