உள்ளூர்க் கவிஞரின் ‘புதிய உச்சம்’

உள்ளூர்க் கவிஞரின் ‘புதிய உச்சம்’

3 mins read
ca2cdb04-6e20-4533-9eb7-cc571cfab634
‘புதிய உச்சம்’ கவிதைத் தொகுப்பை எழுதிய கவிஞர் அ. ஷாஹுல் ஹமீது. - படம்: ஷாஹுல் ஹமீது
Google News Preferred Icon

காதல், சமூகம், ஆன்மிகம் ஆகிய மூன்று கருப்பொருள்களில் மொத்தம் 61 கவிதைகளைக் கொண்ட ‘புதிய உச்சம்’ எனும் நூலை வெளியிட்டுள்ளார் உள்ளூர்க் கவிஞரும் தன்முனைப்புப் பேச்சாளருமான அ. ஷாஹுல் ஹமீது.

தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அப்புத்தகம் இளையர்க்கு முன்மாதிரியாகவும் முதியோர்க்கு நம்பிக்கையாகவும் விளங்குகிறது என்றும் கவிஞர் ஷாஹுல் அவரது மொழிப்பற்றையும் சமூக உணர்வையும் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்றும் டாக்டர் ஹமீது தமது உரையில் கூறினார்.

தேசியக் கல்விக் கழகம், ‘சிம்’ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றிய முன்னாள் விரிவுரையாளர் டாக்டர் இலக்குமி, கல்வி அமைச்சின் பாடத்திட்ட வல்லுநர் டாக்டர் வேணுகோபால், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கப் பொது ச்செயலாளர் டாக்டர் முஹைதீன் ஆகியோர் நிகழ்ச்சியில் வாழ்த்துரை ஆற்றினர்.

(இடமிருந்து) கவிஞரின் மகன், கவிஞர் அ.ஷாஹுல் ஹமீது, அவரது தாயார், அவரின் மனைவி, மகள்.
(இடமிருந்து) கவிஞரின் மகன், கவிஞர் அ.ஷாஹுல் ஹமீது, அவரது தாயார், அவரின் மனைவி, மகள். - படம்: ஷாஹுல் ஹமீது

இதற்கு முன்பு மூன்று முறை இப்புத்தகத்தை வெளியிட முயன்றும் பல்வேறு தடைகளால் தள்ளிப்போனதாகக் கவிஞர் ஷாஹுல் ஹமீது கூறினார்.

“1998, 2012, 2022 ஆகிய மூன்று ஆண்டுகளில் இந்தக் கவிதைத் தொகுப்பை வெளியிட முயற்சி செய்தேன். ஆனால், பல்வேறு காரணங்களால் கைகூடாமல் போனது,” என்றார் அவர்.

தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றி வந்த திரு ஷாஹுல் உடல்நலம் காரணமாக 2024ல் பணி ஓய்வு பெற்ற பின்னர், புத்தகத்தை எவ்வாறேனும் வெளியிட வேண்டுமென்ற வேட்கை பிறந்ததாகக் கூறினார்.

பொதுவாகக் கவிதைத் தொகுப்புகளிலும் புத்தகங்களிலும் படங்கள் ஏதுமின்றி சொற்கள் மட்டுமே முதன்மையாக இருப்பதைக் கவனித்த அவர், தமது புத்தகம் வாசகர்களின் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைய வேண்டுமென்ற நோக்கில் படங்களை இணைத்தார்.

“கவிதைகளின் கருத்துகளை உணர்த்தும் வகையிலான படங்களைச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கினேன். ஏப்ரல் மாதம் தொடங்கிய முயற்சி ஜூன் மாதத்தில் முடிவடைந்தது,” என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற 61வது ஆண்டில் 61 கவிதைகள் கொண்ட தமது புத்தகம் வெளியானது மகிழ்ச்சி தருவதாகத் திரு ஷாஹுல் குறிப்பிட்டார்.

புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கருப்பொருள்களின்கீழ் மொத்தம் 60 கவிதைகளைத் தொகுக்க வேண்டுமென்பதே அவரது திட்டமாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு கவிஞருக்கும் கவிதை என்பதன் பொருள் மாறுபடும் என்பதால், தமது கண்ணோட்டத்தில் ‘கவிதை’ என்பதன் பொருளை எடுத்துரைக்க, ‘எது கவிதை?’ என்ற தலைப்பிலான கவிதையுடன் புத்தகத்தைத் தொடங்கினார்.

தமது சமூக அக்கறையை வெளிக்கொணரும் வண்ணம் புத்தகத்தில் சமூகக் கவிதைகள் அதிகம் இடம்பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

350க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ள திரு ஷாஹுல், அடுத்து வரும் ஆண்டுகளில் எஞ்சிய கவிதைகளையும் தொகுத்து, புத்தகங்களாக வெளியிடத் திட்டமிடுகிறார்.

இவர் 2013ஆம் ஆண்டு நடந்த தங்கமுனைப் பேனா விருது (Golden Point Award) போட்டியின் தமிழ்க் கவிதைப் பிரிவில் இரண்டாம் பரிசு வென்றவர்.

இவ்வாண்டு, ‘பெருவிரைவு ரயில்களில் கவிதைகள்’ (Poems on MRT) என்ற ஆங்கிலக் கவிதைப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்றார்.

அவர் சமர்ப்பித்த மூன்று கவிதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பெருவிரைவு ரயிலின் மெய்நிகர் வரைபடத்தில் பதிவேற்றப்பட்டன. அவற்றுள் ஒரு கவிதை வாக்கெடுப்புப் பிரிவில் இரண்டாம் பரிசை வென்றது.

குறிப்புச் சொற்கள்