இல்லப் பணிப்பெண்களைக் கொண்டாடிய ‘பெருமகிழ்வுலா நாள்’

3 mins read
9bea0605-eca7-4723-8391-5d4a2a81b876
‘வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கான பெருமகிழ்வுலா நாள் 2026’ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) நடைபெற்றது. - படம்: சாவ்பாவ்

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பெருமகிழ்வுலா நாள் 2026’ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையத்தில் களைகட்டியது.

ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ் (எச்ஐஏ) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி, எதிர்வரும் மார்ச் மாதம் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படவுள்ள ‘ஹோப் வில்லேஜ் @ கேபிஆர்சி’ என்ற ஒருங்கிணைந்த சமூக மையத்திற்கு முன்னோட்டமாக அமைந்தது.

நிகழ்ச்சியில் மொத்தமாக 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மொத்தமாக 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். - படம்: சாவ்பாவ்

கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட இல்லப் பணிப்பெண்களும் 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களும் இதில் பங்கேற்றனர். பொழுதுபோக்கு, கேளிக்கை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் முயற்சியில் 305 பேர் ஒரே நேரத்தில் சமோசா சாப்பிட்டு புதிய தேசிய சாதனை படைத்தனர்.

305 பேர் ஒரே நேரத்தில் சமோசா சாப்பிட்டு சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
305 பேர் ஒரே நேரத்தில் சமோசா சாப்பிட்டு சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தனர். - படம்: சாவ்பாவ்

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கான சக பணியாளர் ஆதரவு கட்டமைப்பான ‘கேர் சிஸ்டர்ஸ்’ திட்டமும் நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

மக்கள் நெரிசல்மிக்க பொது இடங்கள், நடைபாதைகளுக்கு மாறாக, இல்லப் பணிப்பெண்களும் வெளிநாட்டு ஊழியர்களும் தங்கள் ஓய்வு நாள்களை நிம்மதியாகக் கழிக்கக்கூடிய பாதுகாப்பான, பிரத்தியேக இடமாக இந்த நிலையம் உருமாறி வருகிறது. இதற்காக ஏற்படுத்தப்பட்டுவரும் புதிய வசதிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

“நீங்கள் இங்குப் பகுதிநேரப் பயனாளர்கள் மட்டுமல்ல. ‘ஹோப் வில்லேஜ்’ குடும்பத்தின் முழுநேர அங்கத்தினர். காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையத்தின் இணை உரிமையாளர்களும் நீங்களே.

“இந்த இடத்தை ஒரு வலுவான, பலதரப்பட்ட சமூகமாக உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்,” என்று எச்ஐஏ அமைப்பின் தலைவர் தவத்திரு எசெக்கியல் டான், நிகழ்ச்சியில் பங்கேற்ற இல்லப் பணிப்பெண்களிடம் கூறினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அல்ஜுனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜு, இத்தகைய சமூக இடங்கள் மனநலத்திற்கு ஆற்றும் பங்கை வலியுறுத்தினார்.

“நம் முதியவர்களையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதற்காக அவர்கள் தங்கள் நாடுகளையும் குடும்பங்களையும் விட்டு இங்கு வருகின்றனர். அவர்களின் மனநலத்துக்கு நாம் ஆதரவளிப்பது அவசியம்,” என்றார் அவர்.

பங்கேற்பாளர்கள் நாள் முழுவதும் கேளிக்கை விழா நடவடிக்கைகள், பங்காளிகள் அமைத்திருந்த உணவுக் கூடங்கள், மேடை நிகழ்ச்சிகள், அதிர்ஷ்டக் குலுக்கல்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் நடைபெற்ற ஸும்பா பயிற்சி.
நிகழ்ச்சியில் நடைபெற்ற ஸும்பா பயிற்சி. - படம்: சாவ்பாவ்

“எங்கள் சகோதரிகளில் சிலருக்கு ஓய்வு நேரங்களில் செல்ல பாதுகாப்பான இடம் இல்லை. பூங்காவில் தங்குவது எப்போதும் பாதுகாப்பாக இராது. இதுபோன்ற ஒரு நிலையம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார் ‘கேர் சிஸ்டர்ஸ்’ அமைப்பின் முதல் உறுப்பினரான திருவாட்டி கேத்தி சுவாரெஸ், 42.

“இலவச ஆங்கில வகுப்புகள், அடிப்படைக் கணினிப் பயிற்சிகள், ஸும்பா போன்ற நடன வகுப்புகளை இங்கு எங்களுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். வெளியில் இவ்வகுப்புகள் செலவுமிக்கவை,” என்று இல்லப் பணிப்பெண் திருவாட்டி எனி விஜயந்தி, 41, சொன்னார்.

வரவிருக்கும் மேம்பாடுகள் உற்சாகம் அளிப்பதாக இல்லப் பணிப்பெண் திருவாட்டி கணபதி சரோஜா, 47, கூறினார்.

“நண்பர்களுடன் இங்கு வர ஆவலாக இருக்கிறேன். நாடு முழுவதும் இதுபோன்ற இடங்கள் அமைக்கப்பட்டால் மேலும் வசதியாக இருக்கும்,” என்றார் அவர்.

தற்போதுள்ள வசதிகள் ஏற்கெனவே பயனுள்ளதாக உள்ளதாகக் கூறிய கட்டுமான ஊழியர் பா.கந்தசாமி, 39, புதிய மேம்பாடுகள் இன்னும் பலருக்குப் பயன் தரும் என்று நம்புவதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்