உடல்மொழியால் உலக மேடைகளை வசப்படுத்திய வித்தகர்

உடல்மொழியால் உலக மேடைகளை வசப்படுத்திய வித்தகர்

3 mins read
சிறப்பு நேர்காணல்: தெருக்கூத்துக் கலைஞர் பழனிமுருகன்
4549973b-e9b0-4567-92ca-05f701a664ce
‘ஆய கலை அரிய கலை’ வலையொளி நிகழ்ச்சிக்கு நேர்காணல் அளித்த தெருக்கூத்து பயிற்றுவிப்பாளர், நடனக் கலைஞர், நாடகத்துறை விற்பன்னர் பழனி முருகன் (வலது), தமிழ் முரசு உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன். - படம்: பே. கார்த்திகேயன்

சிறு வயதிலிருந்து பல்வேறு துறைகளில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றபோது கிட்டாத மனநிறைவு, தமது குடும்பத்தின் பாரம்பரியக் கலையான தெருக்கூத்தில் ஈடுபடுகையில் கிடைப்பதாகக் கூறுகிறார் திரு பழனி முருகன், 50.

குறிப்பாக, மாணவர்களுக்கு இக்கலையைக் கற்பித்து, அவர்கள் வெற்றிகரமாக நிகழ்ச்சி படைத்த பிறகு மிகப் பெரிய மனநிறைவு ஏற்படுவதாகக் கூறுகிறார் அவர்.

பாரம்பரியக் கலைகளின் வேர்களை மறக்காமல், அதே நேரத்தில் நவீன நாடக மேடையிலும் உலக அரங்கில் தமது முத்திரையை ஆழமாகப் பதித்து வரும் பழனி முருகன், அண்மையில் ‘ஆட்டம்’ அமைப்பின் 'நம் மரபு’ நிகழ்ச்சித் தொடரின் ஓர் அங்கமாகச் சிங்கப்பூரில் பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தனித்தனியே பயிலரங்குகள் நடத்த வந்திருந்தார்.

திரு பழனி முருகன் வழிநடத்திய தெருக்கூத்துப் பயிலரங்கில் சிங்கப்பூர் இளையர்கள்.
திரு பழனி முருகன் வழிநடத்திய தெருக்கூத்துப் பயிலரங்கில் சிங்கப்பூர் இளையர்கள். - படம்: ATAM
தெருக்கூத்துக் கலை குறித்து ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட சிறார்.
தெருக்கூத்துக் கலை குறித்து ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட சிறார். - படம்: ATAM

தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலை’ வலையொளி நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில், தெருக்கூத்துக் கலை பற்றியும் அதனுடனான தமது புனிதமான தொடர்பு குறித்தும் பல்வேறு தகவல்களைத் திரு பழனி முருகன் பகிர்ந்துகொண்டார்.

தமது குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாகத் தெருக்கூத்து நிகழ்த்திவருவதையும் புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்து மன்றம் என்ற அமைப்பின் மூலம் நிகழ்ச்சி படைப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற நவீன நாடகக் குழுவும் பயிற்சிப் பள்ளியுமான ‘கூத்துப்பட்டறை’ மூலம்தான் அவருக்கு நவீன நாடக உலகம் அறிமுகமானது. அங்குப் பயின்ற உடல்மொழி, களரிப்பயிற்றுப் பயிற்சிகளோடு சிலம்பம், தேவராட்டம், பரதநாட்டியம், சமகால நடனம் எனப் பல்வேறு கலைவடிவங்களிலும் பழனி முருகன் ஆர்வம் செலுத்தினார்; கிட்டத்தட்ட 40 வயதில்தான் முழு நேரத் தெருக்கூத்துக் கலைஞராகச் செயல்பட முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், சிறு வயது முதலே தெருக்கூத்தின் முக்கியக் கூறுகளைக் கவனித்தே வளர்ந்ததால் அதனை எளிதில் உள்வாங்கிச் சிறக்க முடிந்ததாக அவர் சொன்னார்.

ஆனால், தெருக்கூத்தில் நாடகம்போல ஒத்திகைகள் நடைபெறுவதில்லை என்பதையும் திரு பழனி முருகன் சுட்டினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

வழக்கொழிந்து போகவிருந்த கைசிக புராணம் எனும் நாடகத்தை மீட்டெடுப்பதில் பேராசிரியர் சே.ராமானுஜத்தின் பணிகளில் உதவி செய்தது குறித்தும் உலகப்புகழ் பெற்ற இந்திய நடனக் கலைஞர் அனிதா ரத்னத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் தம் கலைவாழ்க்கையைச் செதுக்கியது குறித்தும் நன்றியுடன் குறிப்பிட்டார் திரு பழனி முருகன்.

பிரிட்டிஷ் இயக்குநர் டிம் சப்பில் (Tim Supple) இயக்கத்தில், ஷேக்ஸ்பியரின் நாடகத்திற்காகத் (’A Midsummer Night’s Dream’) தேர்ந்தெடுக்கப்பட்ட உலகக் கலைஞர்கள் 22 பேரில் திரு பழனி முருகனும் ஒருவர். ஷேக்ஸ்பியர் பிறந்த மண்ணிலும் மேலும் பல ஐரோப்பிய மேடைகளிலும் அவர் நடித்த விதம் பலரின் பாராட்டைப் பெற்றது. இத்தாலியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெரோனா (Verona) நகரிலும் இந்த நாடகம் அரங்கேறியது. மேலை நாட்டு மக்கள் நாடகக் கலைஞர்களைக் கொண்டாடும் விதத்தைத் திரு பழனி முருகன் விவரித்தார்.

புகழ்பெற்ற பிரெஞ்சு நாடக ஆளுமை ஆரியான் நூஷ்கினுடன் (Ariane Mnouchkine) இணைந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு குறித்தும் திரு பழனி முருகன் குறிப்பிட்டார். தெருக்கூத்தைத் தமிழில்தான் நிகழ்த்தவேண்டும் என்பதில் திருவாட்டி நூஷ்கின் உறுதியாக இருந்ததால், ஆறுமாத காலம் பிரெஞ்சுக் கலைஞர்களுக்குத் தாம் தெருக்கூத்தையும் கதையைப் படைப்பதற்குத் தமிழையும் கற்றுத்தந்து மகாபாரதக் கதையை மேடையேற்றியதை நினைவுகூர்ந்தார்.

வாழ்வியலில் இருந்து எடுப்பதே கதையும் நடிப்பும்; அந்தந்த நொடியில் வாழ்வதே நடிப்பு என்று சொல்லித்தந்த திருவாட்டி நூஷ்கினின் குழுவில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குத் தமது பயணம் தொடர்ந்ததாகச் சொன்னார் அவர்.

தெருக்கூத்து என்றில்லாமல் எந்த வேலைக்கும் அதற்கான பொறுமையும் பயிற்சியும் இளையர்களுக்குத் தேவை என்று வலியுறுத்திய திரு பழனி முருகன் வேறு துறைகளில் நேரத்தைச் செலவிட்டு இப்போது தாம் வந்துசேர்ந்திருக்கும் தெருக்கூத்துக் கலையில்தான் இனி நிலைத்து நிற்கவிருப்பதாக உறுதிபடக் கூறினார்.

தமிழ் முரசு அரங்கில் தமது குழுவினருடன் மகாபாரதத்தில் பாஞ்சாலியை அவைக்கு இழுத்துவருமாறு தன் தம்பி துச்சாதனனிடம் துரியோதனன் கூறும் காட்சியை அவர் நிகழ்த்தியும் காட்டினார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்