பண்பாட்டின் பெருமையைப் பறைசாற்றும் உரை, கலை அங்கங்களைக் கொண்டுள்ள தமிழர் திருநாள் சனிக்கிழமை (மே 23) நடைபெறவுள்ளது.
மாதவி இலக்கிய மன்றம் அதற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் முரசு நிறுவனர் தமிழவேள் கோ. சாரங்கபாணி தோற்றுவித்த தமிழர் திருநாளை நிகழ்ச்சி நினைவுகூர்கிறது.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், அல்ஜுனிட் குழுத்தொகுதி (யூனோஸ்) அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.
அத்துடன், ‘மாதவிப் பொன்மயிலாய்’ எனும் வாழ்க்கை வரலாற்று இலக்கிய இசை நாடகம் அரங்கேறவுள்ளது. அந்நாடகத்தில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இடம்பெறுகின்றனர்.
கல்வியாளர் மன்னை க இராஜகோபாலன் தலைமையில் உள்ளூர்ப் பேச்சாளர்களான ராம்குமார் சந்தானம், ஸ்வர்ணலதா ஆவுடையப்பன், மேனகா சேஷகுமார் ஆகியோர் இயல், இசை, நாடகம் என முத்தமிழின் சுவை குறித்து உரையாற்றவுள்ளனர்.
மன்றத்தின் முன்னாள் தலைவர் என் ஆர் கோவிந்தனின் மறைவுக்குப் பிறகு முதன்முதலாக நடத்தப்படும் கொண்டாட்டமாக அது அமைகிறது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
விழாவுக்குப் பொதுமக்கள் திரளாக வருகையளித்து ஆதரவளிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

