ஆ. விஷ்ணு வர்தினி
வண்ணமயமான ஆடைகளுடன், தலையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட ‘மாண்டவடி’ எனும் கோபுரத்தைச் சுமந்தபடி, தாளத்திற்கு ஏற்ப வட்டமடித்து ஆடும் நடனமே குஜராத்தின் புகழ்பெற்ற ‘மாண்டவடி கர்பா’.
பக்தியுணர்வு, கவனக்குவிப்பு, தாள நயத்தின் ஒன்றுகூடலாக விளங்கும் இந்நடனத்தின் பின்னணியை விவரிக்கிறது, தமிழ் முரசும் ஆட்டம் (ATAM) அறநிறுவனமும் இணைந்து வழங்கும் ‘நம் மரபு: ஒரு பார்வை’ எனும் காணொளித் தொடர்.
நவராத்திரிப் பண்டிகையின்போது பாரம்பரியமாக பெண்களால் ஆடப்படும் ‘கர்பா’, சமசுகிருதத்தில் ‘கருப்பை’ என்று பொருள்படும். சமயப் பார்வையில், கர்பா தெய்வீகப் பெண் சக்தியை குறிக்கும் ஒரு நடனமாகும். பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு எனும் காலத்தின் சுழற்சியை அடையாளப்படுத்தும் வகையில், இந்நடனம் அதற்கே உரிய தனித்துவமான வட்ட வடிவ அமைப்பில் ஆடப்படுகிறது.
‘மாண்டவடி’ என்பது பொதுவாக மரத்தால் அல்லது மூங்கிலாலான ஒரு கோபுர வடிவமாகும். அதில் பெரும்பாலும் ஒரு சிறிய அகல் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்பிளனேடில் அரங்கேறிய ‘ஆனந்தக் கொண்டாட்டம்’ நிகழ்வில், பல்வேறு மரபுக்கலைகளுக்கு மத்தியில் மாண்டவடி கர்பா பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அந்நடனத்தை வடிவமைத்த இணை நடன ஆசிரியர் திருவாட்டி செல்வராஜேஸ்வரி அசோக் பிரபு, 34, தனித்துவமான மாண்டவடி கர்பா கலையை மாணவர்களுக்குக் கற்பித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
மாண்டவடி கர்பாவின் சவால் அதன் அசைவுகளில் மட்டும் இல்லை. தலையில் மாண்டவடியைக் கையில் பிடிக்காமல் சமநிலைப்படுத்தவேண்டும், முகத்தில் பாவனையோடு சுழலவேண்டும், பிற நடனமணிகளோடு இணையவேண்டும். இவற்றை ஆனந்த கொண்டாட்டத்தில் இடம்பெற்ற நடனமணிகளுக்கு படிப்படியாகக் கற்றுக்கொடுத்ததோடு, வகுப்பறைக்கும் கொண்டுசெல்ல முனைந்தார் திருவாட்டி செல்வராஜேஸ்வரி.
ஃபெர்ன்வேல் தொடக்கப் பள்ளியின் இந்திய நடன இணைப்பாட நடவடிக்கை மாணவர்களுக்கு இக்கலையை அறிமுகப்படுத்தினார் அவர். இதன் தொடர்ச்சியாக, அவ்வணி இவ்வாண்டு நடைபெற்ற சிங்கப்பூர் இளையர் விழாவில் அந்நடனத்தை அரங்கேற்றியது.
பல்வேறு இந்திய மரபுக்கலை வடிவங்களைப் பயின்று மேடையேற்றிய கலைஞர்களின் நேரடி அனுபவங்களை இக்காணொளித் தொடர் ஆவணப்படுத்தி உள்ளது. அப்பயணத்தை இங்கே காணலாம்:
