உள்ளூர்த் தமிழ் எழுத்துலகத்தில் இணைந்தவர்களின் ஆர்வமிக்க ஒன்றுகூடலாகச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் பொன்விழா அமைந்திருந்தது.
1976ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தொடர்ந்து பெருகி, புதிய தலைமுறையினரையும் தொட்டுள்ளது.
விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலகக் கட்டடத்தில் நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக இளையர்துறை மற்றும் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் வருகைதந்தார்.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிறப்புநிலைப் பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன் ஆகியோர் வந்திருந்தனர்.
அத்துடன், தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சிறப்புப் பேச்சாளர்களான முனைவர் பாரதி கிருஷ்ணகுமார், கவிஞர் தங்கமூர்த்தி, பேராசிரியர் முனைவர் இலக்கியப்பித்தன் ஆகியோரும் இடம்பெற்றனர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமையிலும் எழுத்தும் இலக்கியமும் சார்ந்த நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
தற்போது ஏறத்தாழ 123 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கழகத்தில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர்க்கும் மேற்பட்டோர் வாழ்நாள் உறுப்பினர்களாக உள்ளனர்.
பாலர் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரையிலான மாணவர்களுக்குப் போட்டிகளை நடத்துவதோடு மட்டுமன்றி, தமிழ்மொழியையும் இலக்கியத்தையும் ஊக்குவிப்பதற்காகப் பொதுமக்களுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் போட்டிகளை நடத்தி வருகிறது.
மாறுவேடம், பேச்சுப் போட்டி, கதைசொல்லுதல், சிறுகதை, புனைவு ஆகிய பிரிவுகளில் அப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் ஆகியவற்றையும் கழகம் நடத்தி வருகிறது.
முதலாம் உலகத் தமிழர் மாநாட்டை நடத்தியதுடன் சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் தொடர்ச்சியாகப் பங்கேற்று வந்துள்ள கழகம், அயல்நாட்டினரும் சிங்கப்பூர் இலக்கியத்தையும் சிங்கப்பூர் எழுத்தாளர்களையும் அறிந்துகொள்ள வழிவகை செய்துவருகிறது.
தொடரும் மரபு
நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் தலைவர் நா. ஆண்டியப்பன், 30 ஆண்டுகள் எழுத்தாளர் கழகத்தை வழிநடத்திய அனுபவத்தை நினைவுகூர்ந்தார். பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு, உழைப்பால் தற்போதைய நிலையைக் கழகம் எட்டியுள்ளதை அவர் மகிழ்வோடு சுட்டினார்.
தாம் செயலாளராக இருந்தபோது தலைவராக இருந்த திரு அமலதாசன், தாம் முன்மொழிந்த எந்தத் திட்டத்திற்கும் அவர் தடைபோட்டதில்லை என்றும் தமக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார் என்றும் திரு ஆண்டியப்பன் பாராட்டினார்.
கழகத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு இந்நிகழ்ச்சி பெருமைமிக்க தருணங்களை வழங்கியிருந்ததாக அதன் முன்னோடிகள் தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஆர் துரைமாணிக்கம், கழகத்தின் தொடக்கக் காலத்தில் தனித்தமிழைக் கையாண்டு புகழ்பெற்ற கவிஞர் முல்லைவாணன் தலைவராக இருந்தபோது தாம் செயலாளராகப் பணியாற்றதை மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.
“எங்களுடைய செயலவையில் சிங்கப்பூரின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான முத்தமிழன், பரணன், முருகடியான் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்து, எங்களுக்கு ஆதரவு வழங்கினர். அவ்வகையில் எனக்கும் எழுத்தாளர் கழகத்திற்கும் நீண்ட தொடர்பு இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
நாளைய அறுவடைக்கான விதைகள்
இளையர்களின் மொழிவளத்தைப் பெருக்கும் முயற்சிகளில் ஈடுபடும் எழுத்தாளர் கழகத்தினர், அவர்களைத் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகின்றனர்.
நூல்களைப் பற்றிய கலந்தாராயும் கதைக்களம் நிகழ்ச்சிவழி, மாணவர்களின் கற்றல் மேம்பட்டுள்ளதைக் கழக முன்னோடியும் கல்வியாளருமான பொன்.சுந்தரராசு குறிப்பிட்டார்.
“பள்ளி மாணவர்கள் உள்ளூர், வெளிநாட்டு எழுத்தாளர்களின் நூல்களைப் படித்து திறனாய்வு செய்கின்றனர். அதனால் ஊக்கம் பெற்று அவர்களும் எழுதத் தொடங்குகின்றனர்,” என்று முன்பு கழகச் செயலாளராகச் செயல்பட்ட அவர் கூறினார்.
ஏறத்தாழ ஈராண்டுகளுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட எழுத்தாளர் கழகத்தின் இளையர் அணியில் தொடக்கத்தில் 10 பேர் இணைந்ததாகவும் அந்த எண்ணிக்கை தற்போது 23ஆக உயர்ந்திருப்பதாகவும் கழகச் செயலாளர் பிரேமா மகாலிங்கம் தெரிவித்தார்.
“இளையர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது மிகவும் சவாலானது என்றாலும் வருங்காலத்தில் நம் கழகத்தை வழிநடத்தப் போவது இந்த இளைய தலைமுறையினர்தான். இப்போதிருந்தே அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலும் ஊக்கமும் அளித்தால், பிற்காலத்தில் அவர்கள் கழகத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வர்,” என்று அவர் சொன்னார்.
