ஒத்துழைப்பின் பலனுக்கு மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைகள் சான்று: ஜெஃப்ரி சியாவ்

ஒத்துழைப்பின் பலனுக்கு மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைகள் சான்று: ஜெஃப்ரி சியாவ்

2 mins read
6e6e1a42-b5df-4742-8730-ede341711119
(இடமிருந்து) ராபர்ட் பெக்மன், போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், பொதுத் தூதர் டாமி கோ, தாரா டேவன்போர்ட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பொது நன்மைக்காக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் நல்ல பயன் பெறலாம் என்பதற்கு மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைகள் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கூறியுள்ளார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளும் தங்களுக்கு இடையிலான கடல் எல்லைப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படாத சூழலிலும், இந்த நீர்வழிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க இணைந்து பணியாற்றி வருகின்றன. சில கருத்து வேறுபாடுகள் எழுந்தபோதிலும் தங்களின் ஒத்துழைப்புக்கு அதனால் பங்கம் நேராமல் பார்த்துக்கொள்வதில் மூன்று நாடுகளும் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

நீர்வழிகளைப் பாதுகாப்பாகவும் திறந்தும் வைத்திருப்பது, இந்த மூன்று நாடுகளுக்கு மட்டுமன்றி உலகளாவிய சரக்குப் போக்குவரத்திற்கு இந்நீரிணைகளைச் சார்ந்திருக்கும் கப்பல்களுக்கும் நாடுகளுக்கும் பயனளித்துள்ளது. மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீரிணைகள் உலகின் மிகவும் பரபரப்பான கடல்வழிகளில் அடங்கும். உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்கு இவ்விரு நீரிணைகள் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) நடைபெற்ற ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் ஆஃப் மலாக்கா அண்ட் சிங்கப்பூர்: எ மாடல் ஃபார் த வேர்ல்டு’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் அமைச்சர் உரையாற்றினார்.

இந்நூலை மூத்த அரசதந்திரி டாமி கோவுடன் முன்னணிக் கடல்சார் வல்லுநர்கள் மூவர் இணைந்து தொகுத்துள்ளனர்.

2007ல் கடல் போக்குவரத்துப் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான தீர்வுகளைக் காண உதவும் ‘ஒத்துழைப்பு நடைமுறை’ எனும் தளம் உருவாக்கப்பட்டதை அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்நீரிணைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வது தலைமுறை தலைமுறையாகத் தலைவர்கள் காட்டும் உறுதிப்பாட்டிலேயே உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

சட்ட வல்லுநர்கள், அரசதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள், கடலோடிகள் முதல் அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் ஏற்ற வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

வெளியீட்டு நிகழ்ச்சிக்கு இடையே பேசிய திரு டாமி கோ, இந்தப் புத்தகம் மலாக்க, சிங்கப்பூர் நீரிணைகள் உலகிற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்பதை எடுத்துரைக்கிறது என்றார். உலகிலேயே இத்தகைய ஒத்துழைப்பு நடைமுறை இருப்பது இங்கு மட்டும்தான் என்றார் அவர்.

சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளும் இதில் பயன்பெறுகின்றன. ஆசியான் உறுப்பு நாடுகளாக இந்நாடுகள் திகழ்வது, இவற்றுக்கிடையேயான ஒற்றுமையையும் நீடித்த ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று திரு டாமி கோ சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்
மலாக்கா நீரிணைசிங்கப்பூர் நீரிணைபோக்குவரத்துஅமைச்சர்நூல் வெளியீடு