சிங்கப்பூரில் நடைபெற்ற இந்திய மாம்பழத் திருவிழாவில் 10,000க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட சுவையான மாம்பழ வகைகள் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
உத்தரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய இந்திய மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சௌசா, லங்ரா, தஷேரி, குலாப் ஜாமூன், மல்லிகா, அருணிகா, தோட்டாபுரி, நீலம், பாதாமி, அல்போன்சா, கேசர், பங்கனப்பள்ளி, மல்கோவா, காளப்பாடு, ருமானி ஆகிய மாம்பழ வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்தக் கண்காட்சியில் திரளாக வந்து பங்கேற்றவர்கள், தங்களுக்குப் பிடித்தமான மாம்பழ வகைகளை நேரடியாகச் சுவைத்து, அவற்றை வாங்கிச் சென்றனர்.
மாம்பழங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியச் சுவைகளை வழங்கும் இந்திய உணவு அங்காடிக் கடைகள், சுறுசுறுப்பான சந்தை வளாகம், சமைக்கத் தயாராக உள்ள இந்திய உணவுப் பொருள்கள் என வருகையாளர்களுக்காகப் பல்வேறு அம்சங்கள் காத்திருந்தன.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த மாம்பழத் திருவிழா ‘சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மண்டபம், கண்காட்சி நிலையத்தில்’ ஜூலை 17 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்திய இசை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நேரடி இசை நிகழ்ச்சிகளும் வழங்கப்பட்டன.
‘கனிகளின் ராஜா’ என்று அழைக்கப்படும் இந்தியாவின் பலவகை மாம்பழங்களை நேரடியாகச் சுவைப்பதற்கான ஒரு வாய்ப்பைச் சிங்கப்பூர்ச் சமூகத்தினருக்கு அளிக்கும் நோக்கில் இந்த மாம்பழத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

