இந்தியத் தூதரகத்தின் செயற்பாட்டில் வெளிநாட்டு ஊழியர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் உயரிய இடம் வகிக்கும்; அவற்றிற்கு அசைக்க முடியாத முக்கியத்துவம் அளித்திட கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறினார் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஷில்பாக் அம்புலே.
இந்தியா-சிங்கப்பூர் அதன் 60வது ஆண்டு அரசதந்திர உறவைக் கொண்டாடும் வேளையில், திரு அம்புலே தமிழ் முரசுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், இருநாடுகளுக்கு இடையேயான பங்காளித்துவம், வெளிநாடுவாழ் இந்திய சமூகத்திற்கான ஆதரவு உள்ளிட்ட பல விஷயங்கள்குறித்து பகிர்ந்துகொண்டார்.
அவ்வகையில், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் நலனை மேம்படுத்துவதற்கு இந்தியத் தூதரகம் உறுதியான கடப்பாடு கொண்டுள்ளதாகச் சொன்னார் திரு அம்புலே.
“உறவுகளைப் பிரிந்து அயல்நாட்டில் இருந்தாலும், தாங்கள் ஈட்டும் ஒவ்வொரு வெள்ளியையும் சேமித்து தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பி, தேசத்தைக் கட்டியெழுப்பும் மக்கள் இவர்கள்.
‘‘இவர்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்கள் எங்கள் அட்டவணையில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன,” என்றார் திரு அம்புலே.
தற்போது அவர்களைச் சென்றடைய பரவலான நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபட்டு வருவதாகக் கூறிய இந்தியத் தூதர், அதுகுறித்த விவரங்களையும் சொன்னார்.
‘‘ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் இருக்கின்றனர். எனவே அவர்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் தூதரகச் சேவைகளைச் சில சமயங்களில் அவர்கள் வசிப்பிடத்திற்கே கொண்டு செல்கிறோம்.
‘‘இணைய மோசடிக்கு அவர்கள் ஆளாகாமல் இருப்பதைத் தவிர்க்கும் வகையில் நிதி, மின்னிலக்க எழுத்தறிவு சார்ந்த நிகழ்ச்சிகளை அவர்களுக்காக ஒருங்கிணைத்து அது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்,” என்றார் திரு அம்புலே.
தொடர்புடைய செய்திகள்
அயல்நாட்டில் பணிபுரியச் செல்லும் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெறுவதன் தொடர்பில் மோசடிக்கு உள்ளாவது குறித்து அக்கறை தெரிவித்த திரு அம்புலே, மோசடிகளில் சிக்காமல் ஊழியர்கள் கவனமாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
மேலும், வெளிநாட்டில் பணிபுரியச் செல்லும் இந்திய நாட்டவரின் பாதுகாப்பிற்காக நாட்டின் ‘பிரவாசி பாரதிய பீமா யோஜனா’ காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசால் 2017ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருவதாகச் சுட்டிய திரு அம்புலே, ‘‘ஊழியர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்ய ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்,’’ என்றும் நினைவூட்டினார்.
நேர்காணலின்போது இந்[Ϟ]தியா-சிங்கப்பூர் நல்லுறவு அடைந்துவரும் புதிய உச்சம் குறித்தும் கருத்துரைத்தார் இந்தியத் தூதர் அம்புலே.
‘‘பாரம்பரியமாக இருநாடுகளும் ஒத்துழைப்பு நல்கிய துறைகளைக் கடந்து, தற்போது மாறிவரும் புவிசார் சூழல்களுக்கேற்ப, விண்வெளி முதல் பேராழி வரையிலான பல்வேறு துறைகளில் வரும் ஆண்டுகளில் சிங்கப்பூர்-இந்தியா பங்காளித்துவம் தொடரவுள்ளது மிகுந்த பலனை நல்கும்,’’ என்றும் நம்பிக்கை தெரிவித்தார் அவர்.
‘‘பொருளியல் சார்ந்த அரசதந்திர உறவில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துவருகிறது.
‘‘கடந்த 18 மாதங்களின் இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்கள் சிங்கப்பூருக்கு வருகையளித்து அவர்கள் மாநிலத்தின் பலம், தனித்துவமான வாய்ப்பு, கட்டமைப்புகள்குறித்து சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
‘‘அவ்வகையில் அணுவாற்றல், மேம்பட்ட உற்பத்தி, சுகாதாரம், மின்னிலக்கம், பகுதிமின்கடத்தி என எண்ணற்ற துறைகளில் ஒருங்கிணைந்த இலக்குகளுடன் இருநாடுகளும் பயணஞ்செய்யத் தொடங்கியுள்ளன.
‘‘இந்தத் துடிப்புமிக்க நடவடிக்கைகளால் சிங்கப்பூர் இந்தியாவிற்கிடையே விரிவடைந்து வரும் முதலீடுகள், உத்திபூர்வ பங்காளித்துவங்கள் நிலையானவை; அவை மிகவும் வரவேற்கத்தக்கவை,’’ என்று மேலும் கூறினார் திரு அம்புலே.
வெளிநாடு வாழ் இந்திய சமூகத்துடன் பண்டிகை உள்ளிட்ட விழாக்காலங்களில் தூதரகம் இணைவது குறித்தும் பேசிய திரு அம்புலே, வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒளியின் திருநாளான தீபாவளி வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டார்.