அன்பால் பலரையும் வாழவைத்த மருத்துவர்

நோயாளிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய மீனாம்பிகை நரசிங்கன்

அன்பால் பலரையும் வாழவைத்த மருத்துவர்

3 mins read
தோன்றின் புகழொடு தோன்றுக என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்
57a1641e-d5a5-410e-8f60-06036992860d
டாக்டர் மீனாம்பிகை துவங்கிய மீனாரா மருந்தகம். - படம்: டாக்டர் இளையநாச்சி நரசிங்கன்

மக்களின் மருத்துவர் என்று பலரால் அன்போடு அழைக்கப்பட்ட 83 வயது டாக்டர் மீனாம்பிகை நரசிங்கன் அமரர் ஆன பின்பும் அவரைப் பற்றிய நினைவுகள் அன்பு உள்ளங்களில் நன்றியுணர்வாய் உயிர் வாழ்கின்றன.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி காலமான டாக்டர் மீனாம்பிகை, கிட்டத்தட்ட 10ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களுக்கு பலன் எதிர்பார்க்காமல் மருத்துவச் சேவையை அர்ப்பணிப்புடன் வழங்கி வந்துள்ளார்.

மருத்துவத்தைத் தொழிலாக மட்டும் பார்க்காமல், நோயாளிகளைத் தமது குடும்ப உறுப்பினர்களாகவே கருதி சிகிச்சை அளிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

டாக்டர் மீனாம்பிகையின் கைராசி, நோயாளிகளிடம் அவர் காட்டிய அன்புகலந்த பொறுமை ஆகியவை சிறந்த மருத்துவர் என்ற பெயரை அவருக்கு ஈட்டித் தந்தன..

இளவயதில் டாக்டர் மீனாம்பிகை நரசிங்கன்.
இளவயதில் டாக்டர் மீனாம்பிகை நரசிங்கன். - படம்: டாக்டர் இளையநாச்சி நரசிங்கன்

அவரது இறுதிச்சடங்கின்போது கனமழை பெய்தபோதிலும் எண்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளும் ஊழியர்களும் அவரது மருந்தகத்திற்கு முன்னால் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

வாழ்நாள் முழுவதும் கற்றலை விரும்பிய அவர், முதிர்ந்த வயதிலும் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் குடும்ப மருத்துவத்தில் பட்டயப் படிப்பை (Graduate Diploma in Family Medicine from NUS) முடித்தார்.

“அவர் தமக்கான உணவு, ஓய்வுநேரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பார்,” என்றார் அவரது கணவர் திரு நரசிங்கன் இளையதம்பி, 83.

நோயாளிகளின் கோபத்தையும் மன உளைச்சலையும் பொறுமையுடன் கையாளவேண்டும் என்று அவர் தமது சக ஊழியர்களுக்கு எப்போதும் அறிவுறுத்தி வந்தார்.

மருந்தகத்திற்குச் செல்லும் முதியவர்கள், நோயாளிகளின் வசதிக்காகவே அவர் ‘மீனாரா’ மருந்தகத்தைத் தமது தந்தையின் பழைய தங்கம் மருந்தகத்திற்கு அருகிலேயே அமைத்திருந்தார்.

மீனாரா மருந்தகத்தைத் திறந்த முதல் நாள்.
மீனாரா மருந்தகத்தைத் திறந்த முதல் நாள். - படம்: டாக்டர் இளையநாச்சி நரசிங்கன்

தாயின் அர்ப்பணிப்பைக் கண்டு வியந்த அவரது மகள், தமது அரசுப் பணியை விடுத்துத் தாயின் மருத்துவப் பணியைத் தொடர முன்வந்தார்.

“அம்மா நோயாளிகளின் உடலுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கவில்லை, அவர்களின் மனத்திற்கும் சேர்த்து சிகிச்சை அளித்தார்,” என்று அவரது 44 வயது மகள் டாக்டர் இளையநாச்சி நரசிங்கன் கூறினார்.

அவரது தந்தை மருந்தாளராகப் பணிபுரிந்து இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் சிங்கப்பூரர்களுக்குச் சேவை செய்ததே, டாக்டர் மீனாம்பிகை மருத்துவராக உருவெடுக்கக் காரணமாக அமைந்தது.

பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதற்காகத் தமது மருந்துகத்திற்கு மேலேயே குடியிருந்து, நள்ளிரவிலும் தேடிவரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார் டாக்டர் மீனாம்பிகை.

“நள்ளிரவுக்குப் பிறகும் யாராவது வீட்டுக் கதவைத் தட்டினால், அவர்களுக்கு ஆலோசனை வழங்கி மருந்து கொடுப்பார்,” என அவரது 46 வயது மகன் திரு இளையதம்பி நரசிங்கன் கூறினார்.

மகன் இளையதம்பியுடன் டாக்டர் மீனாம்பிகை.
மகன் இளையதம்பியுடன் டாக்டர் மீனாம்பிகை. - படம்: டாக்டர் இளையநாச்சி நரசிங்கன்

சீனம், ஹோக்கியன் மொழிகளைக் கற்றுக்கொண்ட அவர், அந்த மொழிகளில் பேசி நோயாளிகளுக்கு உளவியல் ரீதியான நம்பிக்கையை ஊட்டினார்.

மருத்துவத்தை வருமானத்திற்கான கருவியாக மட்டும் பார்க்காமல், மனிதநேயத்துடன் செயல்படவேண்டும் என்பதற்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

“மருத்துவர் மீனாம்பிகை சம்பளத்திற்காக மட்டும் பணிபுரியவில்லை,” என்று 1988லிருந்து அவரிடம் சிகிச்சை பெற்று வந்த 66 வயது இராஜசிங் தமிழ்செல்வன் கூறினார்.

ஒரு நோயாளியின் உடல்நிலை மட்டுமல்லாது, அவர்களின் குடும்பம், முன்னேற்றம் குறித்தும் அக்கறையுடன் திருவாட்டி மீனாம்பிகை விசாரிப்பார். 

மருந்தக உதவியாளர் ஜூலியானாவுடன் டாக்டர் மீனாம்பிகை, டாக்டர் இளயநாச்சி.
மருந்தக உதவியாளர் ஜூலியானாவுடன் டாக்டர் மீனாம்பிகை, டாக்டர் இளயநாச்சி. - படம்: டாக்டர் இளையநாச்சி நரசிங்கன்

நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே நல்ல பிணைப்பை உருவாக்குவதே நோயைக் குணப்படுத்துவதற்கான முதல் படி என்பதை தமது செயல்கள் மூலம் உணர்த்தியவர் டாக்டர் மீனாம்பிகை என்றார் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேல் அவருக்கு மருந்தக உதவியாளராகப் பணிபுரிந்த 35 வயது குமாரி ஜூலியானா.

மருத்துவத் துறையில் அனுபவமே இல்லாத அவருக்கு, ஒரு குடும்ப மருத்துவரைப் போல நோயாளிகளுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதை டாக்டர் மீனாம்பிகை பொறுமையாகக் கற்றுக்கொடுத்தார்.

குறிப்புச் சொற்கள்