பதின்மூன்று ஆண்டு காலத்தில் 1,000 மலைப்பாம்புகளைக் காப்பாற்றுவது என்பது எளிதன்று. ஆனால், விலங்கு நல ஆய்வு, கல்வி சமுதாய அமைப்பின் (ஏக்கர்ஸ்) துணைத் தலைமை நிர்வாக அதிகாரி கலைவாணன் பாலகிருஷ்ணனுக்கு இது அன்றாடப் பணி.
அண்மையில், புளோக் 925, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 92ன் இரண்டாவது மாடி வீட்டிற்கு வெளியே குளிர்சாதனப் பெட்டியின் காற்றழுத்தியில் (compressor) மலைப்பாம்பு ஒன்று கண்டறியப்பட்டது. அந்தப் பாம்பை மீட்டெடுப்பதற்கு முன்பு அது எவ்வாறு சுருண்டிருந்தது என்பதை திரு கலைவாணன் உறுதி செய்துகொண்டார்.
“மலைப்பாம்பு எந்த நிலையில் உட்கார்ந்து இருக்கிறது என்பதைக் கவனிப்பேன்,” என்றார் இவர்.
ஒரு மலைப்பாம்பின் நடத்தையைப் புரிந்துகொள்வது மிக முக்கியம் என்று திரு கலைவாணன் சொன்னார். உதாரணமாக, மலைப்பாம்பு ஒரு குறிப்பிட்ட விதத்தில் சுருண்டிருந்தால், அது தாக்கப்போவதைக் குறிக்கலாம்.
“அது என் கையில் சுற்றிக்கொண்டு இருந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். அது தற்செயலாக நிகழவில்லை. நான் அந்த மலைப்பாம்பின் அசைவை உணர்ந்து அதை இவ்வாறு செய்ய வைக்கிறேன்,” என்றார் இவர்.
மலைப்பாம்புகள் ஒருபுறமிருக்க, நச்சுமிகுந்த நாகப்பாம்புகளையும் (spitting cobra) அவர் பலமுறை கையாண்டிருக்கிறார். அச்சுறுத்தலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவை விஷத்தைக் கக்குவதாக திரு கலைவாணன் கூறினார்.
“உங்களைத் தாக்குவதற்கு, உங்கள் கண்களில் அவை விஷத்தைக் கக்குவதில்லை. மாறாக, உங்களிடமிருந்து தப்பிக்கவே அவை இவ்வாறு செய்கின்றன,” என்று இவர் தெளிவுபடுத்தினார்.
அவற்றின் விஷம் மனிதத் தோலை அதிக அளவில் பாதிக்காது என்றாலும், கண்களில் பட்டால் கண்ணெறிச்சலை ஏற்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வகை நாகங்கள், திரு கலைவாணனின் கண்களில் பலமுறை விஷத்தைக் கக்கியுள்ளன. ஆனால், அதன் பிறகு கண்களைத் தேய்க்கக்கூடாது என்பதன் முக்கியத்துவத்தை இவர் அறிவார். அனுபவத்தின் மூலம் அவர் கற்றுக்கொண்ட ஒரு முக்கியப் பாடம் இது.
கண்களில் விஷம் கக்கப்பட்ட பிறகு கண்களைத் தேய்க்கும்போது, சிறிய ரத்த நாளங்கள் வெடித்து ரத்தவோட்டத்தில் விஷம் கலக்க வாய்ப்புள்ளது.
சிங்கப்பூரில் பாம்புகளை வளர்ப்புப் பிராணியாக வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ‘பால் பைத்தன்’, பர்மிய நாட்டு மலைப்பாம்புகள், ‘கிங் ஸ்னேக்ஸ்’, ‘மில்க் ஸ்னேக்ஸ்’ போன்ற அரியவகை பாம்புகள் சட்டவிரோதமாக இங்கு இறக்குமதி செய்யப்பட்டு, செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இச்செயல், விலங்குகளுக்கு நன்மையை விட அதிக தீமையையே விளைவிப்பதாக திரு கலைவாணன் எச்சரிக்கிறார்.
கலைவாணன் அஞ்சும் விலங்கு
தமது பணியில் தினமும் வனவிலங்குகளை எதிர்கொண்டாலும், திரு கலைவாணன் அஞ்சும் விலங்கு ஒன்றும் உள்ளது. இவர் பலமுறை கையாண்டுள்ள நான்கு மீட்டர் நீள மலைப்பாம்புகளோ, பெரிய உடும்புகளோ அல்ல. மாறாக, சிறிய உடல்வாகு படைத்த விலங்கு; தோற்றத்தில் ‘புசு புசு’ என்று இருக்கும் ஒருவகை எலி. அதுதான் அணில். அணிலின் சிறிய உடல் அமைப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று திரு கலைவாணன் வலியுறுத்துகிறார்.
“ஓர் அணில் கடித்து ஏற்படும் வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது,” என்றார் இவர்.
திரு கலைவாணனின் வனவிலங்கு மீட்புப் பணிக்கான பயணம், பாம்புகள் உடனான இவரது சந்திப்புகளைப் போலவே சுவாரசியமானது. விலங்குப் பராமரிப்பில் எவ்விதப் பின்புலமும் இல்லாத இவர், லாசால் கலைக் கல்லூரியில் தொழில்துறை வடிவமைப்பைப் படித்து, ஆரம்பத்தில் ஒரு வழக்கமான வேலையையே தேர்ந்தெடுத்தார்.
சிறுவயதிலிருந்து விலங்குகளுக்கு உதவுவதில் இவர் கொண்டிருந்த ஆர்வம் இவரை ஏக்கர்ஸ் அமைப்பில் கொண்டுசேர்த்தது.
அதன் முன்னாள் தலைமை நிர்வாகி லூயிஸ் எங், திரு கலைவாணனைத் தொடர்புகொண்டார். 2010ல் அதிக வாய்ப்புகள் இல்லாததால் தனது வடிவமைப்பு வேலையிலிருந்து விலகிய திரு கலைவாணன், ஒரு துணிச்சலான முடிவெடுத்து, $900 மாதச் சம்பளத்துக்கு ஏக்கர்ஸ் அமைப்பில் மீட்பு அதிகாரியாகச் சேர்ந்தார்.
“எனக்கு எப்போதும் விலங்குகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருக்கவே செய்தது,” என்றார் இவர்.
விலங்குகளைக் கையாள்வது நிதி நிலைத்தன்மை இல்லாமைக்கு வழிவகுக்கும் எனச் சமூகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியபோதும், திரு கலைவாணன் அச்சவாலை ஏற்றார்.
“என் பெற்றோர் இதை ஒரு தாழ்ந்த வேலையாகக் கருதினர்,” என்று நினைவுகூர்ந்த திரு கலைவாணன், தமது வடிவமைப்புச் சிந்தனைத் திறனைப் பயன்படுத்தி ஏக்கர்ஸ் அமைப்பில் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நிறைவு கண்டார்.
ஆக்கபூர்வமான தீர்வுகளால் பல சிக்கல்களைத் தீர்க்க முடிந்ததால், இத்துறையில் ஈடுபாடுகொள்ள முடிவெடுத்ததாக இவர் சொன்னார்.
மலைப்பாம்புகளைக் கையாளும் திறனை இவர் காலப்போக்கில் கற்றுக்கொண்டார். தொடக்கத்தில் தயங்கிய இவர், வேலையில் சேர்ந்த இரு மாதங்களில் முதல் மலைப்பாம்பை மீட்டெடுத்தார். 2012ல் பணியாளர் பற்றாக்குறையால் திரு கலைவாணன் அடிக்கடி தனியாகச் சென்று பாம்புகளை மீட்டார்.
“பலமுறை நான் கருவிகளின் துணையின்றி பாம்புகளை மீட்டேன்,” என்று தனது இளமைக்கால அனுபவங்களை எண்ணிச் சிரித்தார்.
வயது ஆக ஆக, தான் மிகவும் கவனமாகச் செயல்படுவதாக திரு கலைவாணன் குறிப்பிட்டார்.
“இப்போது எனக்குச் சற்று வயதாகிவிட்டதால், என் அசைவுகளிலும் பாம்புகளைக் கையாளும் விதத்திலும் கூடுதல் கவனமாக இருக்கிறேன்,” என்றார் இவர்.
மீட்பு நடவடிக்கையின்போது மலைப்பாம்பு அவரைச் சுற்றிக்கொள்ளும்போது, திரு கலைவாணன் அஞ்சாமல் அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.
“அவற்றின் உடல் வலிமை, அவை எப்படி நகரும் என்பதைத் தெரிந்துகொண்டால் உங்களுக்கு அச்சம் இருக்காது,” என்றார் இவர்.
மலைப்பாம்புகள் ஆக்ரோஷமானவை அல்ல, அச்சுறுத்தலை உணரும்போது மட்டுமே அவை தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றன என்று இவர் விளக்கினார்.
பாம்புகளை மீட்பது என்பது திரு கலைவாணனின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தாலும் உடும்புகள், முதலைகள், டால்ஃபின், புனுகுப்பூனைகள், குரங்குகள், வௌவால்கள் முதலியவற்றையும் மீட்டுள்ளார். ஒவ்வொரு மீட்புப் பணியும் வெவ்வேறு சவால்களைத் தந்து, அந்த விலங்கின் தன்மை மீது இவருக்குள்ள புரிதலையும் சோதிக்கிறது.
2014 அல்லது 2015ல் ஜூரோங்கில் ஏறத்தாழ 2.5 மீட்டர் நீள முதலையை மீட்ட சம்பவம், இவரின் மீட்புப் பணிகளில் குறிப்பிடத்தக்கது.
“முதலைகளைக் கையாளும்போது நூலளவு பிழை செய்வதற்குக்கூட இடமில்லை,” என்று திரு கலைவாணன் கூறினார். இந்த ‘அட்ரினலின்’ நிறைந்த அனுபவத்தில் குழு வேலையும் சூழலைத் துல்லியமாகக் கையாளும் நுட்பங்களும் தேவைப்பட்டன.
2018ல் மற்றொரு மீட்பு நடவடிக்கையின்போது, வலையில் சிக்கிய டால்ஃபினை மீட்க திரு கலைவாணன் நீரில் இறங்க நேரிட்டது.
“நான் இதற்குமுன் ஒரு டால்ஃபினைப் பார்த்ததே இல்லை. அதைக் கையாளும் அனுபவமும் பெற்றதில்லை,” என்று தாம் பெற்ற அரிய வாய்ப்பை எண்ணி இவர் நகைத்தார்.
இதை வேடிக்கை பார்த்த பலர், டால்ஃபினை மீட்டு அதற்கு சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர். இருப்பினும், அதை மீண்டும் கடலில் விடுவிக்க இவர் முடிவெடுத்தார்.
“நோயைக் குணப்படுத்தும் தன்மை காரணமாக, கடல்வாழ் பாலூட்டிகள் இவ்வகை காயங்களை எளிதாகத் தாக்குப்பிடித்து உயிர்வாழ முடியும்,” என்று திரு கலைவாணன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து புதிய சவால்களை எதிர்கொள்ளும் இவரது வாழ்க்கையில், புதிய திறன்களைக் கற்பதும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்வதும் இவருக்கு இன்றியமையாதது.
ஏக்கர்ஸ் அமைப்பின் துணை நிர்வாகத் தலைவர் அன்பரசி பூபால், வனவிலங்குகளை மீட்பதில் திரு கலைவாணன் கொண்டுள்ள தனித்துவமான அணுகுமுறையையும் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வுகாணும் திறனையும் பாராட்டினார்.
“திரு கலைவாணன், எந்த விலங்கிடமும் அல்லது மீட்புப் பணியிலும் பாரபட்சம் காட்டாமல், அனைத்து விலங்குகளையும் சமமாகப் பார்ப்பார். இவர் இயல்பிலேயே ஜீவகாருண்யம் படைத்தவர்,” என்றார் அன்பரசி.
2006லிருந்து ஏக்கர்சில் பணிபுரிந்து, அதற்குத் துணைக்கோளாக இருக்கும் அன்பரசியுடன் பணிபுரிந்து திரு கலைவாணன் தம் திறன்களை மேம்படுத்திக்கொண்டார்.
திரு கலைவாணனைப் பொறுத்தமட்டில் போதிய பயிற்சி, விலங்குகளின் மீது அக்கறை கொண்டவர்கள் யாராயினும், வனவிலங்குகளை மீட்கலாம்.
ஒரு தொழில்துறை வடிவமைப்பாளரிலிருந்து, வனவிலங்குகளின் பாதுகாவலராக இவரின் வாழ்க்கைப் பயணம் உருவெடுத்துள்ளது.
ஏக்கர்ஸ் அமைப்பில் தொடர்ந்து பணியாற்றும் திரு கலைவாணன், ஊர்ந்து செல்லும் உயிரினங்களாக இருந்தாலும், உயரத்தில் பறக்கும் உயிரினங்களாக இருந்தாலும், அனைத்து விலங்குகளிடமும் அன்பான அணுகுமுறையை வலியுறுத்துவதோடு, வனவிலங்குகளுடன் இணைந்து வாழ்வது குறித்து பொதுமக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
நகர்ப்புறச் சூழலில் வனவிலங்குப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து தம் வேலை மூலம் மக்களுக்கு வலியுறுத்திவரும் இவர், வனவிலங்குகள் மீது நாம் கொள்ளும் அச்சம் பெரும்பாலும், அவை கொடிய விலங்கு என்பதனால் அல்ல, நாம் கொண்டுள்ள தவறான புரிதலில் இருந்து வெளிப்படுவதாகக் கூறினார்.