தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதல் மனைவியுடன் காணொளி அழைப்பில் தீபாவளிக் கொண்டாட்டம்

2 mins read
bfd3d454-e0e5-4708-9e04-d4e64765b43f
13 ஆண்டுகள் காதலித்து இவ்வாண்டு திருமணம் செய்து தலை தீபாவளி கொண்டாடும் இணையர். - படம்: முருகானந்தம்

பதின்மூன்று ஆண்டுகள் காத்திருந்து காதலியைக் கரம்பிடித்த சில நாள்களில் பணிக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டதால் காணொளி அழைப்பில் தலை தீபாவளியைக் கொண்டாடுகிறார் வெளிநாட்டு ஊழியர் முருகானந்தம், 30.

தமிழகத்தின் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் கடந்த நான்காண்டுகளாகச் சிங்கப்பூரில் தூய்மைப் பணித் துறையில் பணியாற்றுகிறார்.

ஒன்பதாம் வகுப்பிலிருந்து காதலித்து, கடந்த ஜூன் மாதம் காதல் மனைவி கெளசல்யாவைக் கரம்பிடித்தார்.

ஒன்பதே நாள்கள் விடுமுறையில் ஊருக்குச் சென்று திருமணம் முடித்த கையுடன் சிங்கப்பூருக்குத் திரும்பிவிட்டார்.

“குடும்பப் பொறுப்புகள் அதிகம் உள்ளன. அதிக விடுப்பு எடுப்பது, அடிக்கடி ஊருக்குச் செல்வது எல்லாம் செலவை அதிகரித்து சிரமமளிக்கும். அதனால் தீபாவளிக்கு ஊருக்குச் செல்லவில்லை,” என வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார் முருகன்.

தலை தீபாவளிக்குக்கூட வர இயலாமல் பணம் சேர்த்து என்ன பயன் என்ற வருத்தம் அவரது காதல் மனைவிக்கு.

“பொறுப்பின் அழுத்தம் காரணமாகவே கடல் கடந்து வந்து பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்பதைச் சொல்லிப் புரிய வைப்பதைத் தவிர வேறு வழியில்லை,” என்ற முருகன், பெற்றோருக்கும் தாம் வரமுடியாமல் போனது குறித்து பெரும் வருத்தம் என்று சொன்னார்.

தலை தீபாவளியைப் பட்டாசு வெடித்து, புத்தாடையுடுத்தி, இனிப்புகள், பலகாரங்களுடன், நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ கொண்டாட விருப்பம் என்றாலும் சூழல் ஒத்துழைக்கவில்லை என்பதால் அனைவரையும்விட முருகனுக்கே அதீக வருத்தம்.

குடும்பத்துடன் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் மனைவி, பெற்றோருக்குப் புத்தாடைகள் வாங்கப் பணம் அனுப்பியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், “குடும்பத்தினரை காணொளி அழைப்பில் பார்த்து மகிழ்வேன்,” என்றும் சொன்னார்.

திருமணத்திபோது வாங்கிய புத்தாடைகளில் ஒன்றை உடுத்தி இங்குள்ள நண்பர்கள், உறவினர்களுடன் லிட்டில் இந்தியா பகுதியைச் சுற்றிப் பார்ப்பது, உணவுண்பது எனத் தீபாவளியைக் கொண்டாடுவதும் மகிழ்ச்சிதான் என்றும் தெரிவித்தார் முருகன்.

குறிப்புச் சொற்கள்