ஆன்சன் ரோட்டில் கடந்த 1999ஆம் ஆண்டு வெறும் மூன்று ஊழியர்களுடன் தொடங்கி தற்போது 11 நாடுகளில் 2,000 ஊழியர்களுடன் விரிவடைந்துள்ள ‘டிரான்ஸ்வோர்ல்ட் குரூப் சிங்கப்பூர்’ நிறுவனம், தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
பெருங்கனவுடன் மும்பையிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த மகேஷ் சிவசாமி தொடங்கிய நிறுவனம் இது. மத்திய கிழக்கு நாடுகளில் கப்பல், தளவாடத் தொழிலில் ஈடுபட்ட தமது தந்தைதான் தமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்ததாகக் கூறினார் திரு மகேஷ்.
“1970களில் கப்பல்துறை வர்த்தகத்தில் ஈடுபட்ட என் தந்தை, தாமதமின்றிச் செயல்படுவதே வெற்றியின் ரகசியம் என்பார். அந்தத் தாரக மந்திரமே என்னை இதுவரை அழைத்து வந்துள்ளது,” என்றார் திரு மகேஷ்.
அப்போது தம் நண்பர்கள் அனைவரும் அமெரிக்கா, ஐரோப்பா என இந்தியாவிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்குச் செல்ல முடிவெடுத்த நிலையில், திரு மகேஷ் மட்டும் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தார்.
“ஆசியாவில் தொழில் வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தேன். சிங்கப்பூர் கடல்துறை வணிகம் அப்போது முதலிடத்தில் இல்லை என்றாலும் சிங்கப்பூர் ஒரு முக்கியக் கடல்துறை மையமாகத் திகழ்ந்தது,” என்றார் திரு மகேஷ்.
தம் தந்தையின் நிறுவனத்தில் பணியாற்றியதன்மூலம் சேமித்த பணத்தைக் கொண்டு சிங்கப்பூரில் தொழில் செய்யப் புறப்பட்டார் திரு மகேஷ்.
திரு மகேஷ் நிறுவனத்தைத் தொடங்கிய சில மாத காலத்திலேயே உலகின் ஆகப்பெரிய கப்பல் நிறுவனங்களுள் ஒன்றான ‘மெயார்ஸ்க் லைன்’ (Maersk Line), சிங்கப்பூருக்கும் பங்ளாதேஷுக்கும் இடையே தளவாட ஒப்பந்தத்தை அமைத்தது.
டேனிஷ் குழுமத்தின் சிங்கப்பூர் விரிவாக்கத்தில் பங்கு, சிட்டகாங், நாவா சேவா ஆகியவற்றுக்கிடையிலான சேவைகள் என அவரது வர்த்தகம் விரிவடைந்தது.
தொடர்புடைய செய்திகள்
‘லிபர்ட்டி நேவிகேஷன்’ நிறுவனத்தின் ஆதரவுடன் கப்பல் உரிமம் பெற்ற திரு மகேஷ், 2007ல் கப்பல் போக்குவரத்துச் சேவையைத் தொடங்கினார். ‘பிஎல்பிஎல்’ எனும் அந்நிறுவனம், தற்போது 30,000 கொள்கலன்களுடன் 15 நாடுகளுக்குச் சேவை வழங்கி வருகிறது.
பெருநிறுவனங்கள் கவனம் செலுத்தாத, ஆழக் கட்டுப்பாடு உள்ளிட்ட சிரமங்கள் கொண்ட பகுதிகளில் கவனம் செலுத்தியது இவருக்குச் சாதகமாக அமைந்தது. கப்பல் போக்குவரத்து, கிடங்குச் சேவை, சரக்குப் போக்குவரத்து என ஒருங்கிணைந்த சேவைகளை அவரது நிறுவனம் வழங்கத் தொடங்கியது.
தாம் பணியில் முழுக் கவனம் செலுத்தியதால், தம் மனைவி மாலா குடும்பத்தைக் கவனித்துக்கொண்டதாக திரு மகேஷ் கூறினார். பிள்ளைகள் மிதிலா, முரளி இருவரும் கடந்த 2023 முதல் முழுநேரமாக அவரது நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.
அனைத்துலக அளவில் செல்வதைவிட வட்டார நிபுணத்துவத்துடன் விரைவாகச் செயல்படுவது சிறந்தது என திரு மகேஷ் கருதுகிறார்.
“சீனா, தென்கொரியாவில் தொடங்கி இந்தியத் துணைக்கண்டம், கிழக்கு ஆப்பிரிக்கா வரை கவனம் செலுத்துகிறோம்,” என்ற அவர், இதனாலேயே தமது நிறுவனம் பத்துவித சேவைகளை வழங்க முடிவதாகக் கூறினார்.
“மூன்று, நான்கு ஊழியர்களுடன் தொடங்கி இப்போது இந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம். இது என்னைப்போலவே ஊழியர்கள் ஒவ்வொருவரின் வெற்றியும்தான்,” என்று 25ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாடங்களில் திரு மகேஷ் சொன்னார்.
“நிச்சயமற்றச் சூழல்களிலும் டிரான்ஸ்வோர்ல்ட் நிறுவனம் சீராகப் பயணிக்கிறது. மகேஷின் பொறுமை, தலைமைத்துவம், மீள்திறன் ஆகியவற்றின் வெகுமதி இது,” என்றார் 51 நாடுகளில் சேவை வழங்கும் அனைத்துலகக் கப்பல் நிறுவனமான ‘சீ லீட்’டின் தலைவர் எஸ்.சி. சான்.
இந்தியா, சீனா, இலங்கை, ஐரோப்பா ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த ஊழியர்களின் பங்களிப்பு வணிகத்துக்கு உறுதுணையாக அமைந்துள்ளதாக திரு மகேஷ் கூறினார்.
கடல் தாண்டி செயல்பட்டாலும் சிங்கப்பூர்தான் தமது வர்த்தகத்தின் அடித்தளமாக, தலைமையகமாகச் செயல்படும் என்றார் அவர்.