‘திருமணத்தை வாழ்நாள் முழுவதும் கொண்டாடுங்கள்’

3 mins read
ba220ebf-f222-4902-bcfa-1d78d1a101ef
குடும்ப நல ஆலோசகர், திருமணப் பதிவாளர் திருமதி சரோஜினி பத்மநாதன். - படம்: சுந்தர நடராஜ்

மணவாழ்க்கை நீடித்து நிலைத்திட கணவன் மனைவி இருவரும் உணர்வுபூர்வமாக ஒன்றுபட்டு வாழ்ந்திடல் அவசியம் என்று குடும்பநல ஆலோசகர் திருமதி சரோஜினி பத்மநாதன் தெரிவித்தார். 

இளம் தம்பதியர் திருமண வாழ்க்கையில் நீடிக்காமல் பிரிவதற்கான காரணங்கள் குறித்துக் கேட்டபோது, சமூக ஊடகங்களின் தாக்கமும் ஒன்று என்றார் அவர்.

“இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் பதிவுகளில் உள்ள புகைப்படங்களைப் பார்த்துவிட்டு தங்கள் மணவாழ்க்கையில் உள்ள எதிர்பார்ப்புகளைக் கூட்டிக்கொள்கிறார்கள்,” என்ற கருத்தை முன்வைத்தார் திருமதி சரோஜினி.

இணையத்தில் வலம்வரும் கதைகளில் உள்ளவர் போல் தங்கள் வாழ்க்கைத்துணை அழகாக இல்லையே, அதிக வருமானம் ஈட்டவில்லையே என்றெல்லாம் ஒருசிலர் குறைபட்டுக்கொள்வதாக அவர் சொன்னார்.  

“இப்படியே சிறு சிறு காரணங்களைக் கூறத் தொடங்கி, பிறகு பிரச்சினைகளைப் பெரிதாக்கி விடுகிறார்கள். அது திருமண முறிவுக்குக் காரணமாகிவிடுகிறது,” என்று விவரித்தார் திருமதி சரோஜினி. 

இணக்கம் காணுதல் 

திருமண வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் இருப்பது வழக்கம்தான். ஆயினும், தீர்வுகாண முடியாத நிலையில் உதவிக்காக ஆலோசகரை அணுகலாம் என்றார் திருமணப் பதிவாளராகவும் உள்ள திருமதி சரோஜினி.

“திருமணமான சில ஆண்டுகளில் மாமனார் மாமியார், நாத்தனார், வேறு உறவுமுறை அல்லது பிள்ளை வளர்ப்பு தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளால் தம்பதியர் விரக்தி அடையலாம். திருமண வாழ்வில் இடர்களைச் சந்திக்கும் அவர்கள், தனித்தனியே ஆலோசனை பெறுவதற்குப் பதிலாக இருவரும் சேர்ந்து ஒரே ஆலோசகரைச் சந்திப்பது சிறந்தது,” என்று கூறினார்.

மணவாழ்வில் விரிசல் ஏற்பட்ட உடனே கணிசமான எண்ணிக்கை இளையர்கள் ஒத்த வயதுடைய தங்கள் நண்பர்களிடம் குடும்பப் பிரச்சினைகளைக் கூறலாம். தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் கொண்டிருக்கலாம். இவ்வாறு தமது அனுபவத்தில் பார்த்திருப்பதாகச் சொன்ன திருமதி சரோஜினி, ஒரு சிலர் தங்கள் தரப்பு உறவினர் அல்லது பெரியவர்களை நாடிச் செல்வதுண்டு என்றார்.

“யார் வேண்டுமானாலும் ஆலோசனை சொல்லலாம். ஆனால், நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களைச் சந்தித்துப் பேசுவது மேலும் சிறந்ததாக அமையும்,” என்றார்.

தட்டிக்கழித்தல் வேண்டாம்

கணவன் மனைவி இருவரும் தங்களுக்கென ‘தம்பதியர் நேரம்‘ என்ற ஒன்றை அமைத்துக்கொள்வது மிக இன்றியமையாதது என்பது திருமதி சரோஜினியின் முக்கிய ஆலோசனை ஆகும். 

“வேலை, சமூக ஊடகம், நண்பர்கள் என வெவ்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி, நேரமில்லை என்று வாழ்க்கைத்துணையைத் தட்டிக்கழிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான குடும்ப வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில் தம்பதியர் தங்களுக்கென நேரம் ஒதுக்குவது சிறந்தது,” என்றார் திருமதி சரோஜினி.  

குடும்பம் வலுபெறுவதிலும் பிளவுபடுவதிலும் உறவினர்கள் முக்கிய இடம்பிடிக்கின்றனர் என்று குறிப்பிட்ட அவர், மாமனார் மாமியார் இருவரும் தங்கள் மகன், தங்கள் மகள் எனச் சிந்திக்காமல் பொதுவாகச் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதரவுத் திட்டங்கள்

மணவாழ்வில் விரிசல் ஏற்பட்டால் குடும்ப ஆலோசனை நிலையங்களை அணுகலாம் என்று சொன்ன திருமதி சரோஜினி, குடும்பங்களுக்காக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அதிக ஆதரவை நல்குவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், இத்தகையை ஆலோசனை சேவைகளை வழங்கும் சமூக அமைப்புகளும் உள்ளன என்று விளக்கினார்.

விவாகரத்தை நோக்கி விரையாமல் தம்பதியர் தங்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார் திருமதி சரோஜினி.

“குறைந்த வருமானமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த இளம் தம்பதிகள், குடும்பநல ஆலோசனை தொடர்பில் தேவையான உதவிகளைப் பெறலாம். அதற்கு அரசாங்க ஆதரவு உண்டு. கட்டணம் செலுத்தாமல் தேவையான ஆலோசனை பெறலாம்,” என்று அவர் விவரித்தார்.

தனியார் அமைப்புகளுடன் இணையம்வழி ஆலோசனை வழங்கும் மனோதத்துவ நிபுணர்களும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

“உடல்வலி என்றால் வலிநிவாரணி ஏதேனும் சாப்பிடும் நாம், மனவலி ஏற்பட்டாலும் அதற்கு சிகிச்சை பெறுவது அவசியம்,” என்பதைக் கோடிட்டுக் காட்டினார் திருமதி சரோஜினி.

“பிரச்சினை ஏற்பட்டால் தீர்வு காண முயலுங்கள். தவிப்பைத் தள்ளிப்போடாதீர்கள்,” என்ற திருமதி சரோஜினி, “திருமணக் கொண்டாட்டத்தை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யும் நீங்கள் அந்தத் திருமணங்களை வாழ்நாள் முழுக்க கொண்டாடுங்கள்,” என்றார்.

வேலை, சமூக ஊடகம், நண்பர்கள் என வெவ்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி, ‘நேரமில்லை’ என்று வாழ்க்கைத்துணையைக் தட்டிக்கழிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான குடும்ப வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில் தம்பதியர் தங்களுக்கென நேரம் ஒதுக்குவது சிறந்தது.
குடும்ப நல ஆலோசகரும் திருமணப் பதிவாளருமான திருமதி சரோஜினி பத்மநாதன்

உதவி வழங்கும் அமைப்புகள்

‘ரீச் கம்யூனிட்டி சர்வீசஸ்’ (Reach Community Services) - contact@reach.org.sg

‘தைய் ஹுவா குவான் மாரல் சாரிட்டிஸ்’ (Thye Hua Kwan Moral Charities) - familyservices@thkmc.org.sg

‘டச் கம்யூனிட்டி சர்வீசஸ்’ (Touch Community Services) - tcs@touch.org.sg

‘டாக் யுவர் ஹார்ட் அவுட்’ (Talk Your Heart Out) - contact@talkyourheartout.com

குறிப்புச் சொற்கள்